மாறட்டும் கல்விமுறை - 2: வாய்ப்பு உருவாகிறதா? பறிபோகிறதா?

மாறட்டும் கல்விமுறை - 2: வாய்ப்பு உருவாகிறதா? பறிபோகிறதா?
Updated on
2 min read

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி பெற்றோரின் எதிர்பார்ப்பை ஆட்டங்காணச் செய்துள்ளது. இருக்கும் பல வேலைகள் காணாமல் போகின்றன. சில வேலைகள் புதிதாய் முளைக்கின்றன. எதையுமே கணிக்க முடியாத நிலை. அதனாலேயே குழப்பம்.

இதுவரை நடந்த வழக்குகளையும் வழங்கிய தீர்ப்புகளையும் அலசிப் பார்க்க செயற்கை நுண்ணறிவால் இயலும். அதன் திறமை மனித நினைவாற்றலுக்கு அப்பாற்பட்டது. பல நூறு மூத்த வழக்குரைஞர்கள் ஒன்று சேர்ந்தாலும் அதன் திறமைக்கு அருகில் செல்லவே முடியாது. அதுபோல சீனியர் மருத்துவருக்கும் வேலை இல்லை.

குழந்தைகள் அடிப்படை மொழியறிவும் எண்ணறிவும் பெற்றுவிட்டால், எந்தத் துறையையும் தேர்ந்தெடுத்துத் தானாகவே கற்றுக்கொள்ளலாம் என்ற நிலை ஆசிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பள்ளிக்கூடங்களே காணாமல் போகும் காலம் வரலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

கதை, கவிதை, கட்டுரை, திரைக்கதை எழுதுபவர்களுக்கு வேலையில்லை. நாம் விரும்பும்படி ஓவியம் வரைந்து தரும் செயலியும் இருப்பதால் ஓவியர்களுக்கும் வேலையில்லை. அதிகம் சிந்திக்கத் தேவையில்லாத, இயந்திரத்தனமான வேலைகளை ரோபோக்கள் செய்கின்றன. ஓட்டுநர்கள் இல்லா ஊர்திகள் வரப்போகின்றன. கேமராவின் விழித்திரை நம்மைஅடையாளம் கண்டுபிடித்து லேசர் கதிர்களிடம் சொல்லி இயக்கும் தானியங்கி கதவுகள் வந்துவிட்டன. வங்கி ஊழியர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளது. இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

உருவாகும் வாய்ப்புகள்

கைபேசி, இணையம், கணினி ஆகியவற்றை மக்கள் அனுதினம் பயன்படுத்துகின்றனர். எனவேஒரு பொருளை விளம்பரம் செய்ய இணைய வழியே சிறந்தது. இதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று பெயர். இத்துறையின் நுணுக்கங்களை அறிந்தவர்களுக்கு பெரும் வாய்ப்பு காத்திருக்கிறது.

கணினித்திரையை ஒருவர் எத்தனை நேரம்பார்க்கிறார், அவர் எவற்றையெல்லாம் பதிவிறக்கம் செய்கிறார், பங்குச்சந்தையில் எந்தெந்த பங்குகளின் விற்பனை தொடர்ந்து லாபத்தில் இருக்கின்றன அல்லது நட்டத்தில் இருக்கின்றன,வணிக வளாகங்களில் வந்து செல்வோரின் எண்ணிக்கை, விற்பனையான பொருட்களின் தகவல்கள்... என ஒவ்வொரு செயல்பாடும் கணினியில் தரவுகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பெருந்தரவுகளை அலசி ஆராய்ந்து வருங்காலத்தைக் கணிக்கவும் முடிவுகள் எடுக்கவும் திறமையுள்ளவர்களுக்கு பெரும் வாய்ப்பு காத்திருக்கிறது.

மக்களை ஈர்க்கும் வகையில் பேசவும், புதுமையான கோணத்தில் கருத்துகளை அலசவும், பொருத்தமான காணொளிகளைக் கோர்த்து ஓர் அலைவரிசை தொடங்கக்கூடியவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

பெற்றோரின் நிலைமை...

பெரும்பாலான பெற்றோருக்கு மேற்குறிப்பிட்டவை போன்ற வேலைவாய்ப்புகள் அறிமுகமில்லாதவை. அதனாலேயே பெரும் குழப்பம். தத்தம் குழந்தைகளுக்கு இது போன்ற துறைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் திறமையும் இருக்கிறதா? அதை கண்டுபிடிப்பது எப்படி? அப்படியே இருந்தாலும் அதற்கேற்ப தயாராவது எப்படி? போன்ற ஏகப்பட்ட கேள்விகள் ஏற்கெனவே இருந்த குழப்பத்தை மனஅழுத்தமாக மாற்றிவிடுகிறது. இத்தகைய மன அழுத்தம் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொள்கிறது. வீட்டின் அமைதி குலைகிறது.

ஒரு குறிப்பிட்ட வேலையை இலக்காக நினைத்து, அதற்கான ஆயத்தமாகி, எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று யோசித்துப் பழகியவர்களுக்கு இந்தக் குழப்பம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கண்ணுக்குப் புலப்படாத மேலும் ஒரு காரணி

நுண்ணுயிரியல் துறையில் நடந்து கொண்டிருக்கும் ஆய்வு மனித குலத்தின் சராசரி ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளது. மரபணு மாற்றம் மூலம் பாரம்பரிய நோய்களைக் கூட தடுக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளார்கள். பல நாடுகள் பணிஓய்வுக்கான வயது வரம்பைக் கூட்டியுள்ளன.

இப்படி எதிர்பாராத மாற்றங்களுக்கு ஏற்றார் போல நம்மை மாற்றிக் கொள்வது எப்படி? அதற்கு நமது கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்கள் என்ன?

(தொடர்ந்து பேசுவோம்)

கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை.

தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in