

திருச்சேந்தியின் உயர்த்திய கையிலிருந்த வாளையே கூட்டத்தினர் அனைவரும் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது குதிரையில் ஒரு வீரன் வேகமாக அந்தக் கூட்டத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான். அப்படி அவன் வந்தபோது ஏற்பட்ட குதிரையின் காலடி சத்தத்தைக் கேட்ட திருச்சேந்தி தன் தலையை மட்டும் சற்றே திரும்பிப் பார்த்தார். வரும் வீரன் எங்கிருந்து வருகிறானோ? என்று கணநேரம் யோசித்தார். அடுத்த நொடியே அவன் எங்கிருந்து வருபவன் என்று அவன் உடுத்தியிருந்த உடுப்புகளைப் பார்ந்து, வருபவன் அரண்மனையிலிருந்துதான் வருகிறான் என்பதை உணர்ந்துகொண்டார்.
உடனே சுதாரித்துக்கொண்டவராய் தன் கைகளை இயல்பாய் கீழே இறக்கினார். உடனிருந்த வீரர்களிடம், ’இவனை இழுத்துச் சென்று கூகைச் சிறையில் தள்ளுங்கள். என் கைகளால் அடித்தால் ஒரே வீச்சில் இவன் மூச்சு நின்றுவிடும். அப்படி இவன் இறக்கக்கூடாது. கூகைச் சிறையில் கோட்டான்களிடம் மாட்டிக்கொண்டு, அணு அணுவாய் இவன் மரணிக்கவேண்டும். அத்தோடு இனி எவரும்நம்மை எதிர்க்க கனவிலும்நினைக்க அஞ்சும்படி அதுஅமையவேண்டும்.’ என்று உத்தரவிட்டார்.
வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தினர் மத்தியில் குணபாலனுக்கு ஆதரவான பச்சாதாபக் குரல்கள்ஒலித்தன. ஆவேசத்தில் கோபமானவார்த்தைகளும் வெடித்தன. ஆனாலும் அவை பனியில் நனைந்தபட்டாசுத் திரிபோல மங்கிப் போய்ஒலித்துக்கொண்டிருந்தன. ‘வர வர நம் மன்னரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இந்த திருச்சேத்தி செய்யும் அட்டகாசங்கள் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன’ என்றார் ஒருவர், ‘அட, சுத்த வெவரங்கெட்ட ஆளா இருக்கியே, மன்னருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடக்குது? இங்கெ நடக்குற எல்லா சங்கதியும் அவருக்கும் தெரிஞ்சுதான் நடக்குது. இந்த அநியாயத்தையெல்லாம் பார்க்கக் கூடாதுனுதான் மன்னரோட தந்தையார் அப்பவே கண்ணை மூடிட்டார் போல!’ என்றார் வேறொருவர்.
‘பாவம் இந்தப் பிள்ளை, நம்ம நாட்டுல நடக்குற அநியாயங்களை சகிச்சிக்க முடியாமல் கோபப்பட்டு இப்ப தானும் பேராபத்துல மாட்டிக்கிட்டானே’ என்றனர் சிலர். ‘அவனுக்குள்ளே ஓடுகிற இள ரத்தம் செய்கிற வேலை அது’ என்றனர் வேறுசிலர். ‘இள ரத்தம்தான் இப்போது கோட்டான்களுக்கு இரையாகப் போகிறது’ என்றார் ஒரு பெரியவர். அவரிடம் ஓர் இளைஞன், ‘கூகைச்சிறை என்றால் எப்படி இருக்கும்?’என்று கேட்டான். அதற்கு பதிலளித்தபெரியவர், ‘அது மனிதர்களைக் கொல்லஉதவும் ஒரு கொடூரமான வழிமுறை. அந்தச் சிறையில் ஆயிரக்கணக்கில் கூகைகளை அடைத்து வைத்திருப்பார்கள். அவற்றுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சில கோழி, ஆடுகளை இரையாகப் போடுவார்கள். பசியாக இருக்கும் கூகைகள் அந்த கோழி, ஆடுகளை உயிரோடு இருக்கும்போதே கொத்திக் கொன்று தின்றுவிடும். அரிதாகவே மனிதர்கள் பலியாவார்கள். மனிதர்களை நெருங்க அவை அஞ்சினாலும் இரவானதும் அவற்றின் வீரியம் அதிகமாகும். மனிதன் சிறிது கண் அசந்து தூங்கினாலும் அவனது சதையைக் கொத்திக் கிழிக்க ஆரம்பிக்கும். எனது பால்ய கால நண்பன் ஒருவன் அந்தச் சிறையில் தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டதை என்னால் மறக்கவே இயலவில்லை.’ என்றார். அவர் சொன்னதைக் கேட்ட இளைஞனுக்கோ மூச்சடைத்தது.
திருச்சேத்தியின் வீரர்களுக்கு மக்களின் கோபமும் ஆவேசமும் தெரியாமல் இல்லை. ஆனாலும் அதையெல்லாம் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளாமல், மரத்தில் கட்டப்பட்டிருந்த குணபாலனை அவிழ்த்துவிட்டனர். அவன் எங்கும் ஓடிவிடாதபடி இரு வீரர்கள் இருபுறமும் பலவந்தமாய்ப் பிடித்துக்கொண்டனர். மறுபடியும் அவன் உடலில் சங்கிலிகளை கோத்து தங்களது பிடியை இறுக்கினர். முன்னால் இருவர் இழுத்துச் செல்ல, பின்னாலிருந்து இருவர் நெட்டித் தள்ளி கூகைச் சிறையை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
அவர்களைக் கூட்டமும் பின்தொடர்ந்தது. அப்படி வந்த கூட்டத்தினரை அந்த வீரர்களின் தலைவன்மிரட்டலாக விரட்டியடித்தான். கூட்டமும் கொஞ்சங்கொஞ்சமாகப் பின்தங்கி, ஒரு கட்டத்தில் நின்றேபோனது.
குணபாலனுக்கோ தான் இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடப் போகிறோம் என்கிற எண்ணம் துளிர்விட்டதுமே கண்கள் இருண்டன. என்னதான் வீரனாக இருந்தாலும் பயப் பந்து அடிவயிற்றிலிருந்து மேலெழுந்து வந்து நெஞ்சைக் கவ்வி, தொண்டையை அடைத்துச் சென்றது. இதிலிருந்து எப்படி தப்பிப்பது? ஏதாவதுவழி இருக்கிறதா? என்று பலவாறுஅவனது மூளை யோசித்துக்கொண்டே வந்தது.
அப்போது...
(தொடரும்)