நானும் கதாசிரியரே! - 8: கதையின் முடிவைக் கண்டுபிடி!

நானும் கதாசிரியரே! - 8: கதையின் முடிவைக் கண்டுபிடி!
Updated on
2 min read

ராஜா கதை, தேவதைக் கதை என கதைகளின் வகைகளைப் பற்றி சென்ற பகுதியில் பார்த்தோம். நாம் உருவாக்கும் கதையை எப்படிக் கொண்டுச் செல்வது என்று புரிந்திருப்பீர்கள். அதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வதற்கு உதாரணத்தோடு ஒரு கதையோடு தொடர்வோம்.

அது ஒரு பெரிய காடு. ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. ஒருநாள், மான் ஒன்று, சிங்க ராஜாவின் குகையை நோக்கி வேகமாக ஓடி வந்தது. ஏதோ ஆபத்து என மற்ற விலங்குகளும் அதைப் பின்தொடர்ந்து வந்தன. குகையை விட்டு வெளியே வந்தது சிங்க ராஜா. மான் தனது வாயில் கவ்வியிருந்த ஒரு பொருளைக் கீழே போட்டது.

“ராஜா… ராஜா… இந்தப் பொருள் என்னவென்றே தெரியவில்லை. இதனால் நம் காட்டுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” என்றது மான். எல்லா விலங்குகளும் அந்தப் பொருளைப் பார்த்தன. சிறு குடுவைப் போல இருந்தது. அதன் உள்ளே ஏதோ அசைந்து கொண்டிருந்தது. அவர்களில் எவருமே இதுபோன்ற ஒன்றைப் பார்த்ததே இல்லை.

மாயமும் அச்சமும்: நரி முன்னே வந்து அதை எடுத்துப் பார்த்தது. “நரியாரே…அதைக் கீழே போடு…வெடிக்கிற பொருளாக இருந்தால் நீ காலி” என்றது யானை. உடனே கீழே போட்டுவிட்டு ஓடத் தொடங்கியது. அது ஓடும்போது அதன் காலில் அப்பொருள் பட்டு அருகில் எரிந்துகொண்டிருந்த தீயில் விழுந்தது. சட்டென்று பார்த்தால் அந்தப் பொருள் மாயமாக மறைந்து விட்டது. அதைப் பார்த்த எல்லா விலங்குகளுமே பயந்து நடுங்கின.

நம்மை அழிக்கத்தான் இந்தப் பொருள் வந்திருக்கிறது என்று அழுதன.

அடுத்தடுத்த நாட்களில் அதேபோன்ற பொருட்கள் காட்டுக்குள் நிறைய கிடைத்தன. இந்த ஆபத்தில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று ஆலோசனை நடத்தின.

மந்திரவாதியின் சதி: இந்தக் கதையை இதற்கு மேல் எப்படிக் கொண்டுச் செல்வீர்கள்! இரண்டு வழிகளைத் தருகிறேன்.

1. ஒரு மந்திரவாதி அங்குள்ள மூலிகையைப் பறிக்கத் திட்டமிடுகிறான். அப்போது விலங்குகள் தன்னைத் தாக்கி விடக்கூடாது என, மந்திரப் பெட்டியாக அந்தப் பொருளை அனுப்புகிறான். காட்டின் ஒற்றன் ஓநாய் மூலம் இதைத் தெரிந்துகொண்ட சிங்க ராஜா, பலம் வாய்ந்த ஐந்து விலங்குகளை காட்டுக்கு வெளியே அனுப்புகிறது. திட்டமிட்டப்படியே மந்திரவாதி வர, காட்டு விலங்குகள் மயக்கம் அடைகின்றன. அந்த நேரம் பார்த்து காட்டுக்கு வெளியே இருந்த விலங்குகள் திடீரென்று வந்து மந்திரவாதியைக் கொல்கின்றன. மூலிகையும் விலங்குகளும் காப்பற்றப்படுகின்றன.

2. காட்டில் கிடைத்த அந்த மாயப் பொருட்களை எல்லாம் காட்டின் அருகே உள்ள சாலையில் குவிக்கின்றன விலங்குகள். அங்கு வந்த ஜீப் நிற்கிறது. அதிலிருந்து பலர் இறங்குகின்றனர். அவர்களில் ஓர் அதிகாரி, “இங்கே பாருங்க… காட்டைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் தண்ணீர் பாட்டில்களைப் போட்டு விட்டுப் போயிட்டாங்க. இனிமேல் இங்கே யாரும் இப்படிச் செய்யாமல் நடவடிக்கை எடுங்க” என்று உத்தரவிடுகிறார். அதைக் கேட்டு காட்டு விலங்குகள் நிம்மதி அடைகின்றன.

வீட்டுக் கதை: இந்த இரண்டு முடிவுகளில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள். இரண்டும் தவிர்த்து நீங்களாக இந்தக் கதையைத் தொடர்ந்தால் எப்படி முடிப்பீர்கள்?

கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’,

‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in