

காலநிலை மாற்றம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. வகைதொகை இல்லாமல் வாழ்க்கையை நமக்கு வசதியாக மாற்றியதன் விளைவு இது. இயற்கை இப்படியா நம்மை வாழச் சொல்லியிருக்கிறது? இயற்கைச் சமநிலையை சற்று உற்றுப் பார்த்து வருவோமா?
தாய்க்கோழி பத்து முட்டைகளையிட்டு பத்து கோழிக்குஞ்சுகள் படைசூழ உணவுகொரித்துக் கொண்டிருக்கிறது. அதிர்ந்துகூட நடக்காத அந்தக்கோழி தன் குஞ்சுகளுக்கு ஆபத்து எனும்போது, கோபத்தில் பத்தடிக்கு பறந்து பறந்து கொக்கரிக்கிறது. கழுகின் வேட்டைக்குப் பிறகு இறுதியில் இரண்டு குஞ்சுகளாவது கோழிக்கு மிஞ்சுகிறது. கழுகு இதேபோல பத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறதா என்றால் இல்லை. இரண்டு, மூன்று முட்டைகள்தான் மிஸஸ் கழுகு போடுவாங்களாம். கழுகு பத்து முட்டை போட்டால்? கோழி இனம் மிஞ்சுமா? கோழி ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு முட்டை போட்டால் கழுகு முழுமையாக பசியாற இயலுமா? இயற்கை எத்தனை தொலைநோக்குடன் திட்டமிடல் செய்திருக்கிறது பாருங்களேன்.
உராங்ஊத்தான் இனத்தைச் சேர்ந்த பெண் குரங்குகள், தன் ஒரே ஒரு குட்டியைப் பராமரிக்க வேண்டுமென்று ஆண் குரங்குகளை நெருங்க விடாதாம், பெண் குரங்குகளை நெருங்கவே, குட்டிகளை கொன்றுவிடுமாம் தந்தை குரங்கு.
உணவுத்தேடச் செல்லும் தாய் பென்குவின் வரும்வரை தன் கால்களின் இடையே முட்டையை அடைகாக்கும் ஆண்பென்குவின்கள் வாழும் இதே உலகில்தான், சில தந்தை விலங்குகள் தங்கள் குட்டிகளைத் தாங்களே கொல்கின்றன.
நதி கடலின் உரிமை
சாலமன் மீன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு? அவற்றின் பிறப்பிடம் மலைமேல் ஒரு நீர்வீழ்ச்சியின் நன்னீரில். வாழுமிடம் கடல். கோடை முடியும் வேளையில் இனப்பெருக்கத்திற்காக நாடு தாண்டி ,கடல் தாண்டி உயரமான மலைப்பகுதியில் ஏறி, (12 அடி எம்பிக்குதிப்பாங்களாம் மிஸ்டர் & மிஸஸ் சாலமன்.,) முட்டையிட்டு மீண்டும் கடல் திரும்புவாங்களாம். இதற்குள் குளிர்கால உறக்கத்திலிருந்து எழுந்துகொள்ளும் பனிக்கரடிகள், நீர்வீழ்ச்சிக் கரையில் காத்திருப்பாங்களாம் தங்கள் உணவு மேசைக்கு வரும் சாலமன்களை தின்று போதுமான உணவுச்சத்தை பெற்றுக்கொள்ள. இப்படி கடல்நீரிலிருந்து நன்னீருக்குச் செல்ல வேண்டும், செல்வதற்கான நீர்வழிப் பாதைகள், வழியில் கரடி, ஓநாய், நீர்நாய் போன்ற விலங்குகளுக்கும் போதுமான உணவாக வேண்டும், மிஞ்சும் மீன்கள் தங்கள் இனம் அழியாமல் முட்டையிட்டு மீண்டும் கடல் திரும்பும் அறிவெல்லாம் எப்படி வாய்த்தது சாலமன் மீன்களுக்கு? அது மரபணுவிலேயே பதிந்தது என்கிறார் நூலாசிரியர்.
நூறு முட்டைகளை கடற்கரை மணலில் ஒளித்து வைத்துச் செல்லும் கடல் ஆமை, குட்டி வெளியே வந்தபிறகும் வந்து பார்ப்பதில்லை தாய் ஆமையின் உயிருக்கு பாதுகாப்பில்லை என்பதால். குட்டிகளேதான் கடலுக்குச் சென்று அம்மாவைப் பார்க்க வேண்டும். அதிலும் நூறுமுட்டையும் ஒரேநேரத்தில் ஆமைக் குஞ்சுகளை வெளியேற்றுமாம். ஏன்? அப்போதுதான் கடற்கரையில் விலங்குகளின் பசிக்கு உணவானது போக மீதமுள்ளது கடலுக்குச் சென்று சேர முடியுமாம். ஆமை இனமும் அழியாமல் இருக்கும்.
இயற்கையை உற்றுநோக்குங்கள் இவற்றை உதாரணம் சொல்லும் நூலாசிரியரின் கருத்து இதுதான். இயற்கையை உற்றுநோக்குங்கள். அவை ஒன்று மற்றொன்றை எதிர்பார்க்காமல், மற்றொன்றுக்கு தீங்கு செய்ய திட்டமிடாமல், ஒரு இனம் இன்னொரு இனத்தை நம்பியும், கொன்றும், ஆதரித்தும், உதவியும் உயிர் வாழ்ந்து கொள்கின்றன. உண்மையில் விலங்கினங்களின் உணவு மேஜை ஜனநாயகம் நிரம்பியதாக உள்ளது என்கிறார்.
குப்பைகளை கடலில் கொட்டுகிறோம். ஆனால் அவற்றின் நஞ்சு மீன் உணவில் கலந்து நம் உணவு மேஜைக்கு வருவதை யோசிக்கத் தவறுகிறோம். நதிகளும்,ஏரிகளும், கடல்களும் வெறும் தண்ணீர் தேக்கிவைக்கும் தொட்டிகளாகவே கண்களுக்குத் தெரிகிறது. அந்த நீர்ப்பரப்பின் உயிரோட்டத்துக்கு மீன்கள் உள்ளே உயிரோடிருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் புரிந்துள்ளார்களா?
பூமியை பாதுகாப்போம்
ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடிவிட்டோம். கொசு, கரப்பான் பூச்சி, பல்லி எல்லாம் வீட்டிற்குள் புகாமலிருக்க, சன்னல்களுக்கு வலைகளைப் பின்னுகிறோம். ஆனால் நாம் வாழும் இந்தப் பூமி நமக்கானது மட்டுமல்ல. நாம் வாழ இடம் கொடுத்திருக்கிறது பூமி. அதில் வாழும் மற்ற உயிரினங்களின் வாழ்வியல் செயல்பாடுகளை உற்றுநோக்கினால், நாமும் வாழும் இந்த பூமியை சேதாரமில்லாமல் பாதுகாக்கலாம் என்பதை கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும் நூலின் வாயிலாக பூவுலகின் நண்பர்கள் குழுவின் ஜீயோ டாமின் நூலாசிரியர் தெரிவிக்கிறார்.
- ஆர்.உதயலஷ்மி | கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்
தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com