

ஒரு எளிமையான கேள்வியோட தொடங்கலாமா? ஒட்டிப் பிறந்த சகோதரர்கள்னு சொல்றோம் இல்லை. இதேபோல, ஒட்டி இருக்கிற நாடுகள் ஒட்டாத நாடுகள்னு சொல்ல முடியுமா? அப்படி எதுவும் இருக்கா? புவியியல் சார்ந்துதான் சொல்லணும்.
‘ஆமாம் சார்… நிச்சயமா சொல்ல முடியும்.’
அட இத்தனை சீக்கிரமா உடனடியா பதில் வரும்னு எதிர்பார்க்கலை. வாழ்த்துகள் உமா. எங்கே எதை வெச்சு இப்படி சொல்லலாம், எதாவது உதாரணம் சொல்ல முடியுமா?
நிச்சயமா சார். நிலப் பரப்பால சேர்ந்து இருந்தா, அதாவது தரை வழியே ஒரு நாட்டுல இருந்து இன்னொரு நாட்டுக்குப் போக முடியும்னா அந்த இரண்டு நாடுகளும் ஒட்டி இருக்குன்னு சொல்லலாம். உதாரணத்துக்கு இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – வங்கதேசம், இந்தியா – சீனா. இந்தியா – நேபாளம். இப்படி உலகம் முழுக்க ஏராளமான நாடுகள் இருக்கு.
அபாரம். உமா, புவியியல் பாடத்தை நல்லா கத்து வச்சிருக்கீங்க. பாராட்டுகள். பெரும்பாலான ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகள் ஒன்னுக்கொண்ணு சேர்ந்துதான் இருக்கு. ஆசியா, அமெரிக்கா கண்டங்கள்லேயும் இப்படி பார்க்கலாம். சரி, ‘ஒட்டாத நாடுகள்’ பற்றி சொல்ல முடியுமா?
ஒட்டாத நாடுகள்
ஏன் முடியாது. நிலப் பரப்பால தனித்து இருக்கிற நாடுகள். அதாவது நான்கு பக்கமும் தண்ணீரால் சூழ்ந்த தீவு நாடுகள் இருக்கு. நமக்குப் பக்கத்துலயே இலங்கை அப்படித்தான் தீவு நாடாக இருக்கு. சரிதானே சார்?
சபாஷ். மிகச் சரியான விடை. திரும்பத் திரும்ப எத்தனை முறைதான் பாராட்டறது? நல்லது. இப்போ, ஒட்டி இருக்குற ஒரு நாடு பற்றித்தான் பேசப் போறோம். ‘பெரிய அண்ணன்’ மாதிரி நடந்துக்குறதா வல்லரசு நாடுகள் மீது குற்றம் சொல்லுவாங்க. அப்படி ஒரு அண்ணன் - அமெரிக்கா. ஒட்டி இருக்குற நாடு – கனடா.
அதிக செல்வந்தர்கள்
வட அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை நீண்டுள்ளது. மொத்த நிலப்பரப்பில் (கடற் பரப்பு சேர்த்து) உலகின் இரண்டாவது; நிலப்பரப்பில் மட்டும் 4-வது பெரிய நாடு. உலகின் மிக நீண்ட கடற்கரை (சுமார் 243000 கி.மீ.) கொண்ட நாடு. அமெரிக்காவுடன் இதன் எல்லை 8000 கி.மீ.க்கும் அதிகம். உலகில் இரு நாடுகளுக்கு இடையிலான மிக நீண்ட சர்வதேச எல்லை இதுதான்.
தலை நகரம் ஒட்டாவா. டொரண்டோ, மான்ட்ரீல், வான்குவர் நகரங்கள் மிகப் பிரபலம். பல்லாயிரம் ஆண்டுகளாக வசிக்கும்ஆதி குடிகள் உள்ளனர். உலகின் மிக அதிக தனிநபர் வருமானம் கொண்ட கனடாவில் இயற்கை வளங்கள் மிகுந்துள்ளன. சர்வதேச வணிகத் தொடர்புகள்; சர்வதேச உறவுகளில் நடு நிலை; உலக அமைதி காப்பதில் முக்கிய பங்கு என்று சர்வதேச அரங்கில் கனடா பெரும் பங்காற்றி வருகிறது.
(கனடாவில் பயணம் தொடரும்)
கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு
போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி
தொடர்பு்ககு: bbhaaskaran@gmail.com