

அரண்மனையிலிருந்து குதிரையில் வந்த வீரன், திருச்சேந்தியின் அருகில் வந்ததும் குதிரையை விட்டு இறங்கிப் பணிவாக வணங்கி நின்றான். அவனை அலட்சியப் பார்வையோடு எதிர்கொண்ட திருச்சேந்தி, என்ன விஷயம் என்கிற கேள்வியை எழுப்புகிற விதமாக தன் புருவங்களைத் தூக்கி இறக்கிப் பார்வையாலேயே பணித்தார்.
உடனே அந்த வீரனும் தன் இடையில் செருகி வைத்திருந்த ஓலைச்சுவடியைப் பணிவாக எடுத்து நீட்டினான். அவனிடமிருந்த ஓலைச்சுவடியைத் தனது இடது கையால் வாங்கிய திருச்சேந்தி ஓலைச்சுவடியில் உள்ள எழுத்துகள் மீது பார்வையை ஓடவிட்டார். அதில்,அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. உடனே புறப்பட்டு வரவும். மன்னரின் ஆணைப்படி, என முதலமைச்சரின் கையொப்பமும் முத்திரையும் இருந்தன.
அடுத்த நொடியே குதிரையின் கடிவாளத்தைத் தளர்த்தி பின்னர் கால்களால் குதிரையின் இருபுறமும் தட்டினார். அது குதிரையை முன்னோக்கி விரைவாகச் செலுத்த கொடுக்கப்படும் ஒரு சமிஞ்சை ஆகும். அதனைப் புரிந்துகொண்ட குதிரையும் புழுதியைக் கிளப்பிவிட்டுப் புயலெனப் பாய்ந்து சென்றது. என்ன விஷயமாக மன்னர் தன்னை அழைத்திருக்கக் கூடும் என்கிற சிந்தனை திருச்சேந்திக்கு குதிரையை விட முன்னோக்கிப் பாய்ந்துசென்றது.
அரண்மனையை அடைவதற்குள் இரவுப் பொழுது தனது இருள் போர்வையை பூமி மீது போர்த்தத் தொடங்கிவிட்டிருந்தது. ஆங்காங்கே சில தீவட்டிகள் அந்த இருளை அகற்ற முயன்று தோற்றுக்கொண்டிருந்தன. அரண்மனையைச் சுற்றிலும் தேவைக்கு அதிகமான தீவட்டிகள் ஏற்றப்பட்டு அந்த இருளுக்கு சவால்விட்டுக்கொண்டிருந்தன.
திருச்சேந்தியின் குதிரை நீண்ட தூரம் ஓடிவந்ததால் களைத்திருந்தாலும் அதன் வேகத்தில் குறை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அரண்மனை நுழைவு வாசல் அருகே வந்ததும் அதன் வேகத்தை மட்டுப்படுத்தினார் திருச்சேந்தி. அங்கு காவலுக்கு நின்ற வீரர்களுக்கு அவரது வருகை தெரிவிக்கப்பட்டிருந்ததால், அரண்மனை நுழைவு வாசல் உடனடியாக அவருக்காகத் திறந்துவிடப்பட்டது.
திருச்சேந்தி ஆலோசனை மண்டபத்தை அடைந்ததும் மன்னன் சங்கடசேனனைத் தொழுது வணங்கினார். அவருக்கு முன்பாகவே அங்கு வந்து வீற்றிருந்த நாற்பத்து மூன்று பாளையக்காரர்களுக்கும் முதலமைச்சர் வளவனாருக்கும் தன் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டார். திருச்சேந்திக்காகவே அங்கு அனைவரும் காத்திருந்தது போல் அவருக்குத் தோன்றியது. முதலமைச்சரும் சம்பிரதாயமாகப் பேசி ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரது கருத்தையும் வெளிப்படையாக சொல்லலாம் என்று அனுமதி அளித்தார்.
திருச்சேந்தி மன்னரிடம் நெருங்கி, ‘மாமன்னா, இந்த அவசரஆலோசனைக் கூட்டம் எதற்காக என்பதை நானும் அறியலாமா?’ என்றார். மன்னன் சங்கடசேனனும், ‘உமக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை. எல்லாம் நீர் அறிந்ததுதான். நமது பகைவர்கள் பலம் நாளுக்கு நாள் கூடி வருவதோடு நமக்கு பெரும் சவாலாகவும் உள்ளது.’
என்றார் வெறுப்பாக. ‘இந்தப் பரந்த கண்டத்தின் தென்திசையில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் கொடையின் கீழ் ஆட்சி செய்யும் கொற்றவனாகத் தாங்கள் அரியணையில் வீற்றிருக்கும்போது, வரக்கூடிய பகை எல்லாம் நெருப்பை அணைக்க நினைக்கும் பனிப் படலம் போல காணாமல் போகக் கூடியதுதானே வேந்தே?’ என்றார் திருச்சேந்தி.
திருச்சேந்தியின் அலங்கார வார்த்தைகளுக்கு மயங்காத மன்னன், ‘நமது அகந்தைச் செருக்கால், எதிரியின் பலத்தைக் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாதல்லவா?’ என்று கேள்வியுடன் நிறுத்தினார். மன்னரின் கூற்றை அங்குகூடியிருந்தோரும் பலமாக ஆமோதித்தனர். நாம் தந்திரமாகத்தான் நமது எதிரியை வென்று ஒழிக்க வேண்டும். இதில் நாம் சிறிதளவு கோட்டைவிட்டாலும் அது நமக்கு அழிவையும் மாறாத பழியைத் தேடிக் கொடுத்துவிடும்’ என்றார் முதலமைச்சர் வளவனார்.
முதலமைச்சர் வளவனார் கூறியதைக் கேட்ட திருச்சேந்திக்கு ஆச்சரியத்துடன் கொஞ்சம் கோபமும் வந்தது. ‘நமது பகைவர்கள் என்றால், அக்கம்பக்கத்து தேசத்தைஆளும் மணிமுடிதரித்த மேன்மக்களாக இருக்க வேண்டும். ஆனால், உழைக்க மறந்து, பஞ்சம், பசி, பட்டினியால்தானும் கெட்டு, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு குள்ளநரிக் கூட்டத்தை நினைத்தா சிங்கக்கூட்டம் பதறுவது?’ என்றுதன் ஆதங்கத்தைக் கொட்டினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘திருச்சேந்தி, நம்மை எதிர்க்கத் துணிந்தது வெறும் குள்ளநரிக் கூட்டமல்ல.’ என்றார். ‘அப்படி என்றால் நம்மை எதிர்க்கத் துணிந்தவர்கள் யார்?’ என்றார் திருச்சேந்தி. ‘சொல்கிறேன் கேளுங்கள்’ என ஆரம்பித்தார் முதலமைச்சர்.
(தொடரும்)