இவரை தெரியுமா? - 2: மாவீரன் தேர்ந்தெடுத்த பாதை

இவரை தெரியுமா? - 2: மாவீரன் தேர்ந்தெடுத்த பாதை
Updated on
2 min read

தெமுஜின் நன்றாகக் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தான். அவனக்கென்ன வீடா, நாடா? சொந்தம் கொண்டாட என்ன இருக்கிறது. மங்கோலியாவின் பரந்து விரிந்த புல்வெளி தரையில் பத்தடி நிலத்தில் அவன் கூடாரம் அடங்கிவிடும். குதிரைகளின் குளம்பொலிச் சத்தம் தரை அதிர்ந்து போகும்படி நடுங்கியது. தெமுஜினின் மனைவி விழித்துக் கொண்டாள். கூடாரத் திரையை ஓரமாக விலக்கிப் பார்த்து, அலறிக் கொண்டே தெமுஜினை எழுப்பினாள்.

மேர்கித் (Merkid) இனத்தைச் சார்ந்த முந்நூறு வீரர்கள் குதிரையின் லகானை உடைத்துக் கொண்டு தெமுஜின் கூடாரத்தை நோக்கி விரைந்து வந்தார்கள். 18 ஆண்டுகளுக்கு முன்பு தெமுஜினின் தந்தை எசுகெய், மேர்கித் இனத்தைச் சார்ந்த சிலேதுவின் மனைவி ஓவலுனை கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்தார். இப்போது தெமுஜினுக்கு மனைவி இருப்பதால், அதனைப் பழிதீர்க்கும் படலம் இது.

நதி காட்டிய மக்கள்: தன் மனைவி போர்டேவை காக்கும்படி தெமுஜின் கோதாவில் குதித்தான். அவன் இனத்தவர்களும் உதவி செய்ய முயன்றனர். ஆனால், அவர்களிடம் போதுமான குதிரைகள் இல்லை. இறுதியில் போர்டேவை மேர்கித் இனத்தவர்கள் கடத்திச் சென்றனர். செய்வதறியாது தெமுஜினும் அவன் மக்களும் தஞ்சம் தேடி எங்கெங்கோ ஓடினார்கள்.

மரங்களே இல்லாத மங்கோலியாவின் புல்வெளி பிரதேசத்தில் அவர்கள் ஒளிவதற்கு ஏற்ற இடமில்லை. தெமுஜினைத் தேடி மேர்கித் மக்களும் நாட்கணக்காக அலைந்து, பயனின்றி திரும்பினார்கள். அப்போது தெமுஜினுக்கு 17 வயது. புர்கான் கல்தூன் எனப்படும் புனித மலையில் ஏறி, தன்னைக் காப்பாற்றியதற்காக இறைவனுக்கு பாலூற்றி நன்றி செலுத்தினான்.

அந்த மலையிலிருந்து மூன்று நதிகள் பெருக்கெடுத்து ஓடின. தன் வாழ்க்கையின் அதிமுக்கியமான முடிவெடுக்கும் தருவாயில் தெமுஜின் இருந்தான். தென்கிழக்காக ஓடும் ஒரு நதியைப் பின்தொடர்ந்தால், அவன் கூடாரம் அமைந்திருந்த அதே இடத்திற்கு மீண்டும் திரும்பலாம். ஆனால், அதே பகுதியில் தன்னந்தனியாக இருப்பது, இனி எப்போதும் பாதுகாப்பாக இருக்காது.

வடகிழக்காக ஓடும் ஆனன் நதியைப் பின்தொடர்ந்தால், தெமுஜின் பிறந்து வளர்ந்த காட்டுப் பகுதிக்கு மீண்டும் திரும்பலாம். ஆனால், இனி வாழ்நாள் முழுதும் பறவைகளையும் எலிகளையும் வேட்டையாடி உயிர்வாழ வேண்டும். அத்தகைய கோழை வாழ்க்கையை அவன் வெறுத்தான்.

