

எந்த வயதுக்காரர்களும் தவறவிடக்கூடாத முக்கியமான ஒரு இடம் முர்டேஷ்வர். நம்முடைய பயணம் தொடங்கி, நாம் வந்து சேர்ந்த முதல் இடம் முர்டேஷ்வர். முதல்நாளே கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் பயணம் செய்திருந்தோம். பயணம் செய்த களைப்பு, மழையில் நனைந்தது எல்லாம் சேர்த்து உடம்பெல்லாம் அதிகப்படியான வலி.
பைக்கில் பயணம் செய்வது எந்தளவு சந்தோஷமான விஷயமோ, அதே அளவு அதில் கஷ்டமும் இருக்கும். அதில் முதல் விஷயம் தான் இந்த உடல் வலி.
அடுத்து, பைக்கில் நம்முடைய பொருட்களை வைத்து எடுப்பது இரண்டாவது கடினமான விஷயம். என்ன தான் மழைக்கு 'ரெயின் கவர்ஸ்' வைத்திருந்தாலும், எப்படியாவது மழை நீர் உள்ளே சென்றுவிடும். அப்படித்தான் இன்றும் நடந்தது. முக்கால்வாசி பொருட்கள் மழையில் நனைந்திருந்தது.
முர்டேஷ்வர் வந்து, ஒரு செயலி மூலம் இரண்டு நாட்கள் தங்குவதற்கு ரூம் புக் செய்துவிட்டு, ஈரமானதுணிகளை ரூமுக்குள்ளேயே காயப்போட்டுவிட்டு, இரவு உணவு சாப்பிடச் சென்றோம். இரவு 10 மணிதான் ஆகி இருந்தது.ஆனாலும் எல்லா ஹோட்டலும் மூடப்பட்டிருந்தன. நெடுஞ்சாலை வரை சென்று ஒரு தள்ளுவண்டிக் கடையில் கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு வந்தோம்.
கோபுர உச்சிக்கு லிப்ட்: மறுநாள் காலை மீண்டும் மழை. அதுவரை காய்ந்திருந்த துணிகளை மாற்றிவிட்டு மீதம் இருந்த ஈரத் துணிகளை காயப்போட்டுவிட்டு, மழை விடும்வரை காத்திருந்தோம். மழை விட்டதும், முர்டேஷ்வர் வீதிகளில் தேங்கியிருந்த நீரில் விளையாடிக்கொண்டே, கடற்கரையில் உள்ள கோயிலுக்குச் சென்றோம்.
அதுநாள்வரை அத்தனை பிரம்மாண்டமான கோயில் கோபுரத்தை நான் பார்த்தது இல்லை. கிட்டத்தட்ட 250அடி உயரத்தில் மிக கம்பீரமாய் ஒரு ராஜகோபுரம். உள்ளே சென்றால் மூலவர் மீசைவைத்துக் காட்சியளிக்கிறார். மூலவர் தரிசனமுமே சற்று வித்தியாசமாக இருந்தது. கோயிலுக்கு பின்புறம் கடற்கரையை ஒட்டி 123 அடியில் அமைதியே உருவாய் அழகாய் அமைந்திருக்கிறது பிரம்மாண்ட சிவன் சிலை.
20 அடுக்களை கொண்ட ராஜகோபுரத்தில், லிப்ட் வசதி செய்யப்பட்டிருக்கிறது. கோபுரத்தின் உச்சியிலிருந்துபார்த்தால், ஒட்டு மொத்த முர்டேஷ்வரையும் கண்டு ரசிக்கலாம். சிவன் சிலையின் மொத்த பிரம்மாண்டத்தையும் அப்போதுதான் உணர முடிந்தது. கோயிலுக்கு வெளியிலேயே அழகான கடற்கரை, அதன் மறுபக்கம் மீனவர் பகுதி. கோயிலுக்குச் செல்லும் இடதுபுறம் முழுவதும் படகுகளால் நிறைந்திருக்கும். மேலிருந்து பார்க்கும்போது, அடுக்கிவைக்கப்பட்ட பெட்டிகள் போல அழகாக இருந்தது.
கடற்கரை ஓரம் ஆன்மிகத்துக்கு கோயில், பொழுதுபோக்குக்குக் கடற்கரை, படகு சவாரி, இயற்கையை ரசிக்கத் தீவுக்குள் இருக்கும் தென்னை மரங்களுக்கு இடையில் நடப்பது என ஒட்டுமொத்த ஊரும் மனதுக்கு அத்தனை புத்துணர்ச்சியாய் இருந்தது. மங்களூரில் இருந்து கோவா செல்லும் நெடுஞ்சாலையில் பயணிக்க நேர்ந்தால், முர்டேஷ்வரை தவறவிடாதீர்கள்.
முர்டேஷ்வரில் இருந்து அடுத்தநாள் கிளம்ப வேண்டும். அதிகாலையிலேயே கோவா கிளம்பத் திட்டம். வழியனுப்ப வந்துவிட்டது மழை. கோவா போவதற்குமுன் 'அப்சரகொண்டா'வுக்கு சென்றது பைக். முன்னரே சொன்னது தான், இந்த பயணம் முழுவதும் வழித்தடமும் திசையும் மாறிக்கொண்டே தான் இருக்கும்.
கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை.
- தொடர்புக்கு: bharaniilango@gmail.com