

சிந்துஜாவும் சித்திரைச் செல்வனும் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றபோது வரவேற்பறையில் நாதஸ்வரக் கலைஞர்கள் இசைத்த இசை அவர்களை காந்தமாக ஈர்த்தது. மங்களகரமான நிகழ்வுகள் மனதைத் தொட்டது. திருமணம் முடிந்து விருந்து உண்டதும் வீட்டிற்கு கிளம்பினார்கள். வரும் வழியில்ஒரு மரத்தடியில் கூட்டமாக இருந்தது. அவர்கள் அதைப் பார்த்ததும் நின்று விட்டார்கள். கண் தெரியாத ஒருவர் புல்லாங்குழல் அழகாக வாசித்துக் கொண்டு இருந்தார். அதை மக்கள் கூட்டம் ரசித்துக் கொண்டு காணிக்கை அள்ளி வழங்கினார்கள். சிந்துஜாவுக்கு அந்த இடத்தை விட்டு வரவே மனமில்லை. வீட்டில் குழந்தை நினைவு வரவே அங்கிருந்து கிளம்பினார்கள். வெயில் அதிகமாக இருக்கவே மரத்தின் அடியில் நின்றார்கள். அங்கு இருந்த குயில் கூவும் சத்தம் தேவகானமாய் இருந்தது. பின்னர் இளநீர் அருந்திவிட்டு ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது காருண்யா அம்மா அம்மா பொம்மை வாங்கி வந்தியா? என்று மழலை மொழியில் கேட்டதும் வாரி அணைத்துக் கொண்டாள்.
இதுவரை கேட்ட நாதஸ்வர இசை, குயில் இசை, புல்லாங்குழல் இசை இதையெல்லாம் விட அம்மா என்று அழைத்த அமுத மொழியே இன்பம் ஊட்டியது. ஆசையோடு வயலினை மூலையில் வைத்தாள். காருண்யாவை தூக்கி மடியில் வைத்தாள். தன் வேலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு குழந்தையோடு கொஞ்சி மகிழ்ந்தாள். கவலையை மறக்கச் செய்யும் மழலை மொழியைத்தான் வள்ளுவர்
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
என்கிறார்
அதிகாரம்; மக்கட்பேறு; குறள்:66
- முனைவர் இரா.வனிதா
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்