ஆகையால் தென்மேற்காக ஓடும் மூன்றாவது நதியை அவன் பின்தொடர்ந்தான். அது அவனை கெரியத் (Kereyid) இன மக்களோடு கொண்டு சேர்த்தது. தன் நற்பெயரால் அவர்களை ஒன்றுதிரட்டி மேர்கித் குலத்திற்கு எதிராகச் சண்டை செய்து தன் மனைவி போர்டேவை காப்பாற்றினான்.

பிரபஞ்சத்தை ஆள்பவன்: இதுவெறும் தொடக்கம்தான். அடுத்த 27 ஆண்டுகள் உக்கிரமாக போர்புரிந்து மங்கோலியப் பழங்குடிகள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி தன்னைத் தலைவனாக முடிசூட்டிக் கொண்டு ‘பிரபஞ்சத்தை ஆள்பவன்’ எனப் பொருள்படும் ‘சிங்கிஸ் கான்’ எனும் பட்டத்தை கி.பி. 1206-ல் ஏற்றுக் கொண்டான்.

சிங்கிஸ்கானின் அடுத்தடுத்த படையெடுப்புகள் பிரம்மாண்டமாக இருந்தன. வடமேற்கு சீனாவை தன் வயமாக்கினான். சீனாவின் சின் பேரரசை தோற்கடித்தான். பாரசீக மன்னர் குவாரிசம் ஷாவோடு மாறுபாடு கொண்டு அவனையும் கதிகலங்க வைத்தான். தன் மங்கோலியப் படைகளை ரஷ்யாவிற்கு அனுப்பிவிட்டு, சொற்பமான வீரர்களோடு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பகுதிகளில் படையெடுத்தான்.

கொள்ளையடித்த செல்வங்களோடு கி.பி. 1215-ல் மங்கோலியாவிற்குத் திரும்பினான். எதிர்பாராத அளவுக்கு ஒட்டகங்களும் எருதுகளும் மங்கோலிய நிலத்தை அளந்துகொண்டு வண்டி வண்டியாக இழுத்துச் சென்றன. சீன விரிப்புகள், பட்டாடைகள், கம்பளிகள், பீப்பாய்கள் ததும்ப மதுபானம், தேன், தேநீர், தளவாடங்கள் என்று அவர்கள் கொண்டுவராத பொருட்களே இல்லை.

உலகின் சர்வ செல்வங்களும் தொலைதூர மங்கோலிய தேசத்தின் புல்வெளி கிராமங்களில் நிறைந்து வழிந்தன. கூடாரத்தில் வாழ்ந்து பழகிய பழங்குடியினர், செல்வங்களைச் சேகரிக்க கட்டிடங்களை நிர்மாணித்தனர். சிங்கிஸ்கானுக்குப் பிறகு வந்தவர்களும் திறமையாக ஆட்சி செய்து உலகின் நான்கிலொரு பங்கு நிலப்பகுதியை தங்கள் ஆட்சிப் பரப்புக்குள் கொண்டுவந்தனர்.

மங்கோலியர்கள் இன்று அவரை மாபெரும்தலைவராகவும் தேசத் தந்தையாகவும் போற்றுகின்றனர். உள்நாட்டுக் கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து, ஒற்றுமையே பெருமைதரும் என்று உள்ளூர் பழங்குடிகளை ஒருங்கிணைந்து வெற்றி கண்டவர் என்று பூரிக்கின்றனர். மங்கோலியாவின் அஞ்சல்தலையிலும், நாணயத்திலும், சாக்லேட்களிலும் உருவம் பொறித்து நிலைத்திருக்கும் சிங்கிஸ்கானை நம்பிக்கையின் அடையாளமாக கொண்டாடுகின்றனர்.

இக்கட்டானச் சூழலில் சரியான நதியைத் தேடி, இழந்த வாழ்க்கையை பின்தொடர்ந்துபோய் மீட்டதுபோல, மனித வாழ்வின் துன்பங்களில் இருந்து வெற்றிக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் இந்த மாவீரன்.

கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in