

டாக்டர் என்னோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் கலர்ஃபுல்லா டாட்டூ போட்டிருக்காங்க. எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா வீட்ல அப்பா டாட்டூ சேஃப் இல்லேன்னு விடமாட்டேன்றாரு. டாட்டூ போடறதால நிஜம்மாவே பிரச்சினைகள் எதுவும் வருமா டாக்டர்? இல்லை அப்பாவுக்குப் பிடிக்காததால சும்மா சொல்றாரா? என்று தனது சந்தேகத்தைக் கேட்டிருக்கிறார் பிளஸ் 1 படித்துவரும் திவ்யா.
திவ்யாவின் தோழிகள் மட்டுமல்ல உலகெங்கும் ஏறத்தாழ 25 கோடிப் பேர் குறைந்தது ஒரு டாட்டூவாவது குத்தியவர்கள் என்றால் நம்ப முடிகிறதா! அதிலும் கடந்த 10 வருடங்களில் இத்தாலி, ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் டாட்டூ மிகப்பெரிய தொழிலாகவே மாறியுள்ளது. அப்படியிருக்க திவ்யா கேட்டதைப் போல் இந்த ட்ரெண்டிங் டாட்டூக்கள், பாதிப்புகள் எதுவும் ஏற்படுத்துமா என்பதைத் தெரிந்து கொள்ள டாட்டூ போடும் முறையை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
நமது உடலிலேயே பெரிய உறுப்பான தோல் உண்மையில் பல அடுக்குகளாலானது. இதில் வெளியே தெரியும் எபிடெர்மிஸ் பகுதி என்பது அடிக்கடி உதிர்ந்து வளர்ந்து தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் என்பதால், டாட்டூக்கள் அழியாமல் நிரந்தரமாக இருக்க வேண்டி, எபிடெர்மிஸ்க்குக் கீழே கொஞ்சம் ஆழத்தில் இருக்கும் டெர்மிஸ் பகுதிக்குள் சிறு ஊசிகளின் மூலமாக வண்ண நிற மையை செலுத்தும் முறையைத்தான் டாட்டூ அல்லது பச்சைக் குத்துதல் என அழைக்கிறோம். இது பற்றி பேச இன்னும் நிறைய உள்ளது திவ்யா. தொடர்ந்து பேசுவோம்.
(தொடரும்)
கட்டுரையாளர் : டாக்டர் சசித்ரா தாமோதரன்
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com