

மாணவர்கள் ஒவ்வொருவரும் தான் மணிவண்ணனாக இருந்தால் எந்தப் பாடப்பிரிவை ஏன் தேர்ந்தெடுப்பேன் என்று விளக்கினர். அவர்கள் ஒவ்வொருவரின் விளக்கத்தையும் கூர்ந்துகேட்டு, “அருமை. எல்லாரும் சிறப்பாக முடிவெடுத்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினார் எழில்.
“ஓர் ஐயம்” என்றாள் இளவேனில். ‘என்ன?’ எனக் கேட்பதைப்போல அவளது கண்களை நோக்கினார் எழில். “மணிவண்ணன் தேர்ந்தெடுக்க வேண்டிய பாடப்பிரிவு” என்னும் ஒரேயொரு சூழலுக்கு நாங்கள் அனைவரும் கூறிய வெவ்வேறு விடைகள் எப்படிச் சரியாகும்?” என்று வினவினாள் அவள். “அதானே, ஒரு வினாவுக்கு ஒரு விடைதானே சரியாக இருக்க முடியும்? எல்லாரின் விடையும் எப்படிச் சரியாகும்?” என்று சண்டைக்கு வருபவளைப்போல வினவினாள் மதி.
“பொறு, பொறு” என்று அவளை அமைதிப்படுத்திய எழில், “எல்லாரின் விரும்பமும் முன்னனுபவமும் மனப்பாங்கும் சூழ்நிலையும் ஒன்றுபோல இருக்குமா? வேறுபடுமா?” என்று வினவினார். “வேறுபடும்” என்றனர் அனைவரும் ஒரே குரலில். “அப்படியானால் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம், முன்னனுபவம், மனப்பாங்கு, சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவரவருக்குப் பொருத்தமானதை முடிவுசெய்யும்பொழுது அந்த முடிவுகள் வேறுபட வாய்ப்புண்டா? இல்லையா?” என்று வினவினார் எழில். “வேறுபடத்தான் செய்யும்” என்றாள் மதி சற்றே அடங்கிய குரலில்.
அவளைப் பார்த்து புன்னகைத்த எழில், “ஒரு கதை” என்றார். மாணவர்கள் ஆர்வமாயினர்.
“அமிழ்தினியும் மணிமாலையும் பண்டிக்கைக்குப் புத்தாடை வாங்கக் கடைத்தெருவிற்குச் சென்றனர். அவர்கள் நுழைந்த முதற்கடையிலேயே மணிமாலை தனக்குப் பிடித்த நிறம், வடிவமைப்பு, தனது அளவு, தான் எதிர்பார்க்கும் விலை ஆகியவற்றைக் கூறி தனக்குத் தேவையான ஆடைகளை வாங்கிவிட்டார். அமிழ்தினியோ நான்கு கடைகளுக்குச் சென்றார். எல்லாக் கடைகளிலும் பல நிறங்களில், வடிவங்களில், விலையில் பற்பல ஆடைகளையும் துணிகளையும் அடுக்கிலிருந்து இறக்கிப்போடச் செய்தார். அவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். ஆனாலும் அவரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இக்கதையில் முடிவுசெய்தல் மணிமாலைக்கு எளிதாகவும் அமிழ்தினிக்குக் கடினமாகவும் இருந்தது ஏன்?” என்று வினவினார் எழில்.
“அமிழ்தினிக்கு எந்த நிறத்தில், வடிவில், அளவில், விலையில் தனக்கான ஆடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தெளிவில்லை. அதனால்தான்...” என்று மணிமேகலை சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, “அவர் முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறினார்” என்றான் கண்மணி குறுக்கே புகுந்து.
“அப்படியானால், மணிமாலைக்கு…?” என்றாள் தங்கம். “அவரின் நோக்கம் தெளிவாக இருந்தது” என்றான் காதர். “அதனால்தான் தனக்குத் தேவையான நிறத்தில், வடிவில், அளவில், விலையிலிருந்த பல்வேறு ஆடைகளில் தனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடிந்தது” என்றாள் அருட்செல்வி.
“அதாவது..” என்று எழில் தொடங்கும்பொழுதே, ‘நான் சொல்கிறேன்’ என்பதைப்போல தனது கையை உயர்த்திக்காட்டி, “நோக்கமும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும் தெளிவாக இருக்கும்பொழுது முடிவுசெய்வதில் தடுமாற்றமோ, குழப்பமோ ஏற்படுவதில்லை” என்றான் அருளினியன். “சரியாகச் சொன்னாய்!” என்று பாராட்டினார் எழில்.
“ஆடை வாங்குவதுகூட முடிவுசெய்தலா!” என்று வியந்தாள் கயல்விழி. “ஆம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு முடிவுசெய்தல்தான்” என்றார் எழில். “செய்யாத செயல்..” என்றான் சுடர் வெடுக்கென்று. “அதுவும் ஒரு முடிவுசெய்தல்தான்” என்றார் எழில்.
நீங்கள், முடிவுசெய்ய முடியாமல் எப்பொழுது குழம்பியிருக்கிறீர்களா? ஏன் அவ்வாறு குழம்பினீர்கள் என்பதை இப்பொழுது வகுப்பின் முன்னால் நின்று எல்லாருக்கும் சொல்கிறீர்களா?
(தொடரும்)
கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com