

பூமி உயிர்களுக்குத் தாயகமாக இருக்கிறது. பூமியில் இதுவரை 16 லட்சம் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னமும் கூட 80 லட்சம் உயிரினங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த உயிரினங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அதன் சுற்றுப்புறத்தோடு ஒன்றுக்கொன்று உறவாடி வருகின்றன.
சொல்லப்போனால், பூமியைக் காப்பாற்றி வருகின்றன. உலகைக் காப்பாற்ற மனிதர்கள் மட்டும்தான் கடவுள் அவதாரம் எடுக்க வேண்டுமா என்ன? நாம் அற்பமாக நினைக்கும் பூச்சிகள்கூட பூமி ஆரோக்கியமாக இருக்க கடும் உழைப்பை நல்குகின்றன. நுண்ணுயிர்கள் நிலங்களை ஊட்டமிக்கதாக மாற்றுவதால்தான் அதில் பயிர்கள் விளைந்து உணவு கிடைக்கிறது. வண்டுகளும் தேனீக்களும் மகரந்த சேர்க்கையைச் சாத்தியப்படுத்துவதால்தான் பழங்கள் கிடைக்கின்றன.
நம்மை சுற்றுகிறதா பூமி?
அசமந்தியின் ரோமத்தில் வளரக்கூடிய பூஞ்சை ஒன்று, புற்றுநோய்களைக் குணப்படுத்தும் மருந்தாகிறது. மரங்கள் நமக்குச் சுத்தமான காற்றை வழங்குகின்றன. பவளப்பாறைகள் இயற்கை பேரிடர் ஏற்பட்டுக் கடல் நிலத்தை விழுங்காமல் பாதுகாக்கின்றன. இப்படி ஏதோ ஒரு வகையில் உயிரினங்களால் மனிதர்களுக்குப் பயன் இருக்கிறது.
நிற்க, இந்தப் பார்வைதான் தவறானது. நாம் உயிரினங்களையும் பூமியையும் நம்மை மையமாக கொண்டே எடைபோடுகிறோம். அதனால் நமக்கு என்ன பயன் என்பதை மட்டும் பார்க்கிறோம். நாமும் இயற்கையின் அங்கம்தான் என்பதை மறந்து விடுகிறோம். ஆனால், இயற்கை நம் சிந்தனையை தாண்டிய ஆச்சரியங்களைக் கொண்டது. நமது பூமி சுற்றுச்சூழல், உயிரினங்கள், மரபணுக்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மைகளால் பின்னிப் பிணைந்துள்ளது. அதைத்தான் உயிர் பன்மையம் (Bio Diversity) என்கிறோம்.
காடுகளை எடுத்துக்கொள்வோம். சிக்கலான சூழலியல் அமைப்பைக் கொண்டுள்ள காட்டில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. அங்குள்ள மரங்கள் விலங்குகளுக்குப் பழங்களைத் தருகின்றன. உறைவிடமாக அமைகின்றன. பழங்களை சாப்பிடும் விலங்குகள் அவற்றின் விதைகளைப் பரப்ப உதவுகின்றன. விலங்குகள் உண்ட மிச்சங்கள் லட்சக்கணக்கான பூச்சிகளுக்கு உணவாகி, மக்கி, அங்குள்ள மண்வளம் செழிக்கிறது. காடுகளையொட்டி ஓடும் ஆறுகளில் இலைகள் விழுவதால் அதிலுள்ள அமிலங்கள் நீரில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.
அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? யோசித்து விடை அனுப்புங்கள். தொடர்ந்து விவாதிப்போம்.
கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்.
தொடர்புக்கு: tnmaran25@gmail.com