

நறுமுகையே... நறுமுகையே... நீ ஒரு நாழிகை நில்லாய்... என்ற பாடல் வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாடலின் இடையே அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் நெற்றித் தரள நீர் வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா... என்ற வரிகள் வந்ததும், இந்த வரிகளப் பத்தித்தான போன வாரம் நாம பேசிக்கிட்டிருந்தோம் குழலி.. திரைப்படத்துல கூட இந்தப் பாட்டு வந்திருக்கா என்று உரையாடலைத் தொடங்கினான் சுடர்.
குழலி: சுடர், இந்தப் பாட்டுல அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்ன்னு பாரி மகளிர் பாட்டோட முதல் வரிய மட்டும் பாடலாசிரியர் வைரமுத்து அப்படியே பயன்படுத்தியிருக்காரு.
சுடர்: இந்தப் பாட்டைக் கேட்கையிலேயே காதல் பாட்டு போலத்தான் இருக்கு. ஆனா நீ பேசினப்போ அத இரங்கல் குறிப்புள்ள பாட்டுன்னு சொன்ன...
குழலி: சுடர், நீ சொல்றது ரொம்ப சரி. புறநானூற்றுப் பாடல் வரியக் கவிஞர் காதல் பாட்டுல பயன்படுத்தியிருக்காரு. இப்போ நாம சொல்றமே Flash back-ன்னு. Once upon a time, Long Long Ago-ன்னெல்லாம் ஆங்கிலத்துல சொல்வோம்ல. அதைப் பின்னோக்கு உத்தின்னு சொல்வாங்க. மகிழ்ச்சியான நிகழ்வாகவும் இருக்கலாம். இல்ல துயரமானதாகவும் இருக்கலாம் இல்லயா... அந்த அற்றைத் திங்கள்னு தொடங்குற முதல் வரி ரொம்ப ரொம்பப் பொருத்தமா அமைஞ்சிருக்கு.
சுடர்: ஓ.. சரி...சரி... அந்த பாரி மகளிர் பாட்டக் கொஞ்சம் சொல்லேன். வரிகள் தெரிஞ்சா நல்லா இருக்கும். இப்படிக் குழப்பிக்க வேணாம்ல.
குழலி: ஓரளவுக்குத்தான் நினைவுல இருக்கு. இரு. புத்தகத்தை எடுத்துட்டு வந்து சரியா வாசிக்கிறேன்.
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே(புறநானூறு, பாடல் எண் - 112)
குழலி வாசித்து முடித்தாள்.
குழலி: கவியரசு கண்ணதாசனும்கூட இந்தப் பாட்டு வரியப் பயன்படுத்தியிருக்காரு தெரியுமா...
சுடர்: அப்படியா, இதே வரிகளயா...
குழலி: ஆமாம் சுடர். ஆனா அவரோட பாணியில...
சுடர்: என்ன பாட்டுன்னு சொல்லேன்.
குழலி: அன்று வந்ததும் இதே நிலா... சச்சச்சா... இன்று வந்ததும் அதே நிலா... சச்சச்சான்னு ஒரு பாட்டு கேட்டிருக்கியா.
சுடர்: ஆமா கேட்டிருக்கேன். அந்தப் பாட்டுகூட ரொம்ப உற்சாகமான பாட்டாச்சே.
அன்றொரு நாள் அதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே என்று குழலி பாடத் தொடங்க,
சுடர்: குழலி, இன்னும் எத்தனை பாடல்களத்தான் இந்த ஒரு வரியப் பயன்படுத்தி எழுதியிருக்காங்க. உண்மையாவே நீ சொன்ன மாதிரி இந்தப் பாட்டு முக்கியமான பாட்டுதான். நிறையப் பேருக்குப் படைப்பூக்கம் தந்திருக்கே.
குழலி: நீ சொன்னது சரிதான். திரைப்படப் பாடல்களுக்குப் பயன்பட்டதால மட்டுமில்ல... சங்க காலத்தப் பொற்காலமா, இருண்ட காலமான்னு இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துக்கிட்ருக்கு. இந்தப் பாட்டுக்கு அந்த விவாதத்துல ஒரு தனி இடம் இருக்கு .
சுடர்: ஆர்வம் அதிகமாகுது. எப்படின்னு சொல்லு குழலி.
குழலி: புறநானூற்றுல ஆண்களோட வீரம் பத்தி மட்டுமில்ல. பெண்களோட வீரம், அவங்களோட துணிச்சல், தியாகம் பத்தியும் இருக்கு. ஒரு பொண்ணு போர்ல அப்பாவை, கணவனை இழந்தாலும்கூடத் தன் நாட்டுக்காக பால் குடிக்கிற குழந்தையையும் போருக்கு அனுப்புற அளவுக்குத் துணிச்சல் கொண்டவளா இருந்ததாப் பாட்டு இருக்கு.
சுடர்: இவ்வளவு நாட்டுப் பற்றா... ஒரு அம்மாவுக்குத் தன் குழந்தைய இழக்க மனசு வருமா...
குழலி: அதுதான் சுடர். தொடர்ந்து போர்நடந்தா, வேற யாரு இருப்பாங்க. குழந்தைங்க தான். ஆனா, போர்ல தன் நாடு வெற்றி பெறணும்னு பெண்கள் தன்னலம் கருதாம இருந்தாங்கன்னு தான் பாடல்கள் சொல்லுது. பாரி மகளிர் பாடல் மட்டும் தான் விதிவிலக்கு.
சுடர்: எப்படிச் சொல்ற...
குழலி: ஏன்னா, போர்ல வீர மரணம் அடையறதப் பெருமையாக நினைக்குற ஒரு சமூகத்துல, போர் எப்படி ஒரு பெருந்துயரத்தத் தங்களுக்குக் கொடுத்துச்சுன்னு சொல்றாங்களே. அதோட, பெரும் வேந்தர்கள் எப்படிக்குறுநில மன்னர்கள வென்று மூவேந்தர்களாக உருவானாங்கன்னும் குறிப்பால சொல்றாங்களே.
வாசலில் இருந்து அம்மா அழைக்க, சரி குழலி நாளை சந்திப்போம். உன்கிட்டப் பேச நிறைய இருக்கு என்றவாறு கிளம்பினான் சுடர்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com