

நாக்கில் தானே சுவை அரும்புகள் இருக் கின்றன. கண்களை மூடிக்கொண்டால் ஏன் சரியாகச் சொல்ல முடிவதில்லை, டிங்கு? – வி. சூரியகலா, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யம்பேட்டை.
சுவையை அறிவதற்கு நாக்கின் பங்கு மட்டும் போதுமானதில்லை. மூக்கு, கண்களின் பங்கும் முக்கியமானது. ஓர் உணவைப் பார்த்து, அதன் நறுமணத்தை முகர்ந்து, சாப்பிடும்போதுதான் சரியான சுவையை நாம் அறிய முடியும். கண்களை மூடிக்கொண்டால் அது என்ன உணவுப் பொருள் என்று நமக்குத் தெரியாது. அதனால் சரியாகச் சொல்ல முடியாது. மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டால் சுவை அறிதல் மிகவும் கடினமாகிவிடும். கண்களை மூடிக்கொண்டு, லட்டு சாப்பிடவிரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள் வோம். உங்கள் நாக்கில் ஒரு கற்கண்டைத் தேய்த்தால் நீங்கள் அதை லட்டு என்றுதான் சொல்வீர்கள். ஏனென்றால் லட்டு எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அதைக் கற்பனை செய்துகொண்டு காத்திருப்பீர்கள். அந்த நேரம் நாக்கில் இனிப்புபட்டதும், அதை லட்டு என்று நினைத்துக் கொள்வீர்கள். கண்களையும் மூக்கையும் மூடிக்கொண்டு, கேரட்டைச் சாப்பிட்டாலும் புடலங்காயைச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். சரியாக உங்களுக்குச் சுவை புரிபடாது, சூரிய கலா.
நீங்களும் உங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி :
டிங்குவிடம் கேளுங்கள், வெற்றிக்கொடி,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,
சென்னை - 600 002.
மின்னஞ்சல்: vetrikodi@hindutamil.co.in