

புதிய வகுப்பு, புதிய வகுப்பறை, புதிய நண்பர்கள்… என உற்சாகமாக இந்தக் கல்வி ஆண்டைத் தொடங்கியிருப்பீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். கோடை விடுமுறைக்கு முன் வெளியான ‘நானும் கதாசிரியரே’ என்ற தொடரின் பகுதிகளைப் படித்திருப்பீர்கள். அதன் அடுத்தடுத்த பகுதிகள் இனி வரப் போகின்றன. இதுவரை என்னென்ன இடம்பெற்றன என்பதை நினைவூட்டிக்கொள்வோமா?
முதல் பகுதி:
நம் தாத்தாவுக்குத் தாத்தாவுக்கு முன் உள்ள காலம் முதலே ‘பாட்டி வடை சுட்ட கதை’ சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும், முதன்முதலாக யாரேனும் ஒருவர்தானே இந்தக் கதையை உருவாக்கி இருப்பார். அப்படியென்றால், நம்மாலும் கதைகளை உருவாக்க முடியும்தானே? நம்மைச் சுற்றி நடப்பவற்றை நன்கு கவனித்தாலே அற்புதமான கதைகளை நம்மால் உருவாக்க முடியும்.
இரண்டாம் பகுதி:
கதை உருவாக்கலாம் எனும் நம்பிக்கை வந்துவிட்டது. அதை சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி? ஒரு கதையைச் சொல்பவர் என்னவெல்லாம் சொல்லி, நம்மைக் கேட்க வைக்கிறார்? பறவை பறக்கிறது என்றால் கைகளை பறப்பதுபோல ஆட்டிக்காட்டுவது, கதையில் வரும் கதாபாத்திரங்களைப் போல வேஷம் போட்டுக்கொள்வது, பல குரல்களில் பேசிக் காட்டுவது, பாட்டு பாடுவது என்று பல விஷயங்களைச் சேர்க்கிறார். அதனால்தான், அந்தக் கதை நமக்கு சோர்வே அளிப்பது இல்லை. ஆனால், கதை சொல்வதைப் போலவே எழுத முடியாது. ஏன் என்றால், பல குரல்களில் பேசுவதைப் போல எழுத முடியாது அல்லவா?
மூன்றாம் மற்றும் நான்காம் பகுதிகள்
ஒரு கதையைச் சொல்வதற்கு அதே கதையை எழுதுவதற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்தோம். உதாரணத்திற்கு, கதை சொல்பவர் அங்கே என்று கையை நீட்டினால், நமக்குப் புரிந்துவிடும். ஆனால், எழுதும்போது வலப்பக்கம் என்று எழுத வேண்டும். பயிற்சிக்காக, ‘வேகி கழுகு’ எனும் கதையைப் பார்த்தோம். அதாவது அந்தக் கதையைச் சொல்லும்போது என்னவெல்லாம் சேர்க்கலாம். அதையே எழுதும்போது எவையெல்லாம் தவிர்க்க வேண்டும்; எவையெல்லாம் சேர்க்க வேண்டும் என்பதை விரிவாகப் பார்த்தோம்.
ஐந்தாம் பகுதி:
இந்தப் பகுதியில், ஒரு கதைக்குள் நுட்பங்களை அலசினோம். உதாரணத்திற்கு கரடி கதையை எடுத்துக்கொண்டோம். இரு நண்பர்கள் காட்டுக்குள் செல்கிறார்கள். எதிரில் கரடி வருகிறது. ஒருவன் மரத்தில் ஏறிக்கொள்கிறான். இன்னொருவனுக்கு மரம் ஏறத்தெரியாததால் இறந்ததைப் போல நடிக்கிறான். கீழே கிடப்பவனை முகர்ந்து பார்த்துவிட்டு கரடி சென்று விடுகிறது. மரத்தில் இருந்து இறங்கியவன், ”கரடி என்ன சொன்னது?” என்று கேட்கிறான். ”ஆபத்தில் உதவாத நண்பனை நம்பாதே என்றது” என்று சொல்கிறான்.
இந்தக் கதையில், முதலில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு ஓர் ஆபத்து ஏற்படுத்துகிறார்கள். மரத்தில் ஏறி தப்பிக்கலாம் எனும் வழி சொல்லப்படுகிறது. அதிலும் ஒரு சிக்கல் அதாவது ஒருவனுக்கு மட்டுமே மரம் ஏறத்தெரியும். இறந்தது போல நடித்து தப்பிப்பது என இறுதிக்காட்சி சொல்லப்படுகிறது. இத்தனை நுட்பங்கள் இருப்பதால்தான் அந்தக் கதை பல காலமாய் திரும்ப திரும்பச் சொல்லப்படுகிறது.
இனி:
உங்களைக் கதாசிரியராக மாற்றும் தொடரில், இதுவரை பார்த்துள்ளோம். இனி வரும் வாரங்களில், எங்கிருந்து எல்லாம் கதையைக் கண்டறியலாம், அதை எப்படி எழுதலாம், எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் எப்படி எழுதலாம் என்பன குறித்து பார்ப்போம்.
- விஷ்ணுபுரம் சரவணன்
கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com