கற்றது தமிழ் - 2: பாரி மகளிர் பாடிய பாட்டு

கற்றது தமிழ் - 2: பாரி மகளிர் பாடிய பாட்டு
Updated on
2 min read

எங்க வீட்லயும் ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அங்கவை. சங்கவை என்று முகத்தில் கரிய சாயம் பூசப்பட்ட இரண்டு பெண்களை ரஜினிக்கு அறிமுகப்படுத்தி, வாங்க வந்து பழகுங்க என்றவாறு நகைச்சுவை செய்துகொண்டிருந்தார் சாலமன் பாப்பையா. தொலைக்காட்சியில் இந்தக் காட்சியைக் கவனித்தவாறே உள்ளே வந்தான் சுடர்.

அவங்க மகள்கள அவங்களே இப்படி நகைச்சுவைங்கிற பேர்ல கிண்டல் செய்ய முடியுமா என்ன... எப்படித்தான் திரைப்படங்கள்ல மட்டும் இப்படியெல்லாம் நகைச்சுவைக் காட்சிகளை எடுப்பாங்களோ என்று சலித்துக்கொண்டான் குழலியிடம்.

குழலி: அங்கவை சங்கவைங்கிற பெயர்கள எங்கயாவது இதுக்கு முன்னால கேள்விப்பட்டிருக்கியா சுடர்?

சுடர்: ம்... பாரியோட பிள்ளைகள் தான. அவங்க இரண்டு பேருக்கும் ஔவையார் தான் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுத்தாங்கன்னு ஒரு கதை கேட்டிருக்கேன்.

குழலி: ஆமா சுடர். நீ சொல்ற பாரி மகள்கள் தான் அவங்க. புறநானூறுல பாரி மகளிர் எழுதினதா ஒரு பாட்டு இருக்கு.

சுடர்: ஓ... அவங்க பாடல் கூட எழுதியிருக்காங்களா...

குழலி: அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்னு தொடங்குற ஒரு பாட்டு. அஞ்சே அஞ்சு வரிதான் இருக்கும். ஆனா, சங்க காலத்துல போர் எவ்வளவு துயரத்தக் கொடுத்துச்சு, பேரரசர்கள் எப்படி குறுநில மன்னர்கள, பாரி போன்ற வள்ளல்களை எல்லாம் போர்ல வென்று மூவேந்தர்களாக உருவானாங்கன்னு ஒரு பெரிய வரலாற்றையே சொல்லக் கூடிய பாட்டுன்னு எங்க ஆசிரியர் அந்தப் பாட்டைப் பத்தி விரிவாச் சொன்னாங்க.

சுடர்: இவ்வளவு செய்திகள அஞ்சு வரிக்குள்ள சொல்ல முடியுமா...

குழலி: ஆமா சுடர். சங்க இலக்கியப் பாடல்களோட தனிச் சிறப்பே அதான். வரிகள் குறைவுதான். அந்தப் பாடல்கள் சொல்லக் கூடிய பொருள் ரொம்ப ஆழமானது. கவித்துவமானது. நாடகக் காட்சி போல, நம்மோட கண்கள்ல காட்சிகளை விரிய வைக்கிற அளவுக்குச் சிறப்பான சொல் முறை கொண்டதுன்னு சங்கப் பாடல்களப் படிக்கறப்ப நமக்கே தோணும்.

சுடர்: இந்த அற்றைத்திங்கள் பாட்டைப் பற்றிச் சொல்லேன். அவ்வளவு பொருள் நிறைஞ்சபாட்டை நானும் தெரிஞ்சுக்க வேண்டாமா...

குழலி: புறநானூற்றுல வருது இந்தப் பாட்டு. எட்டுத்தொகை நூல்கள்னு சொல்வாங்க இல்ல. அதுல ஒன்னுதான் புறநானூறு.

சுடர்: அன்னைக்கு அகம், புறம்னு பேசிக்கிட்டிருந்தோமே. அது தானா குழலி. புறநானூறுல போர் பற்றிதான் பாடியிருக்காங்களா?

குழலி: ஆமா சுடர். போர், அரசர்கள், வீரம், கொடை போன்ற செய்திகளப் பேசுறதுதான் புறம்.முல்லைக்கே தன்னோட தேரைத் தந்த அந்த பாரி, தன்னோட மக்களுக்கு எவ்வளவு நல்லவனா இருந்திருப்பான். அந்தப் பாரியோட பறம்புமலையைக் கைப்பற்ற பெரிய வேந்தர்கள் முயற்சி செய்தாங்களாம். ஆனா அவங்களால முடியல.

சுடர்: ஓ... இந்தப் பாட்டு பாரியோட வீரத்தைப் பற்றித்தானா...

குழலி: கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா, இந்தப் பாட்டை பாரியோட மகள்கள் பாரியின் இறப்புக்குப் பின்னால் பாடியிருக்காங்க. அன்று ஒருநாள் அழகான முழுநிலவு நாள். அன்றைக்கு தந்தை பாரி தங்களோட இருந்தார். அவங்களோட அழகான, செழிப்பான பறம்பு மலையும் அவங்க கிட்டதான் இருந்துச்சு.

ஆனா இன்னைக்கு இந்த முழுநிலவு நாள்ல தந்தையும் இல்ல. தந்தை ஆண்டு வந்த பறம்பு மலையும் அவர்கள் கிட்ட இல்ல. போர்ல நேர்மையா பாரியை வெல்ல முடியாத வேந்தர்கள் சூழ்ச்சியால் வென்றாங்கன்னு சொல்ற இந்தப் பாட்டு, உண்மையிலயே நம்ம மனசையும் கலங்க வைக்குதில்ல.

சுடர்: குழலி, இந்தப் புறம் பற்றி இலக்கணங்கள் என்ன சொல்லுதுன்னும் எனக்குத் தெரிஞ்சுக்கணும்.

குழலி: நேரமாகுது. உங்க அம்மா தேடிட்டிருப்பாங்க. நாளை பார்க்கும்போது பேசுவோம் சுடர்.

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in