பூ பூக்கும் ஓசை - 2: லெகோ பொம்மை போன்றது சூழலியல்!

பூ பூக்கும் ஓசை - 2: லெகோ பொம்மை போன்றது சூழலியல்!

Published on

காடுகளை உதாரணமாக எடுத்து கொண்டு கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். சிக்கலான சூழலியல் அமைப்பைக் கொண்டுள்ள காட்டில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. அங்குள்ள மரங்கள் விலங்குகளுக்குப் பழங்களைத் தருகின்றன.

உறைவிடமாக அமைகின்றன. பழங்களை சாப்பிடும் விலங்குகள் அவற்றின் விதைகளைப் பரப்ப உதவுகின்றன. விலங்குகள் உண்ட மிச்சங்கள் லட்சக்கணக்கான பூச்சிகளுக்கு உணவாகி, மக்கி, அங்குள்ள மண்வளம் செழிக்கிறது. காடுகளையொட்டி ஓடும் ஆறுகளில் இலைகள் விழுவதால் அதிலுள்ள அமிலங்கள் நீரில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது...அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? இந்த வாரம் கலந்தாலோசிப்போம் வாருங்கள்.

அந்த நுண்ணுயிர்களை மீன்கள்சாப்பிடுகின்றன. அந்த மீன்களைமிருகங்கள் வேட்டையாடியவுடன் அவற்றில் உள்ள நைட்ரஜன் உள்ளிட்ட சத்துக்கள் மீண்டும் மண்களுக்கே செல்கின்றன. இதன்மூலம் மரங்கள் செழிப்புறுகின்றன.

இப்படியாக காடு என்கிற சூழலியல் அமைப்பு உயிர்ப்புடன் இருப்பதற்கு அங்குள்ள உயிர்கள் அனைத்தும் ஒத்திசைவுடன் ஒருவித சமநிலையில் இயங்குகின்றன. சூழலியல் கட்டமைப்பை லெகோ பொம்மைகளுடன் பொருத்திப் பாருங்கள். அந்தப்பொம்மைகளில் ஒரு பாகத்தை உருவினால்கூட மொத்த அமைப்பும் சிதைந்துவிடும்.

சீர்குலைப்பது யார்? - இந்தப் பன்முகத்தன்மை பெறாத அமைப்புகள் பலவீனமாக இருக்கின்றன. காலநிலை மாற்றமோ, புதிய நோயோ அவற்றை எளிதாக அழித்துவிடுகின்றன. இந்த பன்முகத்தன்மையை சீர்குலைப்பது யார்? மனிதர்கள்தான். 400 கோடி வருட பரிணாம வளர்ச்சியின் விளைவுதான் உயிர் பன்மையம். கடந்த 54 கோடி வருடங்களில்தான் இத்தனை உயிர்கள் தோன்றியுள்ளன. இதனை ‘கேம்ப்ரியன்' வெடிப்பு என்கிறனர் ஆய்வாளர்கள்.

உயிர்களின் வரலாற்றைப் பார்க்கும்போது பூமியில் ஏராளமான உயிர்கள் வாழ்ந்துள்ளன. நமக்கு முன்னாலும் உயிர்கள் இருந்துள்ளன. நமக்கு பின்னாலும் உயிர்கள் வரப்போகின்றன. ஆனால் மனிதன்,தன்னை மட்டும் மையமாக கருதி சுற்றியுள்ள சூழலியல் அமைப்பைச் சிதைக்கிறான். விலங்குகளை வேட்டையாடுகிறான். நிலங்களையும் காடுகளையும் அழிக்கிறான்.

கொசுக்களை ஏன் அழிக்க முடியவில்லை? - தொழிற்சாலைகள், கார்பரேட் நிறுவனங்கள் செய்வது மட்டும் சூழலியல் அழிப்பு அல்ல. வீடு கட்டும்போது பின்புறத்தில் இருக்கும் சிறிய மண் தரையை சிமென்ட்டால் பூசுவதும், குப்பைகளை எரிப்பதும், இலைகள் விழுகிறது என்று வீட்டருகே உள்ள மரங்களை வெட்டுவதும் கூட சூழலியல் அழிப்புத்தான். அவற்றால் நம் சுற்றுப்புற உயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

மனிதர்கள் சில விலங்குகளை மட்டும் முதன்மைப்படுத்துவதும் கூட பாதிப்பை விளைவிக்கிறது. ஐஸ்லாந்தில் வளர்ப்பு பூனைகளால் கடற்பறவைகள் அழிந்தது தெரியுமா? வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? கொசுக்களை ஏன் அழிக்க முடியவில்லை? ஆனால், வலிமையான உயிரினமான டைனோசர்கள் எப்படி அழிந்தன? இப்படி, சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட பல விஷயங்களைப் பார்க்கப் போகிறோம்.

நம்பூமி, அதிலுள்ள உயிருள்ள, உயிரற்ற பொருட்களுக்குமான உறவு, அதன் சட்டதிட்டங்கள் ஆகியவற்றை அறிவதுதான் சூழலியல். இதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு இருப்பதால், இயற்கையின் அங்கமான நமக்கு அதை பாதுகாக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

வாசிப்போம் விவாதிப்போம்: அன்பான ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே, பள்ளி பாடத்திட்டத்தை தாண்டி நமது குழந்தைகளுக்கு கலை, இலக்கியம் அவசியம், நீதி போதனை அவசியம் என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கிவிட்டோம். மகிழ்ச்சி! ஆனாலும் இவை அத்தனையையும் விட வாழ்க்கைக்கு ஆதாரமானது சுற்றுச்சூழல் அறம். இதற்கென ’வெற்றிக்கொடி’யில் ‘பூ பூக்கும் ஓசை’ எனும் புதிய தொடர் ஆரம்பமாகிறது. சூழலியலின் முக்கியத்தை உணர்த்த வரும் ‘பூ பூக்கும் ஓசை’ தொடரை வாசிப்போம் மாணவச் செல்வங்களுடன் விவாதிப்போம்.

கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in