

பாட்டி வடை சுடும் கதையில் இருந்த நுட்பங்களைக் கண்டுபிடித்தீர்களா? அருமை. அதுபோலவே, கதைகளின் வகைகளையும் தெரிந்துகொள்வோம்.
அரசர் காலத்தில் நடக்கும் விதமாகக் கதை இருந்தால் அது ராஜா – ராணி கதை என்று சொல்லப்படுகிறது. அதேபோல, கதையில் தேவதை வந்து சிக்கல்களை தீர்த்து வைப்பவை தேவதை கதைகள் என்றும், காட்டுக்குள் விலங்குகளை வைத்து எழுதப்படுபவை விலங்கு கதைகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களைச் சுருக்கி தருவது அல்லது அதில் உள்ள சின்னக் கதையை எழுதுவது புராண கதைகள் எனப்படுகிறது.
பெரிய தலைவர்களின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்படுவது வரலாற்றுக் கதைகள் என்று அழைக்கப்படுகிறது. கதையின் பாத்திரங்கள் மந்திரத்தால் வித்தைகள் செய்யும் விதமாக இருந்தால் மாய மந்திரக் கதைகள் என்றும், கடவுளைப் பற்றிய கதைகள் பக்தி கதைகள் என்றும் சொல்லப்படுகின்றன. நாட்டுப்புற பகுதிகளில் உருவான கதைகளை நாட்டார் கதைகள் என்றும், வெளிநாட்டிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கதைகளை அயல்தேசக் கதைகள் என்றும் சொல்கிறார்கள்.
நம் காலத்தில் நடப்பது போல எழுதும் கதைகள் சமூகக் கதைகள் என்றும், மூடநம்பிக்கைகளை விமர்சிக்கும் கதைகள்பகுத்தறிவுக் கதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அறிவியல் உண்மையை விளக்கும் விதத்தில் எழுதப்படுபவை அறிவியல் கதைகள் என்பது உள்ளிட்ட பல வகைகளில் கதைகள் எழுதப்படுகின்றன.
இவற்றில் ஒரு வகை கதையை இன்னொரு வகை கதையுடன் இணைத்து எழுதும் பழக்கமும் உள்ளது. உதாரணமாக, புராண கதையில் மந்திரத் தந்திரங்கள் இடம்பெறும் கதைகளும் உண்டு. வகைகள் என்பது நமது வசதிக்காகப் பிரித்து கொள்வதுதான்.
என்ன பயன்? - நாம் எழுதப்போவது என்ன வகையான கதை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அதற்கு ஏற்ப கதையில் இடம்பெறும் பெயர்கள், கதை நடக்கும் இடம், பேசும் வார்த்தைகள், பயன்படுத்தப்படும் பொருட்கள் என எல்லாமும் கதையின் வகையைப் பொறுத்ததே. உதாரணத்திற்கு, ராஜா – ராணி கதையில் மந்திரி பேசுவதாக உள்ள வசனத்தை இப்போது நாம் பேசுவதுபோல எழுத முடியாது. செந்தமிழில்தான் எழுத வேண்டும்.
அறிவியல் கதை என்பது முழுக்க முழுக்க நிரூபிக்க கூடிய செயல்களை வைத்து மட்டுமே எழுத வேண்டும். அறிவியல் கதையில் மாய மந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
தலைவர்கள், அறிஞர்கள் வாழ்க்கை சம்பவங்களைப் பற்றிய வரலாற்றுக் கதைகளை எழுதும்போது அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மட்டுமே எழுத வேண்டும். அதேபோல, ஆண்டு, ஊர்களின் பெயர் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் தேவை.
இப்படி ஒவ்வொரு வகைக்கும் ஏற்றமாதிரி எழுத வேண்டும். அப்போதுதான், கதையைப் படிக்கும்போது எந்த நெருடலும் இருக்காது.
கதை பாடம்! - மாமன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் நடக்கும் கதை. ஒருவர் வெளியூர் செல்லும்போது தன் நகைகளை, பக்கத்து வீட்டாரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். திரும்ப வந்து கேட்டபோது, தன்னிடம் நகைகள் கொடுக்கவே இல்லையே என்று ஏமாற்றுகிறார். இது நீதிமன்றத்துக்குச் செல்கிறது. இதுதான் கதை. இதில்,மூன்று ஆண், நான்கு பெண் கதாபாத்திரங்கள் உள்ளன. அவற்றுக்கு என்னென பெயர் வைப்பீர்கள். கதை நடக்கும் இடம் எது? அவர்களின் உடை எப்படி இருக்கும்? என்பதை யோசித்து எழுதி அனுப்புங்கள்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com