ருசி பசி -1 புதிய தொடர்: சாப்பாடுக்கு இத்தனை பெயர்களா?

ருசி பசி -1 புதிய தொடர்: சாப்பாடுக்கு இத்தனை பெயர்களா?
Updated on
2 min read

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோயற்ற வாழ்வுக்கு உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் தேவை. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நல்ல ஆரோக்கியமான உடல் இல்லையென்றால் மனிதனால் எதையும் செய்ய முடியாது.

மனிதனுக்கு அடிப்படை தேவையாக இருப்பவை உணவு, உடை, இருப்பிடம். அவற்றுள் முதலில் இருப்பது உணவுதான். மனிதன் உயிர் வாழ முதன்மையான தேவையாக இருப்பது உணவு. உணவிலிருந்து தான் மனிதன் ஆற்றலைப் பெறுகிறான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்கிறது மணிமேகலை. உணவு என்னும் சொல்லிருந்துதான் உணவைக் குறிக்கும் சொற்களான உணா, உண்டி, ஊண், ஊட்டு,ஊட்டம் முதலான சொற்கள் பிறந்துள்ளது.

சுவையான சொற்கள்

அடிசில், போனகம், மூரல், அமலை, அயினி, பொம்மல், மடை, மிசை, உணவு,

புழுக்கல், வல்சி, பாளிதம், அன்னம், பதம், மிதவை, பாத்து, துற்று, உண்டி, சொன்றி, புன்கம், சரு, அசனம் , ஊண் கூழ், புகா, சோறு இவையெல்லாம் உணவைக் குறிக்க பயன்படுத்திய சொற்கள்.

உணவைச் சமைக்க வேண்டும் என்போம். சமைத்தல் என்றால் என்ன?

சமைத்தல் என்ற சொல்லுக்குப் “பக்குவப்படுத்துதல்” என்பது பொருள். பக்குவப்படுத்தி உண்ணும்போது உணவு ஆரோக்கியமானதாக மாறுகிறது. அடுப்பில் ஏற்றிச் சமைப்பதற்கு “அடுதல்” என்று பெயர். சமையல் செய்ய பயன்படும் இடம் “அட்டில்” அல்லது “அடுக்களை” எனப்படும்.

சமையலின் முறைகள்

உணவை எப்படியெல்லாம் சமைக்கலாம் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் எனப் பல முறைகளில் சமைக்கின்றோம்.

ஐவகை நிலங்களும் உணவு முறையும்

பண்டைய தமிழா் தம் நிலங்கள் ஐவகையாக பிரிக்கப்பட்டிருந்தன. மலையும் மலை சார்ந்த இடம் என்பது குறிஞ்சியாகவும், காடும் காடு சார்ந்த நிலம் முல்லையாகவும், வயலும் வயல் சார்ந்த நிலம் மருதமாகவும், கடலும் கடல் சார்ந்த நிலம் நெய்தலாகவும், குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் பாலையாகவும் இருந்தன. நிலம் என்பது நிலவியல் அமைப்பாக மட்டும் அல்லாமல் மக்களின் வாழ்வியலோடு இணைந்தவையாகவும் அமைந்திருந்தன.

குறிஞ்சி நில மக்கள் மலைநெல், தினை மூங்கில் அரிசி, தேன், கிழங்கு வகைகளை உணவாகவும், முல்லை நில மக்கள் வரகு, சாமை உணவாகவும் மருதம்நில மக்கள் நெல்லரிசி, செந்நெல், வெண்நெல் உணவாகவும் நெய்தல் நில மக்கள்மீனும் உப்பும் விற்றுப் பெரும் பொருளால் கிடைக்கும் பொருட்கள் உணவுப் பொருளாகவும் பாலைநிலத்தில் மூங்கிலரிசி, தினை,தேன் உணவுப்பொருளாக இருந்தன.

உயிர் வாழ்வதற்கான தேவையாகமட்டும் பார்க்கபடாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமானது உணவு என்பதை உணர வேண்டும். உணவே மருந்தாகவாழ்ந்த வாழ்க்கை முன்னோர்களுடையது. பசிக்காக உணவு உண்பதைத் தவிர்த்து ருசிக்காக உணவை உண்ணும் தலைமுறை இன்று தலைதூக்கியுள்ளது.

(தொடர்ந்து ருசிப்போம்)

- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மாதிரிப் பள்ளி திருப்பத்தூா் மாவட்டம்.

தொடர்புக்கு: devavino86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in