வேலைக்கு நான் தயார் - 3: அட்டகாசமாக அறிவியல் படிக்க உதவும் ISAT தேர்வு
எனது மகன் தற்பொழுது பிளஸ் 2 படித்து வருகிறான். கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பையாலஜி பாடப்பிரிவினை எடுத்துள்ளான். டிகிரியில் என்ன படித்தால் சிறப்பாக இருக்கும். நல்ல படிப்புகளுக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் உள்ளதாக சொல்கிறார்களே!- எம்.கோபாலசுவாமி, திருவிடைமருதூர்
வாழ்வின் முக்கியத் திருப்புமுனைகளில் முதன்மையானது பிளஸ் 2-வும் அதற்கு பிறகு எதிர்கொள்ளும் நுழைவுத் தேர்வுகளும் அதன் வழி பெறப்படும் நல்ல பட்டப்படிப்புகளும் ஆகும். பொதுவாக தொழில் சார் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இன்று சிறப்பு வாய்ந்த அனைத்து வகையான படிப்புகளுக்கும் அதனை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் / தலை சிறந்த கல்லூரிகள் பாடப்பிரிவுக்கேற்ப நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.
பொறியியல், மருத்துவம் ஆகியவற்றுக்கென நடத்தப்படும் ஜெ.இ.இ., நீட் தேர்வுகளை தவிர்த்து மேலும் பல முக்கிய நுழைவுத் தேர்வுகள் உள்ளன. அவற்றை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள்.
ISAT தேர்வு: IISER எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science Education and Research)நாட்டின் 7 முக்கிய நகங்களில் (திருவனந்தபுரம், பெர்ஹம்பூர், திருப்பதி, புனே, மொகாலி, போப்பால், கொல்கெத்தா) உள்ளது.
இங்கு ஐந்து வருட ஒருங்கிணைந்த எம்.எஸ். மற்றும்நான்கு வருட பி.எஸ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் ஐந்து வருட பி.எஸ். எம்.எஸ். படிப்பினை கணிதம், இயற்பியல், வேதியியல், பையாலாஜிக்கல், சயின்ஸ் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பி.எஸ். எம்.எஸ். படிப்புகளை கெமிக்கல், டேட்டா சாயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யுட்டர் சயின்ஸ் பிரிவுகளில் படிக்கலாம்.
இதற்கென IND- ISAT நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். இக்கல்வி நிறுவனங்களில் பயில ஜெ.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும்.
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எஸ்.சி. (IISC) பெங்களூரூவின் பி.எஸ். படிப்புகளுக்கும் இத்தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மேலும் தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. தொடர்ந்து பேசுவோம்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை
‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
