

முன்னொரு காலத்தில் சந்திரகிரி என்ற தேசத்தை சங்கடசேனன் என்கிற மன்னன் ஆட்சி செய்து வந்தான். சங்கடசேனன் என்றால் சங்கடம் ஏதும்வந்துவிட்டால் அதை எதிர்க்கும் சேனையாக நிற்பவன் என்ற பொருளில் அப்பெயரை அவனுக்கு அவனது பெற்றோர் வைத்தனர். அறுபத்து நான்கு பாளையத்து குறுநில மன்னர்களும் திரை என்கிற வரியை சந்திரகிரி தேசத்துக்கு செலுத்தி வந்தனர். அதனால் சந்திரகிரிதேசம் ஒரு பேரரசாகவே திகழ்ந்தது. சந்திரகிரி இயற்கையிலேயே மிகவும்வளம் நிறைந்த நாடாகத் திகழ்ந்தது. அங்கு அனைத்துவிதமான தானியங்களும் விளைந்தன. அவை பல அண்டையதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மேலும் சந்திரகிரி தேசத்தில் இல்லாத தொழில்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்துவிதமான தொழில்களும் சிறப்புடன் திகழ்ந்தன. அந்த தேசத்து மக்கள் அனைவரும் சிறந்த உழைப்பாளிகளாகவும் பலசாலிகளாகவும் இருந்தனர். வயல்வெளிகளில் எப்பொழுதும் ஓடியாடி வேலைசெய்து கொண்டும் தானியங்களை பொதிகளாய் கட்டிஅதனை மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டும் சுறுசுறுப்பாய் வேலை செய்துவந்தனர். கண்காணி என்கிற பதவி வகித்த ஒருவன் அவர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தான்.
விழலுக்கு இறைச்ச நீர்
கந்தசாமியும் வீரய்யாவும் வேலையில் மும்முரமாக இருந்தனர். ‘நாம உழைச்சி என்ன ஆகப்போவுது, எல்லாமே விழலுக்கு இறைச்ச நீராகத்தான் போகுது’ என்றான் வீரய்யா. அதற்கு பதிலளித்த கந்தசாமி, ‘ஆமாம் வீரய்யா, நானும் சின்னவயசுல இருந்தே பார்க்குறேன். நம்ம வாழ்க்கையில எந்த முன்னேற்றமும் ஏற்படறதா தெரியலையே!’ என்றான். ‘நம்ம நாட்டுல என்ன வளம் இல்லை? எல்லாம்தான் இருக்கிறது. ஆனா நம்ம கையிலதான் காசு, பணம் ஏதுமில்ல…’ விரக்தியாய் சொன்னான் வீரய்யா.
அதற்கு காரணம், சந்திரகிரி மன்னன்சங்கடசேனன் ஒரு பேரரசனாக இருந்தாலும் மக்களை நேசிக்கும் மனம் படைத்தவனாக இல்லை. சங்கடசேனனின் தந்தை சாந்தசேனன் ஆட்சியில் அவர் மக்களை நேசித்து நீதி தவறாமல் ஆட்சிசெய்துவந்தார். நாட்டில் பஞ்சம் ஏற்படும்காலங்களில் களஞ்சியங்களை மக்களுக்காகத் திறந்துவிட்டார். மக்களும் மன்னரை வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வெறுப்புக்கு ஆளான மன்னன்
அவருக்குப் பிறகு மன்னனான சங்கடசேனனோ தன் தந்தையைப் போல் அல்லாமல் அதற்கு நேர்மாறாக மக்களிடம் வெறுப்பைக் காட்டினான். நாட்டின் நிதி ஆதாரத்தைப் பெருக்க பல வரிகளை விதித்து மக்களைத் துன்புறுத்தினான்.
சங்கடசேனன் நம்மிடம் காரணமில்லாமல் வரியை விதிக்கிறான் என்பதை மட்டும் மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் அவர்களால் சங்கடசேனனின் தந்தையான சாந்தசேனனைப் பார்த்துமுறையிடவும் முடியவில்லை. சங்கடம் தீர்க்க வந்த சேனனாக இல்லாமல் சங்கடம் கொடுக்கவே வந்த சேனனானான் சங்கடசேனன். காட்டாற்று சுழலில்சிக்கிக்கொண்ட சிறு துறும்பு போல துன்பத்தில் சிக்கித் தவித்தார்கள். எனவேதான் கந்தசாமியும் வீரய்யாவும் அப்படிப் பேசிக்கொண்டார்கள்.
அப்படி அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு சற்று தூரத்தில் ஏதோசலசலப்பு கேட்டது. அனைவரும் பரபரப்புடன் சலசலப்பு ஏற்பட்ட திசையைநோக்கிப் பார்த்தார்கள். அங்கே திடகாத்திரமான ஒருவனைசில காவல்வீரர்கள் கட்டி இழுத்து வந்தார்கள்.
அவ்வாறு இழுத்துவரப்பட்டவன் ஆவேசத்துடன் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். அநேகமாக அரசாங்கத்தையோ மன்னனையோதான் அப்படிப்பேசியிருக்கவேண்டும். அதனால்தான் அவனை அப்படிக் கட்டி இழுத்துக்கொண்டு வருகிறார்கள் என்பதும் புலனாயிற்று.
- தொடரும்.
- வெங்கி