பங்குச்சந்தையில் புத்திசாலித்தனமாக முதலீடு எப்படி?

பங்குச்சந்தையில் புத்திசாலித்தனமாக முதலீடு எப்படி?
Updated on
2 min read

உலகின் மிகப் பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளராகக் கருதப்படுபவர் வாரன் பஃபெட். அவர் 11 வயதிலே முதல் பங்குச்சந்தை முதலீட்டை ஆரம்பித்தார். பள்ளிக்கூடம் செல்லும் வயதில் முதலீடு செய்ததையே மிகவும் தாமதாக தொடங்கிய‌தாக சொல்கிறார். அதன்பிறகு பணத்தை தேடி அவர் ஓடவில்லை. பணம் அவரைத் தேடி ஓடி வந்தது. எனவே முதலீடு செய்வதற்கு வ‌யது எப்போதும் தடை கிடையாது.

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், அதில் அபாயம் இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அந்த அபாயத்தை வெற்றிகரமாகக் கடக்க விபரம் தெரிந்த பங்குச்சந்தை நிபுணர்களின் துணையை நாட வேண்டும்.

குறுகிய காலத்தில் தேவைப்படாத பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் எவ்வளவு நஷ்டத்தை நம்மால் தாங்க முடியும் என்பதை யோசித்துவிட்டு முதலீடு செய்வது நல்லது. ஏனென்றால் ஒரே நாளில் முதலீடு செய்த பணம் இருமடங்காகவும் மாறும். ஒரே நிமிடத்தில் பூஜ்ஜியமாகவும் மாறும். ஆனால் நீண்ட கால முதலீட்டில், பங்குச்சந்தை சராசரியாகப் பணவீக்கத்தை விஞ்சும் வருமானத்தை வழங்கியுள்ளது.

டீமேட் கணக்கு அவசியம்: பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு உங்களுக்கான தனி டீமேட் கணக்கு அவசியம். அதனை தொடங்குவதற்கு ஆதார் அட்டை, பான் அட்டை, காசோலை, ஆன்லைன் வசதியுடன் வங்கிக்கணக்கு வைத்திருக்க வேண்டும். டிமேட் கணக்கை வழங்குவதற்கு நூற்றுக்கணக்கான பங்குச்சந்தை முகவர்கள் இருக்கின்றனர்.

ஜியோஜித், கோடக், ஜேம், அனுஷ் போன்ற பிரபலமான முகவர்கள் மூலம் கணக்கு ஆரம்பிக்கலாம். இதனை ஆரம்பிப்பதற்கு முன்னர் இணையத்தில் இருக்கும் பல்வேறு ஸ்டாக் புரோக்கர்களை ஒப்பிட்டு, ஆராய்ந்து தேர்வு செய்யலாம்.

பகுப்பாய்வு முக்கியம்: பங்குச்சந்தையில் வெற்றிகரமாக முதலீடு செய்வதற்கு பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பற்றிய‌ பகுப்பாய்வு முக்கியம். வாங்கும் பங்கின் உண்மையான மதிப்பு என்ன? ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல‌ எதிர்காலம் இருக்கிறதா? என்பதை முதலில் ஆராய வேண்டும்.

முதலீடு செய்யப்படும் பங்குகளை பற்றிய தொடர்ச்சியான ஆராய்ச்சி லாபம் ஈட்டும் திறனையும் அதிகரிக்கும். நிபுணர்களின் ஆலோசனைகள், வணிகம் தொடர்பான‌ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைகள் வாயிலாகப் பங்குச்சந்தை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

முதலீடு எப்போதும் வாடிக்கையாளரின் இலக்கிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இலக்கிற்கு ஏற்ற பங்குகளை, பிற முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். எவ்வளவு நிதியை முதலீடு செய்வது, அந்த நிதி எப்போது திரும்ப கிடைக்க‌ வேண்டும், லாபம் எவ்வளவு வரும், இழப்பு ஏற்பட்டால் என்ன செய்யலாம் உள்ளிட்டவற்றை முதலீட்டுக்கு முன்பே திட்டமிட வேண்டும்.

டிரெண்டில் கவனம் தேவை: பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்ட பங்குகள், பத்திரங்களின் மதிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதன் அன்றாட நடப்புகளை கவனிப்பதன் மூலம் சந்தையின் மதிப்பு செல்லும் திசையை (டிரெண்ட்) புரிந்துகொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து உயரும்போது, உடனே போட்டிப்போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

திடீரென அதன் மதிப்பு வீழ்ச்சி அடையும்போது கடும் நஷ்டத்தை அடைகின்றன‌ர். முதலீடு செய்த உடன் பங்கின் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர் கண்காணிப்பு முதலீடுகளின் செயல்திறனை புரிந்துகொள்ளவும், இழப்புகளை குறைக்கவும் பயன்படும். சிறந்த முதலீட்டை அடையாளம் காணவும் உதவும்.

(தொடரும்)

- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in