

கடைவீதியில் இறங்கிச் சென்றால் நிச்சயம் ஒரு கடையிலாவது "தள்ளுபடி" என்ற வார்த்தையைக் கடக்காமல் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Discount என்பார்கள். இதனை வேறுவேறு பெயர்களிலும் சொல்லுவார்கள் 'சலுகை', ‘ஆபர்', ‘இலவசம்', 'கழிவு'. வணிகம் செய்பவர்களுக்கு எப்படி இது கட்டுப்படியாகும்? இதன் பின்னால் கணிதம் இருக்கின்றதா?
முதலில் ஒரு பொருளை தயாரிக்கின்றோம் என வைத்துக்கொள்வோம். தயாரிப்பு என்பது கச்சா பொருட்களில் இருந்து பயன்படுத்தும் நிலைக்கு மாற்றுவது. ஆடைகளை, துணியாகவாங்கி, தைத்துக் கொடுப்பது. துணிகளைவாங்க, தையற்கூலி, அந்த இடத்தினை நிர்வகிக்கும் செலவு எனச் சேர்த்து நிறைய பணம் செலவாகும். அடக்க விலை என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்ய ஆகும் விலை.அதே விலையில் அப்பொருளை விற்க இயலாது. பொருளுக்கு ஏற்றவாறு விற்பவர்களுக்கு ஏற்றவாறு லாபம் வைத்து விற்பார்கள்.
பள்ளிக்கு அருகே இருக்கும் கடையில் நீங்கள் ஒரு பேனா வாங்குகின்றீர்கள். அதைக் கடைக்காரர் மொத்த விலை (whole sale shop) கடையில் வாங்கி வந்திருப்பார். நீங்கள் வாங்கும் கடையை சில்லறைக் கடை (Retail shop) எனக் குறிப்பிடுவார்கள். மொத்த விலைக்கடையில் இருந்து 100 பேனாக்களை ரூபாய் 1500-க்கு வாங்கினார் என வைத்துக்கொள்வோம். போக்குவரத்து செலவு ரூபாய் 200. ஆக 100 பேனாவினை ரூபாய் 1700 (1500 200)க்கு வாங்கி இருக்கின்றார்.
100 பேனாக்களின் அடக்க விலை – 1700.
ஒரு பேனாவின் அடக்க விலை – 1700/100 = ரூபாய் 17
17 ரூபாய்க்கே விற்க முடியாது. உழைப்பிற்கும் இதர செலவிற்கும் லாபம் வேண்டும்.
அடக்கவிலை லாபம் = விற்கும் விலை
Cost Price Profit = Selling Price
லாபம் 8 ரூபாய் என்றால் விற்கும் விலை. ரூபாய் 17 ரூபாய் 8 = ரூபாய் 25.
பேனாவின் விலை ரூபாய் 25 என்று வைத்ததும் யாரும் வாங்கவில்லை. கடைக்காரர் என்ன செய்கின்றார் விற்கும் விலையை 30க்கு மாற்றி. 20 % தள்ளுபடி என அறிவிக்கின்றார். அப்படியெனின் என்ன விலைக்குப் பேனாவை வாங்கலாம்? விலை ரூபாய் 30. தள்ளுபடி 20%. ஆகவே எவ்வளவு கழிக்க வேண்டும்?
30 X (20/100) = ரூபாய் 6.
வாங்கும் விலை 30-6 = ரூபாய் 24.
20% கழிவு என்பதால் நிறைய பேனாக்களும் விற்பனையாகும். கடைக்காரருக்கு லாபம் உண்டா என்றால் உண்டு. ரூபாய் 25 என நிர்ணயித்த போது லாபம் 8 ரூபாய் (25-17). 30 என நிர்ணயித்தபோது லாபம் 13 ரூபாய் (30-17). ஆனால் விற்கப்பட்ட பேனாவின் விலை ரூ 24. ஆகவே லாபம் 24- 17 = 7 ரூபாய். (17 என்பது அடக்கவிலை).
தள்ளுபடி விலையில் ஏன் பொருட்களைக் கொடுக்கின்றனர்? வாடிக்கையாளரை ஈர்த்துபொருள் வாங்க வைக்கவே. ஆனால் குறைந்தபட்ச லாபம் இருக்கும். வாடிக்கையாளராக, எப்போது பொருள் வாங்கினாலும் நாம் வாங்கும் விலைக்கு அப்பொருளை கொடுக்கலாமா என்றும் உண்மையிலேயே அப்பொருள் நமக்கு தேவையா என்றும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தள்ளுபடி, சலுகை என்ற பதங்களைப் பார்த்து மயங்கிட வேண்டாம். மயங்காமல் இருக்கக் கொஞ்சம் கணிதம் தெரிந்தால் போதும்.