

உலக அமைதி காப்பதில் சர்வதேச அரங்கில் கனடா பெரும் பங்காற்றி வருகிறது என்று கடந்த வாரம் பார்த்தோம். கனடா நாட்டின் புவியியல் இருப்பும் இதில் முக்கியத்துவம் சேர்க்கிறது. கிழக்கே அட்லாண்டிக், வடக்கே ஆர்ட்டிக், மேற்கே பசிபிக் என்று கடல்களால் பெரும் பயன் பெறுகிற, பயன் தருகிற நாடாக உள்ளது.
கனடாவில் மொத்தம் ஏழு ‘பிசியோ புவியியல் மண்டலங்கள்’ உள்ளன. கனடியன் ஷீல்ட், உள்நாட்டு சமவெளி, அப்லாச்சியன் மண்டலம், மேற்கு கார்டிலெரா, ஹட்சன் வளைகுடா நிலம், ஆர்டிக் ஆர்ச்பெலகோ என்று ஒவ்வொரு பகுதியும் மாறுபட்ட புவியியல் தன்மைகளைக் கொண்டவை.
போரியல் காடுகள், நாடு முழுதும் பரவி உள்ளது. வட ஆர்ட்டிக் மண்டலத்தில் பனி சூழ்ந்துள்ளது. தென்மேற்கு பகுதியில் விவசாயம் செழித்துக் காணப்படுகிறது. இங்குள்ள செயிண்ட் லாரன்ஸ் ஏரிக்கு கிரேட் ஏரியில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. கனடாவில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இவற்றில் 500க்கு மேற்பட்ட ஏரிகள் – 100 ச.கி.மீ மேலான பரப்பளவு கொண்டவை. மிக முக்கியமாய் இந்த ஏரிகளில் இருந்து தூய்மையான தண்ணீர் கிட்டுகிறது.
மீகர் மாசிஃப் எரிமலை, கரிபால்டி மலை, கேலே மலை, எடிசா எரிமலை என்று பல மலைகள் / எரிமலைகள் இருக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வகை தட்பவெப்ப நிலைகள் இருக்கலாம். உறைய வைக்கும் குளிரில் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் பனி மூடி இருக்கும். சில இடங்களில் மிதமான வெப்பம். வேறு சில இடங்களில் கடும் வெயில் என்று பலவும் உண்டு. உலோகம் உருக்குதல், கரி மின்சாரத் தயாரிப்பு, வண்டிகளின் புகை ஆகிய காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் அமில மழையும் பெய்வதுண்டு.
சுமார் 3 லட்சம் சதுர கி.மீ. அளவுக்குக் காடுகள் உள்ளன. இவற்றில் பல்வேறுஅரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனாலும் சுமார் 800 வகை உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாய்சொல்லப்படுகிறது. என்ன செய்வது? எந்தநாடாக இருந்தாலும், மனிதர்கள், மனிதர்களாகத்தானே நடந்து கொள்கின்றனர்!
இந்த வாரக் கேள்வி: உலகில் உள்ள தீவு நாடுகள் எத்தனை? யாவை?
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com