போவோமா ஊர்கோலம் - 2: மழையில் நனைந்த ஜோக் பால்ஸ்

போவோமா ஊர்கோலம் - 2: மழையில் நனைந்த ஜோக் பால்ஸ்
Updated on
2 min read

நம்முடைய முதல் நாள் பயணம் முர்டேஷ்வர் நோக்கி சென்றது. ஏற்கெனவே நான் சொன்னதுதான். அன்றைய இலக்கு என்னவோ முர்டேஷ்வர் செல்ல வேண்டும் என்பது தான். ஆனால் போகும் வழி என்னவோ மனம் போன போக்கில் தான். ஆமாம் அப்படித்தான் சொல்லவேண்டும். தமிழக எல்லையான ஓசூரில் இருந்து முர்டேஷ்வர் செல்ல மூன்று வழிகள் இருக்கின்றன. நாம் தேர்ந்தெடுத்தது அதிக கிலோமீட்டர் கொண்ட கொஞ்சம் கரடுமுரடான சாலை.

கர்நாடகா மாநிலம் தும்கூரில் காலைஉணவை முடித்துவிட்டுக் கிளம்பும்போதே மழை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. பருவ மழை ஆரம்பிக்க இன்னும் 20 நாட்கள் ஆகும் என்று கணித்துத்தான் பயணத்தைத் தொடங்கினோம். ஆனால், இயற்கை எப்போதும் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கும். அப்படித்தான் இந்த பயணத்தில் அரபிக்கடற்கரை முழுவதும் மழை கொஞ்சம் கூட பிரியாமல் ஒட்டிக் கொண்டே வந்தது.

மூச்சு முட்டும் அழகு: முதல் நாளே மழை, இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான். அதற்காக பயணத்தை மாற்ற முடியுமா என்ன, ரெயின்கோட்டை மாட்டிக்கொண்டு புல்லட்டை ஸ்டார்ட் செய்தாகிவிட்டது. தேசிய நெடுஞ்சாலையில் எங்களோடு சேர்த்து அந்த மழையும் துணைக்கு வந்தது. மற்ற வழிகள் இருந்தும் இந்த வழியை தேர்ந்தெடுக்க இன்னொரு காரணமும் இருந்தது. அது 'ஜோக் பால்ஸ்'.

நயாகரா அருவி ரொம்ப பிடிக்கும். அப்படி ஒன்று இந்தியாவில் உள்ளதென்றால் அது சத்தீஸ்கர் மாவட்டத்தில் இருக்கும் சித்ரகூட் அருவி எனலாம். அதன் அழகு பிரம்மாண்டமானது. அதேபோன்றதொரு அழகான அருவி முர்டேஷ்வர் செல்லும் வழியில் இருக்கும் 'ஜோக் பால்ஸ்'. ஷரவதி நதியிலிருந்து உருவாகும் இந்த அருவியின் சாரலும் அத்தனை அழகானது. கரடு முரடான சாலையைக் கடந்து வந்து இந்த அருவியை வந்தடைந்தபோது, அத்தனை களைப்பும் காணாமல் போயிருந்தது.

அப்போது தான் பெய்து முடித்திருந்த மழையின் ஈரம், மனதை இன்னும் லேசாக்கியது. இந்தியாவில் இருக்கும் உயரமான நீர்வீழ்ச்சியில் இதுவும்ஒன்று. அதன் அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தமிழ் குரல் கேட்க திரும்பிப் பார்த்தோம். அங்குபணியிலிருந்த செக்யூரிட்டி யாருடனோ தமிழில் பேசிக் கொண்டிருந்தார். சேலத்துக்குக்காரர், கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு பணியில் இருக்கிறார்.

நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்க அவர் எங்களை வேறுஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து பார்த்தபோது மிக பிரமாண்டமாய் இருந்தது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வில் இருந்தோம். மேகங்களுக்கு நடுவே சூரியனும் அப்போது கொஞ்சம் எட்டிப் பார்க்க, பொன்னிறத்தில் மின்னியது நீர்வீழ்ச்சி.

இந்த அற்புதத்தை காட்டிய செக்யுயூரிட்டி அண்ணனோடு ஒரு செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். நீர்வீழ்ச்சியில் இருந்து கிளம்பி கரடுமுரடான சாலைகளில் பயணிக்கத் தொடங்கினோம். அங்கிருந்து 15 கிலோமீட்டரில் ஷரவதி நதி ஆற்றின் கரைமேல் இரும்பு தொங்குபாலம் இருந்தது. அங்கிருக்கும் இன்னொரு குட்டி சுற்றுலாத்தலம். அந்த தொங்குபாலத்தில் வண்டியிலேயே ஒரு ஜாலி ரைட் சென்றுவிட்டு, அங்கிருந்து கிளம்பி இரவு முர்டேஷ்வரை சென்றடைந்தோம். மறுநாள் முழுவதும் முர்டேஷ்வரை வலம்வர வேண்டியதுதான்.

கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in