

கணிதம் எங்கும் நிறைந்துள்ளது. அது எண்கள் வடிவிலும் கணித கோட்பாடுகள் அடிப்படையிலும் நம் தினசரி வாழ்வில் காலைஎழுந்தது முதல் தூங்கும் வரையில் ஆட்கொண்டுள்ளது. கணிதத் திறன் இதுவரை மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் இன்றியமையாதது. கணிதத்திறன்கள் இருந்தால் நம்மை எளிதில் ஏமாற்றிடவும் முடியாது. படைப்பாளிகளாகவும் மேம்பட்ட வாழ்வினை நோக்கியும் நகருவோம். கடந்த கல்வியாண்டில் கனியும் கணிதம் என்ற தொடர் ஆரம்பமானது. கணிதத்தைக் கனியாகக் கொடுக்கும் முயற்சி. காயாக தென்படும் கணிதத்தைக் கனியாக்கும் முயற்சி.
நாம் அன்றாடம் காலையில் பருகும் தேநீர்தயாரிப்பில் என்னென்ன கணிதம் இருக்கின்றது என்பதில் தொடங்கியது நம் பயணம். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் பின்னிற்கும் தண்ணீர் அளவினையும் கண்டோம். கணிதம் கற்கும்போதே தண்ணீரை அளவாகப் பயன்படுத்துவோம் என்பதை உணர்ந்தோம். அதன் பின்னர் செங்கல்லில் என்ன கணிதம் இருக்கிறது என நகர்ந்தோம். அதன் பரப்பளவு, முனைகள், பக்கங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தோம்.
பகடைக்காய் (Dice) மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்கியுள்ளனர். ஆனால் அதில் ஏராளமான கணிதம் பொந்துள்ளது என்பதைப் பார்த்தோம். கணிதம் என்றால் எண்கள் மட்டுமல்ல வடிவங்களும் சேர்த்துதான். மழைத் துளியின் உருவம் எப்படி இருக்கும் என்பதைக் கண்டோம். மழைத்துளியின் விட்டத்தைப் பொருந்து அதன் உருவம் உருமாறும். மழையின்அளவினை எப்படி அளப்பது என்றும் பார்த்தோம்.
வார்த்தை கணக்குகளை ஒரு கை பார்த்தோம். கொஞ்சம் சவால் நிறைந்ததுதான் ஆனால் பயிற்சியால் இதை எளிதாக வென்றிடலாம். நீ என்ன கணக்கு புலியா என்று கேட்டவர்களைப் பார்த்து, விலங்குகளில் எது கணிதத்தில் கெத்து என்பதை பற்றி ஒரு கட்டுரையில் பார்த்தோம். 6174 என்ற கார்பேக்கர் எண்ணில் என்ன அதிசயம் உள்ளது என்று ஒரு பார்வை பார்த்தோம். நம் தினசரி வாழ்வில் எங்கெல்லாம் வட்டம் சூழ்ந்துள்ளது. கண் திறந்ததும் உத்தரத்தில் இருக்கும் மின்விசிறியிலிருந்து, சூரியன், சந்திரன், இட்லி, தோசை என எங்கும் நிறைந்த வட்டத்தை எப்படிக் குறிப்பிடுவது, எப்படி அளப்பது என்று சுவைத்தோம். பயணமில்லாத வாழ்வேது. பயணங்களில் வாகனத்தில் இருக்கும் வேகமானி எப்படி செயல்படுகின்றது, எந்தக் கணித அடிப்படையில் அது அமைந்துள்ளது என்பதையும் ஆராய்ந்தோம்.
தீபாவளி கொண்டாட்டத்தில் என்னென்ன கணிதக் கூறுகள் உள்ளன. பட்டாசு வாங்குவதிலும், வண்ணங்கள் உருவாவதிலும், ராக்கெட் செல்லும் பாதைப் பற்றியும் கொஞ்சம் பார்த்தோம். ‘தகவல்களும் தரவுகளும்’ கட்டுரையில் தகவல் என்றால் என்ன தரவு என்றால் என்ன என விரிவாகப் பார்த்தோம். தகவல்தொழில்நுட்ப உலகில் இந்த இரண்டிற்கான வித்தியாசமும் எப்படிக் கணிதம் இதனை இணைக்கின்றது என்றும் ஆராய்ந்தோம். ஊர்தோறும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளை எப்படி வடிவமைக்கலாம் என்றும், லாப நஷ்ட கணக்குகள் பற்றியும், சைக்கிளில் இருக்கும் வடிவியலைப் பற்றியும் பார்த்தோம். சுடோகோ பற்றி தெரிந்த நமக்கு காக்ரோ என்ற கணித விளையாட்டினைப் பற்றி பரிச்சயம் இல்லை. அந்த விளையாட்டினை கற்று விளையாடத் தொடங்கினோம். பின்னங்களைப் பின்னி எடுத்தோம். கணித வரலாற்றில் ரோமானிய எண்கள் எப்படி முக்கியமானது என்பது பற்றி பார்த்தோம். பள்ளி அறைக்கு வண்ணம் தீட்டுவதற்குப் பின்னர் இருக்கும் கணிதத்தையும் தோராயக் கணக்குகள் பற்றியும் பார்த்தோம்.
பார்த்தவை கொஞ்சம் மட்டுமே. தொடர்ந்துஇந்த கல்வியாண்டிலும் தினசரி வாழ்வில் காணும் கணிதத்தையும், கணித அற்புதங்களை யும், கணிதக் கூறுகளையும் கனியாகச் சுவைத்து மகிழ்வோம்.
- விழியன், கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com