

எல்லோரும் ஒரே மாதிரித்தான் முடிவுசெய்கிறோமா? என்று வினவினாள் மணிமேகலை. இல்லை. அவரவர் இயல்பிற்கேற்ப அவரவர் முடிவுசெய்கின்றனர் என்றார் எழில். புரியவில்லை என்றாள் கயல்விழி.
கல்லூரி முடிந்ததும் செல்வி தனது ஊரிலேயே சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க முடிவுசெய்தாள். அவர் பெற்றோர் தொடங்கி பலரும் அவ்வாறு செய்யவேண்டாம் என அறிவுரை கூறினர். செல்வி அவற்றைக் கேட்டுக்கொண்டாள். ஆனால், வெவ்வேறு அளவுகளில் துணிப்பைகளைத் தைக்கும் தொழிலைத் தொடங்கினாள். விடாமுயற்சியால் இரண்டே ஆண்டுகளில் ஆதாயம் ஈட்டினாள். அப்பொழுது அவளது முடிவை பெற்றோர் உட்பட பலரும் பாராட்டினர் என்றார் எழில். மேலும், செல்வியின் எந்த இயல்பு அவரது முடிவை வெற்றியாக மாற்றியது? என வினவினார்.
மனதில் உறுதி வேண்டும்: தனது முடிவில் விடாப்பிடியாக நின்ற இயல்பு என்றாள் மணிமேகலை. ஆம் என்று கூறி புன்னகைத்த எழில், செல்வி தனது மனத்தில் தோன்றிய சிறுபொறியை தனது முடிவாய்க் கருதினார். அதனைச் செயல்படுத்துவதிலேயே கவனமாக இருந்தார். மனவுறுதி உடையோரே இவ்வாறு முடிவுசெய்து செயல்படுவர் என்று விளக்கினார்.
எங்களது ஊரில் ஒருவர் பெட்டிக்கடை வைத்தார். சில மாதங்களிலேயே, போதிய ஆதாயம் கிடைக்கவில்லை என்று அதனை மூடினார். ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஒரே ஆண்டில் அவ்வேலையில் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை என்று விலகினார். கொஞ்ச காலம் பேருந்தில் ஓட்டுநராக வேலை செய்தார்.
இப்பொழுது விவசாயம் செய்யப்போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ஒன்றிலிருந்து இனொன்றுக்குத் தாவிக் கொண்டே இருப்பதென முடிவெடுப்பது அவரது இயல்பா? என்று கண்மணி வினவினாள். ஆம். இவ்வாறு அடிக்கடி முடிவை மாற்றிக் கொண்டிருந்தால் எதிர்நோக்கும் விளைவு கிடைக்காமலேயே போய்விடும் என்றார் எழில்.
யோசிக்காமல் செயல்படலாமா? - நமது பள்ளியில் கடந்த வாரம் நிகழ்ந்த பேச்சுப்போட்டிகான அறிவிப்பைப் பார்த்தேன். உடனே நூலகத்திற்குச் சென்று தேவையான குறிப்புகளைத் தேடித் திரட்டினேன். அவற்றைக் கொண்டு உரையை எழுதி மனப்பாடம் செய்தேன். வீட்டில் எல்லோரிடமும் பேசிக்காட்டினேன். சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினர். போட்டியில் கலந்துகொண்டால் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது எனப் போட்டிக்கு ஐந்து நாள்களுக்கு முன்னரே உணர்ந்தேன்.
ஆனாலும் கடைசிநாள் வரை பெயர்கொடுக்கவில்லை. தமிழாசிரியர் தூண்டியதால் கடைசிநேரத்தில் போட்டியில் பங்கேற்று வென்றேன் என்றாள் தங்கம். இது கடைசி நொடியில் முடிவுசெய்தல். இதற்கு அடிமனத்திலிருக்கும் அச்சம் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் என்றார் எழில்.
சிலர் தங்களுக்கு அச்சமேஇல்லை எனக் காட்டிக்கொள்ள சிறிதும்சிந்திக்காமல் நொடிப்பொழுதில் முடிவுசெய்து செயல்படுவர் என்றார். சாலையில் வண்டியோட்டும் பொழுது ‘டக்’கெனத் திரும்புதல் போன்றா? என்று கேட்டான் சாமுவேல். ஆம். அதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்றார் எழில்.
எங்கள் அம்மா எதனையும் முடிவுசெய்யும் முன்னால் அதனைப் பற்றி எல்லாக் கோணங்களிலும் அலசுவாங்க. எங்களிடம் கலந்து பேசுவாங்க. எந்தத் தவறும் ஏற்படாதவகையில் திட்டம் தீட்டிச் செயலில் இறங்குவாங்க. விளைவு அவர் எதிர்பார்த்ததைப் போலவே பெரும்பாலும் இருக்கும் என்றான் அருளினியன். குறிபார்த்து அம்பை எய்வது மாதிரியா? என்றாள் மதி. ஆம் என்றார் எழில்.
முடிவுசெய்தலில் உள்ள இந்த ஐந்து வகையான இயல்புகளில் சிறந்தது எது? என்று வினவினாள் அருட்செல்வி. அலசி ஆராய்ந்து முடிவுசெய்தல், செய்தமுடிவை விடாமுயற்சியோடு செயலாக்குதல் ஆகியன சிறந்த இயல்புகள் என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com