கதை கேளு கதை கேளு - 32: நெல் விளையும் கதை

கதை கேளு கதை கேளு - 32: நெல் விளையும் கதை
Updated on
2 min read

ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை பார்ப்பதைப் போல இருக்கும் 'நெல் விளைந்த கதை' புத்தக வாசிப்பு. கோடை விடுமுறைக்குப் பிறந்த வீட்டிற்குச் செல்கிறார் அபிராமி, தன் மகன் கண்ணன், மகள் மயூரியுடன் ஆனந்தமாக ரயிலில்பயணிக்கிறார். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசம்தான் அபிராமியின் பிறந்த ஊர்.

பள்ளிக்குச் செல்லும் கண்ணனுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. தாத்தா முத்துசாமியிடம் கேட்டறிந்து கொள்ளலாம் என்று அபிராமி சொல்லியிருக்கிறார். கண்ணனும் ஆர்வமாக கிராமத்துக்குப் பயணிக்கிறார்.

நெல் மரத்தில் காய்க்குமா?

கிராமத்து வீட்டில் தாத்தா, பாட்டிஅன்புடன் உணவிட்டு உபசரிப்பதை நாம் உணரும் வண்ணம், எழுத்திலேயே உணவின் மணத்தைக் கொண்டு வந்திருக்கிறார் நூலாசிரியர் லஷ்மி பாலகிருஷ்ணன். கிராமத்து வீடுகளின் தாழ்வாரத்தை, கிணற்றடியை, மாட்டுக்கொட்டகையை காட்சிகளாக்கியிருக்கிறார். கண்ணனும், மயூரியும் தாத்தா முத்துசாமியுடன் மாலை நேரத்தில் வயலுக்குச் செல்கின்றனர். அங்குதான் அபிராமி, கண்ணனின் சந்தேகத்தைக் கூறுகிறார்.

கண்ணனின் சந்தேகம் நெல் மரத்தில் காய்க்குமா என்பதுதான். தாத்தா நெல் விளையும் வயற்காட்டை முழுவதுமாகச் சுற்றிக்காட்டி, நெல் விளைய விதை தூவும் முறையிலிருந்து நாத்து எடுத்து நடுவது பிறகு களை எடுக்க வேண்டிய முறை பற்றியும், இயந்திரம் மூலம் நெல் மணிகள் தனியாகவும், பிறகு வைக்கோல் அழகாக ரொட்டி போல சுருட்டியும் கிடைக்கும் என்பதை விளக்குகிறார். நெல் வயலில் விளைவது, அது மரத்தில் காய்ப்பதில்லை என்று அறிந்துகொண்ட கண்ணன், பிறகு கிராமத்தில் தன்னைச் சுற்றி நிகழ்பவற்றை உற்றுக் கவனிக்கிறார்.

அரிசி வெள்ளையா? பழுப்பா?

அரிசி புடைக்க அபிராமி வீட்டுக்கு வரும் முத்துக்கண்ணு பாட்டி, வயலில் நெல் விதைப்பு முதல் அறுவடை வரை நிகழ்வதைப் பாடலாகப் பாடுகிறார். கண்ணன் அன்று முழுவதும் முத்துக்கண்ணு பாடிய பாடலை முனகிக்கொண்டே இருக்கிறான். கண்ணனுக்குப் புதிதாய் ஒரு கேள்வி வந்தது. சென்னையில் தன் வீட்டில் இட்லி வெள்ளையாக இருக்கும். இங்கே தாத்தா வீட்டில் இட்டலி பழுப்பு நிறமாய் ஏன் உள்ளது என்பதுதான்.

நெல் முன்பெல்லாம் வீட்டிலேயே வேகவைத்து, அரிசியாக்கும் விதத்தைக் கூறி, தற்போது இயந்திரம் மூலம் நெல்லின் மேல் உறை பிரிக்கப்படுகிறது. பிறகு அந்த அரிசியை இயந்திரத்தில் மீண்டும் இடும்போது வெள்ளை நிறமாகிறது. ஆனால் சத்துக்கள் முழுமையாக இல்லாமல் போகும். சென்னையில் அரிசி வெள்ளையாக இருக்க இதுதான் காரணம் என்று தாத்தா கண்ணனுக்கு விளக்குகிறார்.

60 அடி உயர நெற்களஞ்சியம்

தவளவெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் கோவிலில் நாயக்க மன்னர்கள் ஆட்சிசெய்தபோது அறுபது அடி உயர நெற்களஞ்சியத்தை கோவிந்த தீட்சிதர் என்பவர் அமைச்சராக இருந்தபோது கட்டியுள்ளார். தற்போது அந்தநெற்களஞ்சியம் பயன்பாட்டில் இல்லையென்றாலும் அதன் பிரம்மாண்டம் ரசிக்கவேண்டியது. அபிராமி பிறந்தகம் வந்ததிலிருந்து மகன் கண்ணன், கிராமத்திலிருப்பவர்களுடன் பேசியும், தாத்தாவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டும் கண்ணன் எப்போதும் மனிதர்களுடனே நேரத்தை செலவழிப்பதை கவனிக்கிறார்.

கரோனா முடக்கத்திலிருந்து மகன் கண்ணன் தொலைபேசி வலையில் சிக்கிக் கொண்டிருந்தார். தற்போது தாத்தாவுடன் கண்ணன் பேசும் விஷயங்கள் ஆச்சரியமளிக்கிறது. சென்னையில் பச்சைபசேலென காய்கறிகள் கிடைப்பதில்லையே. தாத்தா நீங்கள் விவசாயம் செய்வதுடன் வியாபாரமும் செய்யலாமே. நேரடியாக நகரத்தில் இருப்பவர்களுக்கு விளைபொருட்களைக் கொடுத்தால் நல்ல லாபம் கிடைக்குமே என்கிறான். தாத்தா பேரனின் நுட்பமான கேள்வியில் மகிழ்கிறார். விவசாயிகள் ஏன் பணக்காரராக இருப்பதில்லை. காரணங்களை கண்ணன் புரிந்துகொள்ளும் அளவில் தாத்தா விளக்குகிறார்.

சரியான கல்வி

சிறார்கள் பாடப்புத்தகத்திலேயே மூழ்கிக்கிடப்பது உண்மையான வளர்ச்சியில்லை. வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்தியைக் கூட அறியாமல் இருப்பது கண்ணன் மட்டுமில்லை. கண்ணனுக்காவது ஒரு கிராமத்து தாத்தா இருந்தார். நகரத்து குழந்தைகள். அரிசி கடையில் கிடைக்கும் என்று நினைத்து, வளர்ந்தும் விடுகின்றனர். இந்தப் புத்தகம் எது சரியான கல்வி? என்ற கேள்வியை நம்முன் எழுப்புகிறது?

எளிய புத்தகங்களை குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டலாம். அவர்களை கேள்வி கேட்கச் செய்யலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in