Published : 21 Jun 2023 04:11 AM
Last Updated : 21 Jun 2023 04:11 AM
ஏன் எதற்கு என்ற எந்த கேள்வியும் கேட்காதீர்கள். ஏனென்றால் எனக்குள்ளும் ஓராயிரம் கேள்விகள் கனன்று கொண்டிருக்கிறது. அத்தனைக்கும் விடை தேட வேண்டும். என்னை எனக்கே அடையாளம் காட்ட வேண்டும். இனம் மொழி கடந்து பயணிக்க வேண்டும்.
கால் போன போக்கில் வாழ்ந்திட வேண்டும். இதெல்லாம் சாத்தியமா என்று மீண்டும் கேள்வி எழுப்பாதீர்கள். இதே கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. முடியுமா முடியுமா என்று என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டேன். கொஞ்சம் முயற்சியும் பயணத்தின் மீதான காதலும் அதை சாத்தியபடுத்தி இருக்கிறது. அதைத்தான் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன். திகட்டத்திகட்ட கிடைத்த அத்தனை அனுபவங்களையும் ஒட்டுமொத்தமாய் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். படித்துக் கொண்டே பயணப்படுங்கள்.
பயணம் எல்லோருக்கும் பிடிக்கும். சின்ன வயதில் அப்பா மடியில் அமர்ந்துகொண்டு ரயிலில் பயணித்தது பயணத்தின் மீதான காதலுக்கு வித்திட்டது. என்பதின்மத்தில் அந்த காதல் பற்றிப்படர்ந்து வளர்ந்திருந்தது. அப்போதிருந்த பொருளாதார சூழல், சில நெருக்கடிகள், இதெல்லாம் பலகாலம் தடைகளாய் இருந்தது. எப்போது என் தடையெல்லாம் உடைத்துப் பயணப்படுவேன் என்ற கேள்வி மட்டும் என்னைத் துரத்திக் கொண்டே வந்தது.
காலமும் நேரமும் கூடி வர வேண்டும், அதற்காக காத்திருக்க வேண்டும்தான். அதேசமயம் அந்த காதலை மறந்துவிடக் கூடாது அல்லவா. அதனால் ஒரு நாள் இரண்டு நாளில் எங்கெல்லாம் சென்று வர முடியுமோ, அங்கெல்லாம் சுற்றி சுற்றி வந்தேன். அப்படித்தான் பயணத்தின் மீதான என் காதலை எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து வந்தேன்.
பயணமே இலக்கு
அந்த தீ ஒரு நாள் பற்றி எரிந்துபிரகாசமாய் ஜொலித்தது. முடிவெடுத்துவிட்டேன், இதற்கு மேலும் தாமதிக்கக்கூடாது என. பயணம் செய்ய வேண்டும் அது மட்டும்தான். வேறு எந்த இலக்கும் அப்போது இல்லை. மக்களோடு மக்களாக வாழ வேண்டும். அவர்களின் ரசனைகளை ரசிக்க வேண்டும், அவர்கள் உடுத்தும்உடைகளை உடுத்தி அழகு பார்க்க வேண்டும், அவர்கள் சமைத்த உணவை உண்டுஅவர்களாகவே வாழ வேண்டும் என்ற ஆசைக்குத் தீனி போட வேண்டும்.
இலக்கில்லாத பயணமே இலக்காக இருந்தது. வங்காள விரிகுடாவின் கடற்கரை நகரத்துக்குக்காரன். கடல் அவ்வளவு பிடிக்கும். இந்த கடற்கரையின் அழகை அணு அணுவாக ரசித்திருக்கிறேன். இந்த கடல் அவ்வளவு தந்திருக்கிறது. இந்த ஆசையில் இந்தியாவில் இருக்கும் அத்தனை கடற்கரையையும் பார்க்க வேண்டும் என்று பயணத்துக்கான முதல் திட்டம் தயாரானது. இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் சுற்ற வேண்டும். அதற்கு இரு சக்கர வாகனம் தான் சரியாக இருக்கும் என, 'ராயல் என்ஃபீல் ஹிமாலயன்' பைக்கில் இந்தியாவைச் சுத்திவர கிளம்பிவிட்டோம். சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வழியாக முர்டேஷ்வர் நோக்கித் தொடங்கியது நம்முடைய பயணம்.
அரபிக்கடலில் கரையோரத்தில் அழகான ஒரு சின்ன நகரம்தான் முர்டேஷ்வர். ஒரு சின்ன தீவு போன்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாய் ஒரு சிவன் சிலை. ஊரில் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் சிவன் கம்பீரமாய் காட்சி அளிப்பார். அரபிக்கடலில் அழகோடு அந்த தென்னை மரங்களின் மத்தியில் கொஞ்சம் உட்கார்ந்து கொண்டு எதையும் யோசிக்காமல் இருப்பதும் வரம்தான்.
முர்டேஷ்வர் தவறவிடக்கூடாத அனுபவம்.ஏன் என்பதை அடுத்த வாரம் விரிவாகச் சொல்கிறேன்.
கட்டுரையாளர்: இதழியலாளர்,
கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை.
தொடர்புக்கு: bharaniilango@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT