திறன் - 365 -2: குழந்தைகளைக் கிறுக்க அனுமதியுங்கள்

திறன் - 365 -2: குழந்தைகளைக் கிறுக்க அனுமதியுங்கள்
Updated on
1 min read

சுவரில் கிறுக்கி வைப்பது என்பது குழந்தையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் ஆகும். குழந்தைகள் தங்களை மகிழ்விப்பதற்கான ஒரு வழியாக சுவர்களில் கிறுக்கி வைக்கின்றனர். அதனால்தான், குழந்தைகள் தங்களுக்கு கிடைத்த பென்சில், பேனா, சுண்ணக்கட்டி வைத்து கிறுக்கி வைக்க விரும்புகின்றார்கள். வீட்டுச் சுவர்களே சாட்சி!

உங்களிடம் ஒரு கேள்வி.

கரும்பலகை என்பது ஆசிரியருக்கு மட்டும் சொந்தமா? குழந்தைகளுக்குப் பாடபுத்தகம், பாடக்குறிப்பேடு, பயிற்சிப்புத்தகம் மட்டுமே சொந்தமா?

பெரும்பாலான குழந்தைகள் சாக்பீஸ் எடுத்துக் கரும்பலைகையில் கிறுக்க நினைக்கிறார்கள். அது சாத்தியமில்லாத போது வகுப்பறைச் சுவர்கள், பள்ளிச் சுற்றுச் சுவர்கள், பாத்ரூம் சுவர்களில் கிறுக்கி விடுகிறார்கள்.

குழந்தைகள் கிறுக்குவதைத் தடுக்கக்கூடாது என்பதற்குதானே கீழ்மட்டக் கரும்பலகை உருவாக்கி உள்ளோம். எந்தக் குழந்தை கீழ்மட்டக்கரும்பலகையில் எழுத நினைக்கிறது. கிறுக்கி வைக்கிறது! ஏன்?

குழந்தைகள் நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர்கள் நின்று தானே எழுதுகிறார்கள். குழந்தைகளும் அவர்கள் உயரத்திற்குநின்று எழுதவே விரும்புகின்றனர் அல்லது கிறுக்க நினைக்கிறார்கள். வகுப்பறை குழந்தைகளுக்கானதா? ஆசிரியர்களுக்கானதா?

இருவருக்குமானது. அப்படியெனில் கரும்பலகையும் குழந்தைகளுக்குச் சொந்தம் தானே!

கரும்பலகையில் கிறுக்க அனுமதியுங்கள். கற்றல் கற்பித்தல் சிறக்கும். கற்றல் கற்பித்தல் முழுமையடைய வேண்டும் எனில் குழந்தையும் அச்செயலில் ஈடுபடவேண்டும். ஆசிரியரும் கற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும். அதேநேரத்தில், குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுபவராக இருக்க வேண்டும்.

உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் கரும்பலகையில் ஒரு பகுதியை குழந்தைகள் எழுதுவதற்கு ஒதுக்குங்கள். எந்த தயக்கமும் இல்லாமல் எழுதத் தொடங்குவார்கள்.

திருக்குறளில் தொடங்கும். புகழ்பெற்ற கவிஞர் களின் கவிதைகள் இடம்பெறும். நாளடைவில், சொந்தமாக கவிதை, கதை, சுலோகங்கள் எழுதிஅசத்துவார்கள். சிறந்த ஓவியங்கள் கிடைக்கும். ஆம்! வகுப்பறையில் ஒளிந்துள்ள கவிஞர்கள், ஓவியர்கள், கதையாசிரியர்கள், வசனகர்த்தாக்கள் வெளிப்படுவார்கள்.

கரும்பலகையில் குழந்தைகள் எழுதுவதற்கு அனுமதியுங்கள். சுவர்களில் கிறுக்கி வைப்பது தடுக்கப்படும். மேலும், குழந்தைகளின் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் ஆழ் உணர்வுகளை அறியவும் முடியும். குழந்தைகள் தினமும் கரும்பலைகையில் கிறுக்குவதற்கு அனு மதிப்பதுடன், கற்பித்தல் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம்.

கரும்பலகையில் கிறுக்கி கற்றுக் கொள்வார்கள் என்றீர்கள். எப்படி?

அடிப்படை கணிதச் செயல்பாடுகள், வடிவியல்,தமிழ், ஆங்கிலத்தில் விவரித்தல் போன்ற செயல்பாடுகளுக்குக் குழந்தைகள் கரும்பலகையில் கிறுக்கி வைக்கும் செயல்பாட்டை கொடுக்கலாம். இச்செயல்பாடு இருவர் செய்யும் செயல்பாடு ஆகும். இருவரில் ஒருவர் கரும்பலையில் வரைவார். மற்றொருவர் திரும்பி நின்று வரைவதற்கு விவரிப்பார்.

சிறிய திட்டமிடல். குழந்தைகளின் மனதைக்கவரும். சுவர்களில் கிறுக்கி பாழ்படுத்திகிறார்கள் எனக் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை. இயல்பாகவே குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை உருவாக்க முடியும். பள்ளிச் சுவர்களும் சுத்தமாகும். கரும்பலகையில் கலைப்படைப்புகள் மெருகேறும். அவர்களின் படைப்பாற்றல் திறன் வெளிப்படும்.

குழந்தைகளுக்குப் பிடித்தமான செயல்களைவகுப்பறையில் அனுமதியுங்கள். வகுப்பறை குழந்தைகளுக்கானதாக மாறும். நீங்களும் குழந்தைகளுக்கான ஆசிரியராவீர்கள்.

- க.சரவணன்
கட்டுரையாளர்: எழுத்தாளர், பள்ளி ஆசிரியர், தொடர்புக்கு: saran.hm@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in