

இன்று மனிதர்களுக்கு ஏராளமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அவை ஏன் ஏற்படுகின்றன என்பதை அறிவதற்கு நாம் சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. நோய்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன சம்பந்தம்? இதைத் தெரிந்துகொள்ள, சூழலியலின் அடிப்படையான சூழல் மண்டலத்தில் (Eco System) இருந்து தொடங்குவோம்.
சூழல் மண்டலம் என்பது உயிரினங்கள் வாழும் தொகுதி. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள உயிரினங்கள் அவ்விடத்தில் உள்ள நிலம், காற்று, நீர் உள்ளிட்ட உயிரற்ற பொருட்களுடன் ஒன்றுக்கொன்று தொடர்புற்று ஓர் அமைப்பாக திகழ்வதைத்தான் சூழல் மண்டலம் என்கிறோம்.
சூழல்மண்டலம் எனும் வலைப்பின்னல்: சூழல்மண்டலம் என்றவுடன் உங்களுக்குக் காடுகள் நினைவுக்கு வரலாம். காடுகள் மட்டுமே சூழல் மண்டலங்கள் இல்லை. கடலும் ஒரு சூழல் மண்டலம்தான். அங்கேயும் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. உங்கள் வீட்டருகே உள்ள குளம், குட்டைகளும் சூழல் மண்டலங்கள்தான்.
வீட்டில் பூந்தொட்டி வைத்திருக்கிறீர்களா? அதைக் கவனித்துப் பாருங்கள். அதற்குள் ஏகப்பட்ட புழு, பூச்சிகள், நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அதுவும் ஒரு சூழல் மண்டலம்தான். ஏன் நீங்களேகூட ஒரு சூழல்மண்டலம்தான். உங்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்ந்து வருகின்றன தெரியுமா?
சூழல் மண்டலங்களைக் குறுகிய (Micro), நடுத்தர (Meso), உயர் உயிரின மண்டலம் (Biome) என பிரிக்கின்றனர். நாம் மேலே பார்த்த பூந்தொட்டி குறுகிய சூழல் மண்டலம். ஆறுகளை நடுத்தர மண்டலமாக குறிக்கலாம். உயர் உயிரின மண்டலம் என்பது மழைக்காடுகளைபோல அதிக எண்ணிக்கையிலான மிருகங்கள், தாவரங்கள், நீர்நிலைகள் கொண்ட அமைப்பு. சூழல்மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு வகையில் பூமியின் நலனுக்கு பங்களிக்கின்றன.
இவற்றின் இடையே நடைபெறும் பரிமாற்றத்தை ஒரு வலைபின்னல்போல எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சூழல் மண்டலங்கள் எல்லாம் தனித்தனியாகத் தெரிந்தாலும் ஒன்றோடு ஒன்று ஒருமித்த உறவில் இருக்கின்றன. கொடுத்தல் வாங்கல் என்னும் செயல் இவற்றுக்கு இடையே நடைபெறுகிறது. இவற்றில் பாதிப்பு வரும்போது பல சூழலியல் பிரச்சினைகள் எழுகின்றன. அவற்றில் ஒன்றுதான் நோய்கள்.
உதாரணமாக, கொசுக்களால் ஏற்படும் நோய்களை எடுத்துக்கொள்வோம். நீர்த்தேங்கங்களில் கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. கொசுக்களை விரட்டுவதற்கு ரசாயன மருந்துகள், கொசு விரட்டிகள் என பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தினாலும் அவற்றால் பெரிதாக பலன்கள் இல்லை. பிறகு கொசுக்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? நாம்கொசுக்களை அதன் சூழல்மண்டலத்தோடு இணைந்து புரிந்துகொள்வதுதான் பலன் தரும்.
(மேலும் மணம் வீசும்)
கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com