

முடிவுசெய்யத் தேவையான நோக்கமும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும் தெளிவாகத் தெரிய என்ன செய்ய வேண்டும்? என்று வினவினாள் பாத்திமா. யாரேனும் இருவர் வகுப்பறைக்கு முன்னே வருகிறீர்களா, ஒரு பயிற்சிசெய்ய வேண்டும் என்றார் எழில். மதியும் முகிலும் முன்வந்தனர்.
முதல் பருவ இடைத்தேர்வில் கணிதப் பாடத்தில் நீ எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை. அதற்கான காரணம் உனக்குத்தெளிவாகத் தெரியவில்லை. அதனை நீ முகிலிடம் கூறுகிறாய் என்று மதியிடம் விளக்கினார் எழில். மேலும் முகிலிடம், “மதி, என்ன சொன்னாலும் நீ ‘ஏன்’ எனக் கேட்க வேண்டும்” என்று கூறிவிட்டு, “ம்.. பேசுங்கள்” என்றார். அவர்கள் உரையாடத் தொடங்கினர்.
மதி : இடைத்தேர்வில் கணிதப் பாடத்தில் மதிப்பெண் குறைந்துவிட்டது
முகில் : ஏன்?
மதி : சரியாக எழுதவில்லை
முகில் : ஏன்?
மதி : சில வினாக்கள் புரியவில்லை
முகில் : ஏன்?
மதி : ம்… ம்… அவை நேரடியாகக் கேட்கப்படவில்லை. சுற்றி வளைத்துக் கேட்கப்பட்டிருந்தன.
முகில் : ஏன்?
மதி : கணிதக் கோட்பாடுகளைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என அறிய.
நன்று. ஏன் கணிதத்தில் மதிப்பெண் குறைந்தது எனத் தெளிவாகிவிட்டதா? என்று மதியிடம் வினவினார் எழில். தெளிவாகிவிட்டது என்றனர் அனைவரும்.
ஏழு முறை ஏன்?
முடிவுசெய்கையில் நோக்கமும் வாய்ப்புகளும் தெளிவில்லாத பொழுது, அதற்கான சிக்கல் ‘ஏன்’ ஏற்பட்டது என வினவ வேண்டும். அதற்குக் கிடைக்கும் விடையை மீண்டும் ‘ஏன்’ என வினவ வேண்டும். இவ்வாறு ஏழு முறை ‘ஏன்?’ என வினவுவதற்குள் தேடும் விடை கிடைக்கும் என்கின்றனர் மேலாண்மை வல்லுநர்கள்” என்று விளக்கினார் எழில்.
கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற நீ என்ன செய்வாய்? என்று மதியிடம் வினவினான் முகில். கணிதச் சூத்திரங்களை மனப்பாடம் மட்டும் செய்யாமல், அக்கோட்பாடுகளை எனது வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் எனச் சிந்திப்பேன். அதனால் அவற்றின் அடிப்படைகள் தெளிவாக எனக்குப் புரியும். பின்னர், தேர்வில் எப்படிச் சுற்றி வளைத்து வினவினாலும் என்னால் சரியாக விடையளிக்க முடியும் என்றாள் மதி. அருமை என்று மதியைப் பாராட்டினார் ஆசிரியர். மாணவர்கள் கைதட்டி அவளைப் பாராட்டினர்.
தனக்காகவும் பிறருக்காகவும்
கணிதக் கோட்பாடுகளைப் புரிந்து படிக்க வேண்டும் என்று முடிவுசெய்தது யார்? என்று வினவினார். நான் என்றாள் மதி. அதாவது உனக்காக நீ முடிவுசெய்தாய் என்றார் எழில். ‘ஆம்’ என்பதைப்போல தலையாட்டினாள். அவளுக்கானதை அவள்தானே முடிவுசெய்ய வேண்டும்; வேறு யாரால் முடிவுசெய்ய முடியும்? என்றாள் தங்கம்.
வேறு ஆள்களும் முடிவுசெய்வார்களே என்றான் அருளினியன். அப்படியா! என்றாள் தங்கம் கேலியாக. ஆம். நீ அணிந்திருக்கும் சீருடையை நீயா முடிவுசெய்தாய்? என்று வினவினான் அருளினியன். இல்லை. பள்ளி நிர்வாகம் முடிவுசெய்தது என்றாள் தங்கம். அதாவது, உனக்காக பிறர் முடிவுசெய்தனர் என்றான் அருளினியன் புன்னகையோடு. அருமை. நீங்கள் வேறு ஒருவருக்காக முடிவுசெய்திருக்கிறீர்களா? என்றார் எழில். ஓ! நண்பர்களுக்கு பலவேளைகளில் நாங்கள்தான் முடிவுசெய்வோம் என்றான் முகில்.
இதிலிருந்து என்ன புரிகிறது? என்று எழில் கேட்க, ஒருவர் தனக்காகவும் பிறருக்காகவும் முடிவுசெய்கிறார் என்றாள் பாத்திமா. பிறர் அவருக்காகவும் முடிவுசெய்கின்றனர் என்றான் அழகன். “தெளிவாகப் புரிந்துகொண்டீர்கள்” என்று அனைவரையும் பாராட்டினார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்.
தொடர்புக்கு: ariaravelan@gmail.com