கதை கேளு கதை கேளு - 31: அடிமை சிறுவன் ஒலாடா

கதை கேளு கதை கேளு - 31: அடிமை சிறுவன் ஒலாடா
Updated on
2 min read

உலகம் முழுவதும் மக்கள் நிறைந்திருக்கின்றனர். பூமியில் மனிதன் பிறந்த காலம் முதல் தற்போது வரை மனிதர்களால் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணம் மகிழ்ச்சி தரக்கூடியது. ஓர் இடத்திலிருந்து, வெறொரு இடத்திற்கு அழைத்துச் செல்வது. புலப்பெயர்வும் அப்படித்தான். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வது. ஆனால் மகிழ்ச்சி தராதது. கண்டங்கள், நாடுகள் கண்டறியப்பட்ட பின்னர், கப்பல் போன்ற போக்குவரத்து சாதனங்களின் உற்பத்திக்குப் பின்னர் இந்த புலப்பெயர்வு மக்களை துன்புறுத்தியிருக்கிறது. பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடுகள், ஏழை நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தின. ஏழை நாடுகளில் மனிதர்களை சிறைப்பிடித்து அவர்களை உயிரினமாக மதிக்காமல் அடிமைகளாக அயல் நாட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டு விற்றன.

ஆப்பிரிக்காவின் இசாகா பகுதியிலிருந்து ஒலாடா என்ற பன்னிரண்டு வயது சிறுவன் அவ்வாறு கடத்தப்படுகிறான். அடிமையாக பணத்துக்கு விற்கப்படுகிறான். பலபேர் கைகளுக்கு அடிமையாக விற்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்.

ஒலாடாவிடம் உழைப்பைப் பெற்றுக்கொண்டு, மேலும் அதிக பணத்துக்கு அவனை விற்கின்றனர் ஒவ்வொரு முதலாளியும். இறுதியில் ராபர்ட் கிங் என்பவரிடம் 40 பவுண்ட்டுக்கு விலை போகிறான். வேலை நேரம் போக மீத நேரத்தில் மீன்பிடிப்பது, கடல் பயணங்களில் பிறருக்கு உதவுவது என சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து, ராபர்ட் கிங் முதலாளியிடமிருந்து , குஸ்தாவாஸ் வாஸா சுதந்திரமானவன் என்ற சான்றிதழைப் பெறுகிறான்.

ஒலாடா கடத்தப்பட்டு அடிமையான பின்னர், அவனுடைய பெயர் கூட அவனுக்கு சொந்தமாக இல்லை. முதலாளிகள் வைத்த பெயர் குஸ்தாவாஸ் வாஸா. குஸ்தாவாஸ் வாஸா தன்னுடைய சுதந்திரச் சான்றிதழைப் படித்துப் படித்து மகிழ்ச்சியடைகிறான். சுதந்திரமாக வாழ்வதுதான் மனிதனுக்கான இன்பம் என்றுநினைக்கிறான். ஒலாடா தன் சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கிய பின்னர்,தன்னைப்போல அடிமையாக இருக்கும் தன் கருப்பு சகோதர சகோதரிகளின் கண்ணீரையும்,வேதனையையும் போக்குவதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை செய்ய வேண்டும். அதுதான் மனிதனுக்கான அடையாளம் என்று உணர்கிறான்.

அடிமைகளின் வாழ்வு

இங்கிலாந்து நாட்டில் ஷார்ப் என்ற வெள்ளை நிறத்தவர், கறுப்பர்களுக்காக வாதாடியும், நண்பர்களைச் சிறுகுழுவாக வைத்துக்கொண்டு கறுப்பின மக்களின் கண்ணீரைத் துடைக்க முயன்று வருவதை அறிந்து, ஒலாடா அக்குழுவினருடன் இணைந்து, தன்னைப் போன்ற அடிமை மக்களுக்கான சுதந்திரத்திற்காக உதவி வருகிறான். இங்கிலாந்து நாட்டின் கரீபியன் கப்பல் போக்குவரத்து வழியே பெரும்பாலும் சரக்கு கப்பல்களே வந்து நின்றிருக்கும். சாங் கப்பல் ஒன்று அடிமைகளை ஏற்றிவந்திருப்பதை அறிந்த ஒலாடா, ஷார்ப் நண்பர்களுடன் கப்பல் பகுதிக்குச் செல்கிறான்.

அடிமை வாழ்வில் எத்தனை அவலமானது என்பதைச் சொல்ல ஒலாடா தான் அனுபவித்த வேதனைகளையெல்லாம் கூறுகிறான். கப்பலின் அடித்தளத்தில் இருள், இருள் என கவிந்து கொண்டிருக்கும் அப்பகுதியில்தான் அடிமைகள் அடைத்துவைக்கப்படுவார்கள் என்றும் உயிர்வாழத் தேவையான உணவு, உடல்உபாதைகளான மலம், மூத்திரம், வாந்திஎன அனைத்தும் நிகழ்வது இருட்டறையில்தான் என்றும் கைகள் கட்டப்பட்டுஒருவர் மேல் ஒருவராக அடுக்கப்பட்டிருக்கும் அடிமைகள் துர்நாற்றத்தில்தான் உயிர்த்திருக்க வேண்டும் என்றும் ஒலாடா கூறுகிறான். அடிமைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க, துப்பாக்கிக் கொண்டு சுட்டுவிடுவார்களாம், கல்லில் அடிமைகளைக் கட்டிவைத்து கடலில் தள்ளிவிடுவார்களாம்.

சிறார்களுக்கு ஏற்ற நூல்

நிறவெறியினால் கறுப்பர்கள் தாழ்ந்தவர்கள், அவர்கள் அடிமைகள் என்று நடத்திய மனப்போக்கு இப்போதும் குறையவில்லை. மார்டின் லூதர் கிங், ரோசா பார்க்ஸ் போன்றோர் நாமறிந்த கறுப்பின போராளிகள். ஒலாடாவின் வரலாறும் புத்தகமாக உள்ளது. இந்தச் சிறிய நூல் சிறுவர்களுக்கானது. ஓங்கில் கூட்டம் என்ற அமைப்பு மூலம் சிறார்களுக்கான புத்தகங்களை அக்கறையோடு வெளியிட்டு வருகிறார் பிரபு . இவர் பஞ்சுமிட்டாய் என்னும் சிறார் இலக்கிய இதழை குழந்தைகளுக்காக வெளியிட்டு வருகிறார். ஒலாடா வரலாறு சிறார்களுக்கு ஏற்றவகையில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் தன்மை சுதந்திரமாய் இருப்பதன் அவசியம், அடிமைகள் நிலை குறித்து இச்சிறுநூல் சிறார்களுக்கு ஆழமாகச் சொல்லிவிடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in