

குழந்தைகள் வகுப்பறையை விட வெளியில் இருப்பதற்கே அதிகம் விரும்புகிறார்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைக் குழந்தைகள் விரும்புவதில்லை.
மரத்தடிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றதுண்டா?
‘‘ஆம். மரத்தடியில் பாடம் நடத்தியுள்ளேன்.” என பலக்குரல்கள். ஆனால், இப்போது அழைத்துச் செல்லக் கேட்டுக் கொண்டது, பாடம் நடத்த அல்ல. பின் எதற்கு?!
இலையைப்பிடி விளையாட்டு
மரத்தில் இருந்து உதிரும் இலைகளைப் பிடிக்கச் செய்ய வேண்டும். இதென்ன விளையாட்டு?! குழந்தைகளை மரத்தடிக்கு அழைத்துச் செல்லவேண்டும். ஒவ்வொரு குழந்தையாக மரத்தில் இருந்து உதிரும் இலைகளைப் பார்த்து, பின் தொடர்ந்து சென்று, அது தரையில் விழும் முன்பு பிடிக்கச் செய்ய வேண்டும். இதனால் என்ன பயன்? குழந்தைகளின் கை-கண் ஒருங்கிணைப்புக்கு உதவும்.
கை-கண் ஒருங்கிணைப்பு என்பது ஒரு பணியைச் செய்ய கண்களும் கைகளும் ஒருங்கிணைந்த முறையில் இணைந்து செயல்படும் திறன் ஆகும்.
கை- கண் ஒருங்கிணைப்பின் தேவை என்ன?
கை-கண் ஒருங்கிணைப்பை வளர்ப்பது குழந்தைகளுக்கு அவர்களின் உடல் இயக்கத் திறன்கள் (மோட்டார் திறன்கள்), இடஞ்சார்ந்த விழிப்புணர்வு மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. கை-கண் ஒருங்கிணைப்பு என்பது காட்சித் தகவலைச் செயலாக்கும் திறனையும், உங்கள் கைகள் மற்றும் விரல்களின் இயக்கங்களுக்கு வழிகாட்டும் திறனையும் உள்ளடக்கியது.
வாசித்தல், எழுதுதல், வரைதல், விளையாடுதல், இசைக்கருவிகளை வாசித்தல், சைக்கிள், கார் ஓட்டுதல் போன்ற பல செயல்பாடுகளில் இது ஒரு அடிப்படை திறமையாகும். பள்ளியில் மரம் இல்லை! மரங்களின் எண்ணிக்கை குறைவு. அதிலும், இலை உதிரவில்லை.
கவலை வேண்டாம். பந்தை உயரே தூக்கி எறிந்துப் பிடிக்க வைக்கவும். ஒரு பந்தைப் பிடிக்கும்போதும், பந்தை நெருங்கும்போதும், கண்கள் அதன் நகர்வைக் கண்காணிக்கும், மேலும் அதைப் பிடிக்க கைகள் சரியான நிலைக்கு நகரும். ஆகவே, பந்தை உயரத் தூக்கி எறிந்து பிடிக்கச் செய்யலாம்.
வளர்ந்த குழந்தைகள்
இது தொடக்கப் பள்ளிக்கானச் செயல்பாடு தானே! வளர்ந்த குழந்தைகள் இடஞ்சார்ந்த விழிப்புணர்வு பெற என்ன செய்ய வேண்டும்? தட்டச்சு செய்ய பழக்கலாம். தட்டச்சு செய்யும் போது, விரல்கள் வார்த்தைகளைத் தட்டச்சு செய்ய சரியான விசைகளுக்கு நகரும் போது கண்கள் திரையில் உள்ள உரையைப் படிக்கும். ஏற்கனவே சொன்னது போல் இசைக்கருவிகளை வாசிக்க கற்றுத்தரலாம்.
வயதுக்கு ஏற்ற செயல்பாடுகள் பல உள்ளன. பந்தைப் பிடிப்பது மற்றும் வீசுவது, ஷூ லேஸ்களைக் கட்டுவது, ஊசியில் நூல் கோர்ப்பது, கத்தரிக்கோல் பயன்படுத்துவது, பில்டிங் பிளாக்ஸ் வைத்து விளையாடுவது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
பந்துகளில் எண்கள் அல்லது எழுத்துக்கள் ஒட்டி வைக்கவும். ஆசிரியர் ஒவ்வொரு பந்தாக மேலே தூக்கி எறிய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் பந்தைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். எந்தக் குழந்தைப் பந்தைப் பிடித்ததோ, அந்தக்குழந்தைப் பந்தில் உள்ள எழுத்தை அல்லது எண்ணைச் சரியாகக் கூறவேண்டும். அப்படிச் சரியாக கூறினால், அந்தப் பந்து அவருக்கு சொந்தமானதாகும். ஆட்ட முடிவில் அதிகமான பந்தை வைத்திருப்பவர் வெற்றி பெற்றவர் ஆவார்.
எழுத்துக்கள் எழுதிய பந்துகள்
உயர்வகுப்புகளில் மொழிப்பாடங்களுக்கு இந்தச் செயல்பாட்டை பயன்படுத்தலாம். குழுவாக மாணவர்களைப் பிரிக்க வேண்டும். வழக்கம் போல் ஆசிரியர் எழுத்துக்கள் எழுதிய பந்துகளை உயரே தூக்கி எறிய வேண்டும். ஒவ்வொரு குழுவும், அவர்கள் பிடித்த பந்துகளிலுள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி வார்த்தைகளை உருவாக்க வேண்டும். அதிகப்படியான வார்த்தைகள் உருவாக்கிய குழு வெற்றி பெற்ற குழுவாகும். சிறியசெயல். பெரிய மாற்றத்தை வகுப்பில்உருவாக்கும். உங்களைக் குழந்தைகளுடன் இணைக்கும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர், பள்ளி ஆசிரியர், தொடர்புக்கு:saran.hm@gmail.com