

1. எனது மகன் இப்போ பிளஸ் 1 படிக்கிறான். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுத்துள்ளான். அவனை ரயில்வே துறையில் பணிபுரிய வைக்க ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன படிக்க வேண்டும்? - என்.இளங்கோ, சிங்காநல்லூர், கோவை.
உங்கள் மகன் மிகவும் சிறந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். நாட்டிலேயே அதிக அளவில் வேலைவாய்ப்பினை வழங்கக் கூடிய அரசுத்துறை ரயில்வே ஆகும். தேசத்தின் அனைத்து பகுதிகளையும் இரும்புப் பாதையால் இணைத்து அதனை பராமரிப்பது மட்டுமின்றி வளரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அதிவேக ரயில்களையும் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பபை பெறுகின்றது. ரயில்வே துறையில் நூற்றுக்கணக்கான பணியிடங்கள் உள்ளது. இதில் எழுத்தர் முதல் அலுவலர் வரையிலும், தொழில்நுட்ப பணியிடங்களில் ஐ.டி.ஐ. முதல் பொறியியல் படித்தவர்கள் மற்றும் மருத்துவம் அதனை சார்ந்த துறையில் பட்டம், பட்டயம் பெற்றவர்வரை நேரடியாக நியமனம் பெறலாம்.
இப்பணியிடங்களை மண்டல வாரியாக உள்ள ஆர்.ஆர்.பி. எனப்படும் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு விளம்பரங்களை அவ்வப்போது வெளியிட்டு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது.
இப்போட்டித் தேர்வுகள் பலரும் அறிந்த ஒன்று. ஆனால், SCRA எனப்படும் (Special Class Railway Apprentice Ship) ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்டீஸ் எனப்படும் தேர்வினை பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை. அது குறித்து அடுத்த வாரம் விரிவாக பார்ப்போம்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இயக்குநர்
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.