கதை நேரம்: வெற்றிக்களிப்போடு

கதை நேரம்: வெற்றிக்களிப்போடு
Updated on
1 min read

பத்தாம் வகுப்பு படிக்கும் பாரி ஏதோ வெறுப்பில் மூழ்கி இருந்தான். அம்மா கல்லூரிப்பேராசிரியர் என்பதால் கல்வியின் அவசியத்தைப் போதித்தபடி இருந்தாள்.

ஏனோ அம்மாவின் அறிவுரை பாரிக்கு வேப்பங்காயா கசந்தது. பெரிய படிப்பு, பதவியின்னு வாழறதுதான் வாழ்வா என்ன? ஊரில் இருந்து அம்மாவோட அம்மாஅப்பா வந்தா அப்பாக்குப் பிடிக்கறது இல்ல. அப்பாவோட அம்மா அப்பா வந்தா அம்மாவுக்குப் பிடிக்கறது இல்ல. அம்மாவோட அம்மா அப்பாவ கவனிச்சுக்கத் தாய்மாமா இருக்காரு. அதுமாதிரி அப்பாவோட அம்மா அப்பாவ அப்பா வச்சுக் காப்பாற்றுவதுதானே முறை.

வீட்டில் பிரச்சினை வருவதால் பாரியின் அப்பா போனமாதம் ஒரு முடிவெடுத்தார். எழுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பணம் கட்டிச் சேர்க்கும் முதியோர் இல்லத்தில் தன் அம்மா அப்பா இருவரையும். சேர்த்துவிட்டார்.

தாத்தா பாட்டி இருவரும் இங்கு இருக்கும்போது எவ்வளவோ நாட்டுப்புறக் கதைகள் சொல்வார்கள். பாரி குழந்தையாக இருந்தபோது அவனைச் சீராட்டி பாராட்டி வளர்த்தது அவனது பாட்டிதான்.

பாரி தன் தாத்தாவுக்கு அலைபேசி வழியாகப் பேசினான்.

“ பாட்டி நலமா தாத்தா?”

“அவளுக்குத்தான் மனநிலை சரி இல்ல. சரியா தூங்கறது இல்ல. சாப்பிடறது இல்ல. எதையோ பறி கொடுத்தமாதிரி இருக்கா. பேசாம நாங்க இரண்டு பேரும்கிராமத்துக்குப் போலாம்ன்னு இருக்கோம் பேராண்டி”

“அங்கு போய் என்ன செய்வீங்க.”

“ எனக்கு உடம்புல தெம்பு இருக்கு. காடுதோட்டத்தில பாடுபட்டு உன் பாட்டிய காப்பாத்துவேன்”

“பாரி தன் தாத்தா பாட்டியின் நிலைமையை உணர்ந்து பார்த்தான்”

பாரி தன் அம்மா அப்பாவிடம் வந்தான். அவன் முகத்தில் சோகம் கவ்வியிருந்தது.

“ நான் படிக்கப்போகல….”

” என்னடா ஆச்சு உனக்கு? ” அம்மா அப்பா இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

“படிச்சு என்ன பயன்? நீங்க தாத்தா பாட்டிய முதியோர் இல்லத்தில் சேர்த்த மாதிரி நாளை என் பையன் என்னையும் என் மனைவியையும் முதியோர் இல்லத்தில் சேர்ப்பான்… அப்ப நான் அனாதையா தாத்தா பாட்டி மாதிரி கஷ்டப்படனும்… பேசாம இப்பவே என்னை அனாதை ஆசிரமத்தில் சேர்த்திடுங்க. உங்களுக்குச் சிரமம் இருக்காது”

பாரியின் அம்மா வாய் அடைத்து நின்றாள். கணவனிடம் தன் தவறுக்கு வருந்தினாள்.

“எங்களுக்குப் புத்தி புகுத்திட்ட. உன் தாத்தா பாட்டிஇருவரையும் முதியோர் இல்லத்தில் இருந்து கூட்டிகிட்டு வந்தர்றோம். நாளை அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் பள்ளிக்குக் கிளம்பிப்போவியாம்.”

பாரியின் அப்பா அம்மா இருவரும் அவசர அவரமாக் கிளம்பிப் போனார்கள். முதியோர் இல்லத்தில் இருந்து தாத்தா பாட்டியை அழைத்துவந்து விட்டார்கள்.

மறுநாள் பாரி பள்ளிச் சீருடையில் மிளிர்ந்தான். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றான். வெற்றிக்களிப்போடு பள்ளிக்குக் கிளம்பிய பாரியைப் பாட்டி முத்தமிட்டு வழியனுப்பி னாள்.

கட்டுரையாளர்: எழுத்தாளர், கல்லூரி பேராசிரியர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in