நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 31 | இதுவரை கற்றதன் வரவு, செலவு பார்ப்போமா!

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 31 | இதுவரை கற்றதன் வரவு, செலவு பார்ப்போமா!
Updated on
2 min read

அன்றாட வாழ்வில் பணத்தை எவ்வாறு வெற்றிகரமாக கையாள்வது என்பது குறித்து கடந்த 30 அத்தியாயங்களில் பல்வேறு கோணங்களில் அலசினோம். புதிய அத்தியாயங்களுக்குள் புகுவதற்கு முன், அவற்றை ஒருமுறை புரட்டி பார்க்கலாமா?

நேர மேலாண்மை, நிர்வாக மேலாண்மை, தொழில் மேலாண்மை, அலுவலக மேலாண்மை ஆகியவற்றை விட அன்றாட‌ வாழ்க்கைக்கு நிதி மேலாண்மை மிகவும் முக்கியமானது. இதை முழுமையாக தெரிந்து கொண்டால் இல்லறமும், தொழிலும் இன்னும் சிறப்பானதாக அமையும். ஆனால், மற்றவைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், நிதி மேலாண்மைக்கு அளிக்கப்படுவதில்லை. எனவே வீட்டிலும் கல்வி நிலையங்களிலும் நிதி மேலாண்மையின் அடிப்படையை சொல்லித்தர வேண்டும்.

பணத்தின் மதிப்பு, நிதி ஒழுங்கு, நிதி மேலாண்மையின் முக்கியத்துவம், பின்பற்ற வேண்டிய நிதி ஒழுங்குமுறைகள், ஒவ்வொரு தனி நபருக்குமான நிதி இலக்கு, அதனை அடைவதற்கான வழிகள் ஆகியவற்றை முதல் 5 அத்தியாயங்களில் பார்த்தோம்.

பட்ஜெட் எனும் மந்திரம்: நாட்டுக்கு பட்ஜெட் போடுவதை போல வீட்டுக்கும் மாத, ஆண்டு பட்ஜெட் போடுவது அவசியம். வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய செலவு, அநாவசிய செலவு, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றுக்கான பட்ஜெட் எப்படி போடுவது? செலவுக்கு பணம் எடுத்து வைப்பதற்கு முன்பாகவே சேமிப்புக்கு முதலில் எடுத்து வைக்க வேண்டும் என்பதை ஜப்பானிய முறைப்படி பார்த்தோம்.

செலவை குறைப்பதற்கு தேவைக்கும் ஆசைக்கும் இடையிலான வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டும். ஆசையை குறைக்க சிக்கனத்தை கைக்கொள்வது எப்படி? பொருட்களை குறைத்துக் கொண்டு வாழும் எளிமையான மினிமலிச வாழ்க்கை முறை, ஜென் மினிமலிச வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசினோம். அதன்மூலம் அநாவசிய செலவை குறைப்பதே சிறந்த வருமானம் என்பதை புரிந்துகொண்டோம்.

சேமிப்பு எனும் சிறந்த பழக்கம்: சேமிப்பின் முக்கியத்துவம், உண்டியலில் சேமிப்பது, வங்கி, அஞ்சலகம் ஆகியவற்றில் சேமிப்பது, சேமிப்பு கணக்குகளின் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் ஆகியவற்றை அலசினோம். சேமிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறுசேமிப்பு திட்டங்கள், தொடர் வைப்பு, நிரந்தர வைப்பு, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கான பொதுவைப்பு (பொன்மகன்) நிதி திட்டம், அதிக வட்டி வழங்கும் வேறு திட்டங்கள் ஆகியவற்றை பற்றி விரிவாகவே விவாதித்தோம்.

தங்கம் ம‌ற்றும் நிலம்: தங்கத்தை எவ்வாறு முதலீடு செய்வது? நகை சீட்டு மூலம் வாங்கும் முறை, அதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், நகையாக வாங்குவதற்கும் நாணயமாக வாங்குவதற்கும் இடையே உள்ள வித்தியாசம், தங்கப்பத்திரம், ஈ கோல்ட் ஆகியவை வாங்கலாமா? ஆகியவற்றையும் ஆராய்ந்தோம். இதேபோல நிலத்தில் எவ்வாறு முதலீடு செய்வது? சொந்த வீடு கனவை அடைவது எப்படி? என்பது குறித்தும் பார்த்தோம். வங்கி சேமிப்பு, தங்கம், நிலம் ஆகிய மரபான முதலீட்டு முறைகளுக்கு மாற்றாக இருக்கும் பங்குசந்தை குறித்தும், அதன் செயல்பாடு பற்றியும் சென்ற அத்தியாயங்களில் அலசினோம்.

இனி வருபவை: அடுத்ததாக பரஸ்பர நிதியில் எவ்வாறு முதலீடு செய்வது? பத்திரங்களில் முதலீடு வாங்கலாமா? கிரிப்டோகரன்சி போன்றவற்றை எவ்வாறு அணுக வேண்டும்? பணத்தை ஈர்க்கும் வழிகள் என்னென்ன? வருமானத்தை எப்படி பெருக்குவது? கடன் தேவையா? நல்ல கடன், கெட்ட கடனை எப்படி கண்டுபிடிப்பது? கடனை எப்படி சமாளிப்பது? கடனை அடைக்கும் எளிய வழிமுறைகள் என்னென்ன? நிலையான நிதி ஆதாரத்தை த‌க்க வைப்பது எப்படி? செல்வத்தை பத்திரமாக பாதுகாப்பது எப்படி? போன்றவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in