

கங்கை பிரம்மபுத்திரா நதிக்கரையோர மக்களிடையே பரவ ஆரம்பித்த காலா அசார் மர்மக் கருங்காய்ச்சல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவத் தொடங்கியது. அசாம், மேற்கு வங்கம், பிஹார் மாநில மக்களை பெருமளவு பாதித்ததோடு, காரணம் தெரியும் முன்னரே பாதித்தவர்களில் 95 சதவீதம் நபர்களை காவு வாங்கத் தொடங்கியிருந்தது.
கல்லீரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உள்ளுறுப்புகளைப் பாதித்து உடலை உருக்கி கருமையாக்கி உயிரிழக்கச்செய்யும் அந்தக் கொடிய வியாதி கிழக்கிந்தியாவில் மட்டுமல்லாமல் பிரேசில், கிழக்கு ஆப்பிரிக்கா என உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 76 நாடுகளை பாதித்துக் கொண்டிருப்பதைக் கண்ட மருத்துவ உலகம் வேகமாக அதற்கான காரணத்தையும் கட்டுப்படுத்தும் வழிகளையும் தேட ஆரம்பித்தது.
அச்சத்தில் மக்களும் மருத்துவ உலகமும்! - மலேரியா நோயைப் போலவே அறிகுறிகளை ஏற்படுத்தியது ‘காலா அசார்’ எனும் கருங்காய்ச்சல். இதற்கு காரணமான ஒட்டுண்ணியை டாக்டர் வில்லியம் லீஷ்மேன் மற்றும் டாக்டர் சார்லஸ் டோனவான் இருவரும் 1903-ம் ஆண்டு அடையாளம் கண்டனர். அந்த ஒட்டுண்ணிக்கு 'லீஷ்மேனியா டோனவானி' எனும் பெயரிட்டனர். கொசுவில் நான்கில் ஒரு பங்கு அளவே கொண்ட சிறுபூச்சியான 'சாண்ட் ஃப்ளை' எனும் மணல் கொசுக்கள் வழியாகத்தான் மனிதர்களுக்குள் பரவுகின்றன என்பதையும் கண்டறிந்தனர்.
நோய்க்கான காரணம் தெரிந்ததும் அதைக் குணப்படுத்தும் மருந்துகளைத் தேடும் ஆய்வுகளும் வேகமெடுத்தது. முதலில் மலேரியா மருந்துகளுக்கு இது கட்டுப்படாது என்று தெரிந்ததும், தொடர் ஆராய்ச்சிகள் மூலம் 1913-14 ஆம் ஆண்டுகளில் நரம்பு வழியாக செலுத்தப்படும் 'டார்டர் எமிடிக்' கண்டறியப்பட்டது. ஆனால் அந்த மருந்தின் பக்கவிளைவுகள் நோயைக் காட்டிலும் அதிகமாக இருந்ததைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றது மருத்துவ அறிவியல். அப்போது தான் டாக்டர் உபேந்திரநாத் இதற்கான வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தைத் தேடி தனது ஆய்வை ஆரம்பித்திருந்தார்.
சொல்ல அல்ல செயல்: கேம்ப்பெல் மருத்துவமனையின் எந்தவொரு வசதியுமில்லாத ஒரு சிறிய அறையில், மாதக்கணக்கில் உழைத்த அவரது அயராத முயற்சியின் முடிவாக 1920-ம் ஆண்டு 'யூரியா ஸ்டிபமைன்' எனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இறப்பு விகிதம் 90 சதவீதம் என்ற நிலையில் இருந்த அசாமில் முதற்கட்டமாக அது கொடுக்கப்பட்டது. அன்று இரவே அது 90 சதவீதம் நபர்கள் குணமடைய உதவியது. "
உலக மக்களைக் கொன்று கொண்டிருந்த ஒரு எமனை எதிர்த்து மக்களைக் காப்பாற்றி விட்டார் உபேந்திரநாத். எமனுக்கே எமன்தான் இந்த யூரியா ஸ்டிபமைன் மருந்து” என்று உபேந்திரநாத்தைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார் அப்போதைய சர்வதேச காலா-அசார் கமிஷனின் தலைவரான கலோனல் ஷார்ட்.
அது வெறும் வார்த்தையல்ல. காலனுக்கே காலனாய் விளங்கிய அந்த யூரியா ஸ்டிபமைன் மருந்துதான் அடுத்த பத்தாண்டுகளில் பல லட்சம் மக்களை இந்தக் கொடிய நோயிலிருந்து காப்பாற்றியது என்பதை உலகம் கண்கூடாகக் கண்டது.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com