

தோராயக் கணக்கு போல உத்தேச மதிப்பீடும் மிகவும் அவசியம். கணிதத்தின் கூறுகள் மட்டுமல்ல இது அனுபவமும் சார்ந்தது.
உதாரணத்திற்கு ஒரு வீட்டில் திருமணம். அதற்குப் பலரையும் விருந்தினராக அழைத்திருக்கின்றோம். அனைவருக்கும் சமைத்து உணவு பரிமாற வேண்டும். பெரும்பாலான நிகழ்வுகளில் என்னாகிறது? ஒன்று மிகவும் குறைவாகச் சமைக்கப்பட்டு மீண்டும் சமைக்கும்படியோ அல்லது மிகவும் அதிகமாக சமைக்கப்பட்டு உணவு வீணாவதையோ பார்க்க முடியும். இங்கேதான் உத்தேச மதிப்பீடும் அதன்மூலம் வரும் தோராயக் கணக்கும் கைகொடுக்கிறது. கணக்கு துல்லியமாக துல்லியமாகச் சிக்கல்கள் குறைந்துகொண்டே இருக்கும்.
திட்டமிடுவோம்
நாம் தான் ஒரு விழாவை ஒருங்கிணைக் கிறோம் என்று வைத்துக்கொள்வோம். என்னென்ன அறிய வேண்டும்?
1. எத்தனை நபர்கள் விழாவுக்கு வருவார்கள் என்று நமக்குத் தெரியவேண்டும். அதற்குநாம் எத்தனை நபர்களை அழைத்திருக் கின்றோம் என்ற கணக்கு வேண்டும்.
2. என்ன விதமான, எத்தனை வகையான சமையல் அதற்கு ஏற்ப உணவுப்பொருட்கள், அதற்கு மதிப்பிட வேண்டும்.
3. நபர்களின் வருகைக்கு ஏற்றவாறு அரங்கம், இருக்கைகள் ஏற்பாடு
4. எவ்வளவு மணி நேர நிகழ்வு அதற்கு ஏற்ப அரங்க ஏற்பாடு (வாடகை)
5. அரங்கத்தில் அலங்காரம்
இது இன்னும் போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இதைக் கட்டுப்படுத்துவது இந்த விழாவிற்கான பட்ஜெட். மொத்த செலவுகளும் எவ்வளவு என்ற கணக்கு. அதற்கு என்று நிதி ஒதுக்கவேண்டும், அதிகபட்சம் எவ்வளவு போகலாம் என்ற வரைமுறையும் நமக்கு இருக்கும். மேலே போடப்பட்ட பட்ஜெட்டுக்கும் நம் கையில் இருக்கும் பணத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பார்க்கவேண்டும். விலை ஏறலாம், விலை குறையலாம், பொருட்களின் தேவை கூடலாம்… இப்படி ஏராளமான மாற்றங் கள் வரும்.
இப்போது உத்தேச மதிப்பீட்டில் வந்த பணமும் கையிறுப்பு பணமும் பெரும் வித்தியாசம் இருந்தால்…? மீண்டும் அழைக்கப்போவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், அலங்காரத்திற்கான செலவினங்களைக் குறைக்க வேண்டும், வகை வகையான உணவில் இருந்து 1-2 வகைகளைக் குறைக்க வேண்டும்.
அனுபவ அறிவு
பள்ளியில் நடக்கும் விழாக்களுக்கு ஆசிரியர்களுடன் சேர்ந்த இந்த உத்தேச மதிப்பீடுகளைச் செய்யலாம். அவர்களுடன் உரையாடும்போது போகின்ற போக்கில் சில விஷயங்களைச் சொல்வார்கள். அது எல்லாம் அனுபவத்தால் வந்த பாடங்கள். பெற்றோர் – ஆசிரியர்கள் கலந்துரையாடலுக்கு எத்தனை பெற்றோர்களை அழைத்தால் எத்தனை பெற்றோர்கள் வருவார்கள் என்று அனுபவத்தால் சொல்வார்கள். அடிப்படையான இந்தத் திறன்களை வளர்த்துக்கொண்டால், பயிற்சிகளை மேற்கொண்டால் பணம், நேரம், என எல்லா வளங்களையும் வீணாக்காமல் திறன்படப் பயன்படுத்தலாம், நிர்வகிக்கலாம்.