

‘எல்லோரும் என்னை முட்டாள் என்றுதான் கூப்பிடுவார்கள். நீங்களும் அப்படியே கூப்பிடலாம்’ என்றான் அந்தச் சிறுவன். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் கணித ஆசிரியர் கணக்குப் பாடங்களைச் சொல்லித் தந்து, மாணவர்களை எழுதச் சொன்னார். ரோமன் எழுத்தில் VI IX = XV என்று எழுதுவது நேரமெடுக்கிறது என்று புலம்பிக் கொண்டே ஜன்னல் வழியாக பறவைகள் கத்துவதை வேடிக்கைப் பார்த்தான் லியோனார்டோ.
‘இந்த மரத்தில் எத்தனைப் பறவைகள்! இத்தனைப் பறவைகளுக்கும் எத்தனை இறக்கைகள் இருக்கும்? ஒவ்வொன்றும் இரண்டு நிமிட இடைவெளியில் தனித்தனியாகப் பாடினால், மொத்தமாக எவ்வளவு நேரமாகும்’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் யோசித்துக் கொண்டிருந்தான்.
பகல் கனவுக்குச் சொந்தக்காரன்: ‘லியோனார்டோ! என் வகுப்பிலேயே பகல் கனவா? வெளியே செல் முட்டாள்’ என்று ஆசிரியர் அதட்டியதும் பீசா நகர் வீதியில் அழுதுகொண்டே ஓடினான். தேவாலய முற்றத்தில் கோபுரம் ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ, அது ஒருபக்கம் சாய்ந்துக் கிடந்தது. கட்டட கலைஞர்களின் தவறான கணித நுட்பம் போலிருக்கிறது. அதை எண்களால் நேர்செய்ய முடியுமா என்று கோபுரத்தைச் சுற்றி கணிதத்தோடு சிலர் மல்லுக்கட்டினர்.
எண்களின் ஜாலத்தை லியோனார்டோ வியந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அவன் பகல் கனவில் முற்றிப்போய் கோபுரத்தின்மேல் முட்டிக் கொண்டான்.
‘முட்டாளே. கண்ணைத் திறந்து செல்’ என்றொரு பெண்மணி அதட்டினார். வீடு திரும்பியதும் லியோனார்டோவின் தந்தை அவனைத் திட்டித் தீர்த்தார். ‘ஊர் முழுக்க உன்னை முட்டாள் என்று சொல்கிறார்களே, நீ என்னோடு ஆப்ரிக்கா வா. நான் உன்னை வணிகன் ஆக்குகிறான்’ என்றார்.
எண்களோடு வாழ்க்கை: கடல் வழியாக ஆப்பிரிக்கா செல்லும்போது, இரவு வானில் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே வந்தான். ‘எல்லோரும் ஏன் என்னை முட்டாள் என்று சொல்கிறார்கள். நான் அவர்களைவிட நிறைய விஷயங்கள் சிந்திக்கிறேன் என்று ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் நான் எண்களோடுதான் வாழப் போகிறேன்’ என்ற உத்வேகத்தில் வட ஆப்பிரிக்காவின் பூஜியா நகரில் கால் வைத்தான்.
இங்கு வசிக்கும் வணிகர்கள் ரோமன் எண்களைப் பயன்படுத்துவதில்லை. XVIII என்று எழுதுவதைத் காட்டிலும் 28 என்று எழுதுவது எத்தனைச் சுலபமாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டான். பகலில் தன் தந்தையின் கணக்கு வழக்குகளைப் பார்த்துகொண்டு, இரவில் புதிய எண்களைப் படித்தான்.
இப்படியாக எகிப்து சென்றபோது, பாரோ மன்னர்களின் பின்னங்கள் (Fraction) பற்றியும்; கிரேக்கத்தில் வடிவவியல் (Geometry) பற்றியும் தெரிந்துகொண்டான். ஊர் திரும்பியதும் இந்தப் படிப்பினைகள் வைத்து ‘இந்து - அரபிக் எண்கள்’ என்றொரு புத்தகம் எழுதினான்.
ஒருநாள் தன் வீட்டு முற்றத்தில் முயல் குட்டி ஒன்று ஓடுவதைப் பார்த்து, அதை எடுத்து வளர்க்கத் தொடங்கினான். சில நாட்களில் அந்த முயல் இரண்டு குட்டிகள் ஈன்றது.இன்னும் சில நாட்களில் அந்த இரண்டு குட்டிகளும் தலா இரண்டு முயல்களை ஈன்றது. இப்படியே சென்றால், ஆண்டு இறுதியில் எத்தனை முயல்கள் இருக்குமென்று யோசித்த லியோனார்டோ 1,1,2,3,5,8,13,21,34 என்று ஒரு எண் மாதிரியை வடிவமைத்தான்.
எண்ணுள்ளவரை...: இந்த எண் மாதிரி பின்னர் பல விஷயங்களில் ஒத்துப்போவதை உலகம் அறிந்தது. லியோனார்டோவின் புகழ் ரோம் மன்னர் இரண்டாம் பிரெட்ரிக்கை எட்டியது. அவரைச்சூழ்ந்த பலர் லியோனார்டோவை அழைத்து கடினமான கணிதச் சோதனைகள் தந்தனர். நொடிப்பொழுதில் முடித்துக் காட்டினான். மன்னர் பாராட்டி வழியனுப்பினார். ஆனாலும் மக்களில் சிலர் அவனை இன்னும் முட்டாள்என்றுதான் சொல்லிவந்தனர். ‘இவன் யாருனுதெரியுதா? நம்ம ரோமன் எண்களுக்குப் பதிலா இந்திய எண்களை கண்டுபிடிச்ச முட்டாள் இவன்தான்’ என்று லியோனார்டோவின் காதுபடவே பேசினார்கள்.
எதிர்கால உலகம் இந்து - அரேபிய எண்களுக்கு மாறும்போது நீங்கள் என்னைஉணர்வீர்கள் என்று சொல்லி மறைந்தான் லியோனார்டோ. அவன் கண்டுபிடித்த பிரத்தியேக எண்களுக்கும் ‘ஃபிபோனாச்சி வரிசை’ என்று அவன் பெயரையே சூட்டினார்கள். உலகம் அவனை மேற்கின் அதிமுக்கிய கணிதவியல் அறிஞராகக் கொண்டாடியது. இந்து - அரேபிய எண்களை ஐரோப்பியா முழுக்க பரவலாக்கினான்.
சிறுவயதில் அவன் முட்டிக் கொண்ட பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் அருகிலேயே ஃபிபோனாச்சிக்கு ஒரு சிலை அமைத்தார்கள். தான் வாழ்ந்த காலத்தில் முட்டாள் என்று நிலைத்த பெயர், லியோனார்டோ ஃபிபோனாச்சிக்கு மேதாவி என்ற பட்டத்தை இப்போது வழங்கியிருக்கிறது. எண்ணுள்ள மட்டும் ஃபிபோனாச்சி வாழ்வான்.
- இஸ்க்ரா
கட்டுரையாளர்: சதீஸ்குமார் என்ற இயற்பெயர் கொண்டவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார்.
தொடர்புக்கு: iskrathewriter@gmail.com