

"கேம்ப்பெல் மருத்துவமனையின் அந்தச் சிறிய அறை எனக்கு கோயில் கருவறை எனலாம். கடினமானதொரு நாளின் முடிவில், ஒரு பழைய கெரசின் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது அந்தச் சிறிய அறையில். இரவு பத்து மணிக்கு நான் எதிர்பார்த்தபடியே யூரியா ஸ்டிபமைன் ஆய்வு முடிவடைந்தது. அப்போது கூட இத்தனை உயிர்களைக் காக்கும் அருமருந்தாக அது மாறும் என்று நான் நினைக்கவில்லை” என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி நெகிழ்வுடன் பின்னாளில் நினைவு கூறினார் டாக்டர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி.
பல கோடிகளைக் கொட்டிக் கொடுக்கக் கூடியது அந்த மருந்து என்று தெரிந்தும் மக்களுக்குப் பயன்பட்டால் போதும் என்று கடைசிவரை அவர் தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமைகூடக் கோரவில்லை. காலா அசார் நோய் மட்டுமன்றி, மலேரியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய், தொழுநோய், பால்வினை நோய்கள் போன்ற பல வெப்பமண்டல தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சிகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் டாக்டர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி. நோயின் காரணத்தை அறிந்தால் தான் அதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி அவர் அடையாளம் காட்டிய நோய்கள் ஏராளம்.
ரத்த வங்கி அறிமுகப்படுத்தியவர்: காய்ச்சல் அல்லது பிற தொல்லைகள் இல்லாமல் நோயாளிகளின் முகத்தில் திடீர் வெடிப்புகள் தோன்றியதைக் கண்டறிந்த இவர் அது லெஷ்மேனியாசிஸின் புதிய, கொடிய வடிவம் என்பதையும் உறுதி செய்தார். அதுவரை காரணம் புரியாமல் இருந்த மருத்துவ உலகம், அதன் பிறகே அதற்கு "பிரம்மச்சாரி லீஷ்மனாயிட்" எனப் பெயரிட்டதோடு அதற்கான மருந்துகளைத் தேடத் தொடங்கியது. அதேபோல அந்தச் சமயத்தில் கொல்கத்தா மற்றும் டாக்காவில் 'க்வார்ட்டன் மலேரியா நோய்' கண்டறியப்பட்டதும் இவரது ஆய்வுகளால் தான்.
தொற்றுநோய் ஆராய்ச்சிகள் தவிர மற்ற மருத்துவப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இப்போது நமது உயிர்களைக் காப்பாற்றுவதில் எண்ணிப் பார்க்க முடியாத பங்காற்றி வருவது ரத்த வங்கி. இந்த ரத்த வங்கி யோசனையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதே டாக்டர் உபேந்திரநாத்தான். அவரது முயற்சியால் 1935-ல் கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் ரத்த வங்கி நிறுவப்பட்டது. இன்று உலகின் இரண்டாவது பெரிய ரத்த வங்கியாக இது திகழ்கிறது. இந்தியாவில் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாடெங்கும் பல்வேறு இடங்களில் ரத்த வங்கிகள் உருவாகி உயிர்களைக் காக்கவும் வழிவகுத்தது.
நெருங்கி வந்த நோபல்: டாக்டர் உபேந்திரநாத்தின் அரிய பணிகளைப் பாராட்டி, ராய் பகதூர் விருது, மாவீரர் பட்டம், கிரிஃபித் விருது, மிண்ட்டோ பதக்கம், ராயல் சொசைட்டியின் உறுப்பினர், மலேரியா குழுவின் மத்திய உறுப்பினர், இந்திய அறிவியல் அமைப்பின் தலைவர் என அனைத்து கிரீடங்களும் டாக்டர் உபேந்திரநாத்தை அலங்கரித்தன.
காலா அசார் உள்ளிட்ட மருத்துவப் பணிகளைப் பாராட்டி, இரண்டு முறை நோபல் பரிசுக்கும் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. என்றாலும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தனது பணிகளைச் செய்ததுடன், அதில் கிடைத்த ஊதியத்தின் பெரும்பங்கையும் தனது மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிக்கு வழங்கி அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார் டாக்டர் உபேந்திரநாத்.
பணி ஓய்வுக்குப் பிறகும் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியதுடன், மாணவர்களின் ஆராய்ச்சிக்கு ஈடுயிணையற்ற பங்களிப்பை நல்கிய அந்த மாமனிதர் 1946 பிப்ரவரி 6 அன்று இயற்கை எய்தினார்.
காலா அசார் எனும் காலனுக்கே காலனாக விளங்கிய ஒரு அரிய மருத்துவரை, மருத்துவ உலகம் தாண்டி பள்ளி மாணவர்களும் அறிய வேண்டிய தருணமிது.
(மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com