

எளிமையான ஒரு கேள்வியோட ஆரம்பிக்கலாமா. உலகத்துலயே பணக்கார நாடு எது?
அமெரிக்கா... அமெரிக்கா…அமெரிக்கா... போதும் போதும். எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு. இது எந்த அளவுக்கு உண்மை? அமெரிக்காவுல பொருளாதார பிரச்சினை இல்லையா? இதெல்லாம் அப்புறமா பொருளாதாரப் பாடத்துல பார்த்துக்கலாம். இப்போதைக்கு, அமெரிக்கா ஒரு வளமான நாடுன்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டா போதும்.
அமெரிக்கா எங்கே இருக்கு?
அமெரிக்கா என்கிற நாடு, அமெரிக்கா என்கிற கண்டத்துல இருக்கு. வடக்கு அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா என்கிற இரண்டும் சேர்ந்த அமெரிக்கா கண்டம் எவ்வளவு பெரியது தெரியுமா? உலகத்துல இருக்குற மொத்த பரப்புல 28 சதவீதத்துக்கு மேல அமெரிக்கா கண்டத்துல இருக்கு. இதுவே கடல் பகுதி இல்லாம நிலப்பரப்பு மட்டும் வச்சிப் பார்த்தா, உலகத்தோட மொத்த நிலத்துல 8 சதவீதத்துக்கு மேல இருக்கு.
நாம இருக்குற ஆசியா கண்டத்தின் பரப்பளவு எவ்வளவுன்னு சொன்னா அமெரிக்காவின் பரப்பளவு குறித்து நமக்கு எளிதா புரியும். ஆசியா கண்டம் உலகின் மொத்த பரப்பளவுல 30 சதவீதம், மொத்த நிலப் பரப்புல 9சதவீதத்துக்கு சற்று குறைவு. என்ன தெரியுது? அமெரிக்கா கண்டம் ஏறத்தாழ நம்முடைய ஆசியா கண்டம் அளவுக்குப் பரந்து இருக்கு. சரிதானே?
இனிமே அமெரிக்கா நாட்டைப் பற்றிப் பார்ப்போம். வட அமெரிக்காவுல இருக்குற இந்த நாடு, 50 மாகாணங்களை உள்ளடக்கியது. அதனால்தான் இதை நாம், அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் என்கிற பெயர்ல ஆங்கிலத்துல U.S.A.ன்னு (United States of America) அழைக்கிறோம்.
‘கிரேட் சமவெளி’
உலகின் மூன்றாவது பெரிய நாடு இது. கனடா, மெக்சிகோ ஆகிய இரண்டும் அமெரிக்காவை ஒட்டி உள்ள நாடுகள். மக்கள் தொகை 33 கோடிக்கு மேல். தலைநகரம் வாஷிங்டன். நாட்டின் முக்கிய வர்த்தக நகரம் நியூயார்க். அட்லாண்டிக் கடல், பீட் மலை, அப்பலசியான் மலைகள், உலகின் நான்காவது பெரிய ஆற்றுப் படுகையான மிசிசிபி – மிசெளரி ஆறு ஆகியவை அமைந்த பிரதேசம். நாட்டின் மையப் பகுதியில் வடக்கு தெற்காக இந்த நதி பாய்கிறது. வளமான ‘கிரேட் சமவெளி’ மேற்கே நீண்டு இருக்கிறது. அமெரிக்கா நாட்டில் மலைகளும் அதிகம். அலாஸ்காவில் உள்ள ‘டெனாலி’ வட அமெரிக்காவிலேயே உயரமான சிகரம் ஆகும். அலெக்சாண்டர் தீவுகளில் எரிமலைகளும் உள்ளன.
அகன்ற நாடு என்பதால் பல்வகை தட்ப வெப்ப சூழல்கள் நிலவுகின்றன. பெரும்பாலும் குளிர்ச்சியான நாட்கள் அதிகம். குறைந்த மழை கொண்ட தென்மேற்குப் பகுதியில் பாலை நிலம் ஒட்டிய பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. குறைந்த அளவே மழை பெய்கிறது. மெக்சிகோவை ஒட்டிய மாகாணங்களில் வலுவானசூறாவளி வீசுவதும் உண்டு. வெப்பக்காற்று, வறட்சி ஆகியனவும் அமெரிக்காவின் தென் மேற்குப் பகுதியில் உண்டு.
பல்லுயிர் வாழும் பகுதியான அமெரிக்காவில் பல்வகைப் பறவைகள், பூச்சிகள் காணப்படுகின்றன. 60க்கு மேற்பட்ட தேசியப்பூங்காக்கள் உள்ளன. அதே சமயம், அணு சக்தி, காற்று மாசு, காடு அழிப்பு, வன விலங்குகளுக்கு ஆபத்து உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரசினைகளும் உள்ளன.
அமெரிக்காவின் டாலர் இன்று சர்வதேச மாற்று நாணயம் ஆக இருக்கிறது. நியூயார்க் நகர ’வால் ஸ்ட்ரீட்’ பங்குச்சந்தை உலகின் மிகப் பெரிய பங்குச்சந்தை ஆகும். அறிவியல் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா சிறந்து விளங்குகிறது. கணினிகள், செயற்கை நுண்ணறிவு, இராணுவத் தளவாட உற்பத்தி ஆகியவற்றில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இத்துடன் இயற்கை வளங்களும் மிகுந்துள்ளன. சுமார் மூன்று லட்சம் கி.மீ. அளவுக்கு ரெயில்வே நெட்வொர்க் உலகிலேயே மிக நீளமானது.
மக்கள் தொகையில், மண்ணின் மைந்தர்கள், ஆதியினக் குடிகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். சுமார் ஒரு கோடி அளவுக்கு, புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் கொண்ட நாடு. இவர்கள் உலகின்பல நாடுகளில் இருந்து வந்து இங்கே குடியேறியவர்கள். அதனால்தான் அமெரிக்காவுக்கு உலகின் எல்லா நாடுகளிலும் நண்பர்களும் எதிரிகளும் உள்ளனர்.
உலகின் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கிற அமெரிக்கா, அறிவியல் தொழில்நுட்பத் துறையில் உலக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை நல்குவதில் முன்னணி நாடாக உள்ளது. இந்தியாவுக்கு மேற்கே சுமார் 12,000 கி.மீ. தொலைவில் உள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி விமான சேவை உள்ளது. நாள்தோறும் ஆயிரக் கணக்கில் இந்தியர் சென்று வருகிற தோழமை நாடாக விளங்குகிறது – அமெரிக்கா.
இந்த வாரக் கேள்வி:
அமெரிக்காவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சி பற்றிக் குறிப்பு சொல்லுக.
(பயணிப்போம்)
கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com