

டாட்டூ போடுவதால் பிரச்சினைகள் எதுவும் வருமா என்ற கேள்விக்கான பதிலை தொடர்வோம். வண்ண வண்ண டாட்டூக்கள் என்பது இன்றைய மில்லேனியப் பிள்ளைகளின் புதிய ஃபேஷனாக இருந்தாலும், உண்மையில் இது புது ட்ரெண்ட் எல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதுடன், மனிதர்கள் காட்டில் வாழ்ந்த காலத்திலேயே விலங்குகளை அடையாளம் காண பச்சை குத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டனர் என்கிறது வரலாறு. அந்தப் பழக்கம் மனிதன் வளர்ச்சி அடைந்த பின்னும் எகிப்திய, சீன, இந்திய, ரோமானிய, சமோவா என உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நாகரிகங்களிலும் தொடர்ந்ததுடன் சில இடங்களில் பச்சைக் குத்துதல் என்பது ஒரு சடங்காகவே கடைபிடிக்கப்படுகிறது.
நமது நாட்டில் போர்களில், போட்டிகளில் வெற்றியடைந்ததைக் குறிப்பிடும் வகையில் ஆண்கள், மார்பிலும், தோள்பட்டையிலும் பச்சைக் குத்திக் கொண்டனர். பெண்கள் கணவர் பெயரை சொல்லமாட்டார்கள் என்பதால், திருமணமானால் கைகளில் கணவர் பெயரை பச்சைக் குத்தியதும் நிகழ்ந்துள்ளது.
அதேபோல, தங்கள் குலம், இனம், கடவுள் குறித்த இலச்சினைகளை பச்சை குத்திக் கொள்வது, பொன் நகைகளுக்குப் பதிலாக உடல் ஓவியமாக வரைந்து பச்சை குத்தியது என பல காரணங்களுக்காகவும் பச்சை குத்திக் கொண்டது தான் இன்று ஃபேஷனாக உலகெங்கும் உருவெடுத்துள்ளது.
நமது நாட்டில் ஆரம்ப காலத்தில் மஞ்சள் பொடி, அகத்திக்கீரை ஆகியவற்றை தீயிலிட்டு எரித்து, அந்தக் கரியில் நீரைச் சேர்த்து மையாக்கி, அதைக் கூர்மையான சுடப்பட்ட ஊசி அல்லது கத்தியின் உதவியுடன் பச்சை குத்திக் கொண்டனர். மார்பு, கை, கால், முன்னங்கை, புஜத்தில் இவ்வாறு செய்து வந்தனர். பச்சை குத்துவதைத் தொழிலாக மேற்கொண்ட குரவர் என்றொரு இனமே இருந்துள்ளது என்பதும் தெரிய வருகிறது.
ஆனால், அதுவே ஒரு தொழிலாக, உலகெங்கும் உள்ள இளைஞர்களின் முக்கியத் தேவையாக உருவெடுத்தபோது, அதை இன்னும் முழுமையாகவும் துரிதமாகவும் செய்ய உதவும் எலக்ட்ரிக் டாட்டூ மெஷின்கள், ஊசிகள், அவற்றுடன் பச்சைகுத்துவதற்கென வண்ணமயமான நிறமிகள்ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. இதில் பச்சை குத்தும் இடத்தில் நிறத்தைக் கொடுக்கும் இயற்கை மை இப்போது செயற்கை இரசாயனமாக மாறியிருப்பதால் அதைப்பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
(கேளுங்கள் சொல்லப்படும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com