

ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் காலை நேரம் என்பது மிகவும் பரபரப்பாகவே இருக்கும். வீட்டிலுள்ள பெண்களுக்கு நான்கு கைகள் இருந்தாலும் செய்து முடிக்க முடியாத வேலை. சுழன்று சுழன்று வேலை செய்ய வேண்டும். காலை உணவை குழந்தைகளுக்குக் கொடுப்பது என்பது மிகவும் சாகசமான வேலை.
கூட்டு குடும்பமாக இருந்த நிலைமை மாறி தனிக்குடும்பமாக மாறிவிட்ட நிலையில் பெற்றோரும் குழந்தைகளும் ஒரே நேரத்தில் வீட்டைவிட்டு வேலைக்கும் பள்ளிக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் காலை உணவிற்கு அதிக அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மிகத் தாமதமாக எழும் குழந்தை, மிக அவசரமாக பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பதால் காலை உணவை தவிர்க்க ஆரம்பிக்கிறது. அதனால் பெற்றோரும் பாலையோ ரொட்டித் துண்டையோ அவசர அவசரமாக திணித்து விடுகின்றனர். பல நேரங்களில் நொறுக்குத்தீனிதான்.
உறக்கத்துக்கு பிறகு...
நாள் முழுமைக்குமான ஆற்றல் காலை உணவிலிருந்துதான் கிடைக்கிறது. இரவு உணவை உண்டபின் எட்டுமணி நேர இடைவெளிக்குப் பின் கட்டாயம் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் நாம் உறங்கிக் கொண்டிருந்தாலும் நம் உடல் அனிச்சையாக வேலை செய்து கொண்டிருக்கும். இரவில் இழந்த ஆற்றலை உடலுக்கு காலை உணவின் மூலமே கொடுக்க முடியும். காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் பித்தம் மெதுவாக தலைக்கு ஏறும். பின் வயிற்றுப்புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் வரை கொண்டுவந்து சேர்க்கும். காலையில் புத்திசாலித்தனமாக வேலைசெய்யவும் நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்திருக்கவும் காலை உணவு கட்டாயம் வேண்டும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
(திருக்குறள்)
உண்ட உணவு செரிப்பதற்கான காலஇடைவெளி தந்து, உணவு அருந்துவர்களின் உடலுக்கு வேறு மருந்து தேவையில்லை என்கிறது வள்ளுவம். காலை உணவைத் தவிர்த்தால் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.
நன்மைகள்
காலை உணவு உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை வழங்குகிறது. எடையைக் கட்டுப்படுத்த முடியும். காலை உணவை உட்கொள்ளும்போது உடல் பருமனைத் தடுக்கலாம். சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும். கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. தசை வளர்ச்சியை அதிகரிக்கிறது.
அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். காலைஉணவை கஞ்சியாகக் குடித்து வயல்வெளியில் கடுமையான வேலை செய்த காலம் மாறிவிட்டது. கஞ்சியென்பது இன்று பரிகாச உணவாக மாறிவிட்டது. இளைஞர்கள் அதீத உடலுழைப்பு கோரும் வேலையை இன்று செய்வதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பானங்களை பருகத் தொடங்கி விட்டனர். காலை உணவைத் தயாரிப்பது அவ்வளவு கடினமான செயல் அல்ல. தினையரிசிப் பொங்கல் வளரும் குழந்தை உள்ள வீட்டுக்குப் போதுமானது. சத்துமாவுக் கஞ்சியை வீட்டிலே செய்து கொடுக்கலாம். பெரியவர்கள் சிறுதானியமாக இருந்தாலும் அடையாகவோ, தோசையாகவோ, உப்புமாவாகவோ பிற காய்கறிகளுடன் சேர்ந்து சாப்பிடுவது நல்லது.
இன்றைய ஸ்பெஷல்:
சத்துமாவுக் கஞ்சி
சிவப்பு சம்பா அரிசி, முளைக்கட்டி உலரவைத்த பாசிப்பயிறு, சிவப்புக்கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை, நிலக்கடலை, பார்லி அரிசி, சம்பா கோதுமை, தினையரிசி, கேழ்வரகு, வரகரிசி, குதிரைவாலி, முந்திரி,பாதாம், சுக்கு, ஏலக்காய் எல்லாம் 250 கிராம் அளவில் சேர்த்து வறுத்து, மாவாகப் பொடி செய்து கொள்ள வேண்டும். சுவைக்கு ஏற்றார்போல உப்பையோ, நாட்டுசர்க்கரையோ கஞ்சியில் சேர்த்துக்கொள்ளலாம். உற்சாகமான காலைப்பொழுதாக மாறும்.
(தொடர்ந்து ருசிப்போம்)
கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மாதிரிப் பள்ளி, திருப்பத்தூா் மாவட்டம்.
தொடர்புக்கு: devavino86@gmail.com