

மணிவண்ணன் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 367 மதிப்பெண்கள் பெற்றான். அடுத்து மேல்நிலை வகுப்பில் சேர வேண்டும். எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் எனப் பெற்றோரிடம் வினவினான். அவர்கள், சீக்கிரம் வேலைகிடைக்கிற பிரிவில் சேர் என்றனர்.
எல்லாமே ஒன்றுதான் எதிலாவது சேர் என்றார் ஆசிரியர். நாங்கள் சேரப்போகும் பிரிவிலேயே நீயும் வந்துவிடு என்றது நண்பர் குழாம். ஐய்யோ! இதில் மட்டும் சேர்ந்துவிடாதே என்றனர் அப்பிரிவில் படிக்கும் மூத்தோர். விருப்பமானதைப் படி என்றனர் ஊக்குவிப்போர். படிக்கும் பிள்ளை எல்லாவற்றையும் படிக்கும். கிடைப்பதைப் படிஎன்றனர் உறவினர். எல்லாரும் கூறிய அறிவுரைகளைக் கேட்ட மணிவண்ணன் எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது எனப் பெருங்குழப்பத்தில் இருக்கிறான். அவன் உங்களின் உதவியை நாடினால் அவனுக்கு எந்தப் பாடப்பிரிவை நீங்கள் பரித்துரைப்பீர்கள் என வினவி வகுப்பைத் தொடங்கினார் எழில்.
எது பிடிக்குது? எது வருது?
73 சதவீதம் மதிப்பெண் பெற்ற நீ எதை வேண்டுமானாலும் படிக்கலாம் மகனே என்பேன் என்றாள் பாத்திமா குறும்பாக. வகுப்பறையில் சிரிப்பலை அடித்தது.
அவன் படிக்கும் பள்ளியில் எந்தெந்தப் பாடப்பிரிவுகள் இருக்கின்றன என்பது முதலில் தெரிய வேண்டும் என்றாள் அருட்செல்வி. கணக்கு, அறிவியல், வரலாறு, வணிகவியல், இயந்திரவியல் பாடப்பிரிவுகள் இருக்கின்றன என்றார் எழில்.
அவன் எந்தெந்தப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறான் எனத் தெரிய வேண்டுமே என்றான் அருளினியன். தமிழ் 81, ஆங்கிலம் 75, கணக்கு 53, அறிவியல் 76, சமூக அறிவியல் 82 என்றார் எழில். கணக்கில்தான் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறான். அதனால் கணக்குப் பாடம் உள்ள கணக்கு, இயந்திரவியல் பாடப்பிரிவுகள் வேண்டாம் என்றான் காதர். வணிகவியலிலும் கணக்கு வருமே என்றாள் மதி. அது கணக்குப்பதிவியல். அதனைப் படிக்கக் கூட்டல், கழித்தல் தெரிந்தால் போதும். எனவே அப்பாடப்பிரிவில் அவன் விரும்பினால் சேரலாம் என்றாள் நன்மொழி.
சமூக அறிவியலிலும் மொழிப்பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். அதனால் வரலாற்றுப் பாடப்பிரிவைப் பரிந்துரைக்கலாம் என்றான் அழகன்.அறிவியலிலும் 76 மதிப்பெண் பெற்றிருப்பதால் அப்பாடப்பிரிவிலும் சேரலாம் என்றான் தேவநேயன். ஆனால் சமூக அறிவியலோடு ஒப்பிடும்பொழுது இந்த மதிப்பெண் குறைவுதான் என்றாள் கயல்விழி.
மணிவண்ணனை உங்களது ஆராய்ச்சி இன்னும் நன்றாகக் குழப்பப் போகிறது எனச்சலித்துக்கொண்டான் முகில். மணிவண்ணன் பெற்ற மதிப்பெண்களுக்கு அவன் சமூக அறிவியல் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் சேரலாம் என அக்கலந்துரையாடலின் சாரத்தைத் தொகுத்துக் கூறினாள் தங்கம்.
நல்ல முடிவு
நீ மணிவண்ணாக இருந்தால், இவற்றுள்எந்தப் பாடப்பிரிவில் சேர்வாய்? என இளவேனிலிடம் வினவினார் எழில். இரண்டிலும் சேர மாட்டேன் என்றாள் அவள்.பின் எதில் சேர்வாய்? என ஆர்வமாய்வினவினாள் மணிமேகலை. வணிகவியலில்என்றாள் இளவேனில். ஏன்? என வினவினார் எழில். தணிக்கையாளராக வேண்டும் என்பது இலக்கு என்றாள் இளவேனில். நன்கு முடிவெடுத்தாய் என அவளைப் பாராட்டினார் எழில்.
முடிவெடுத்தல் என்றால் என்ன? என வினவினான் சுடர். ஒருவர் தனக்கிருக்கும் பல்வேறு வாய்ப்புகளை அறிந்து, ஆராய்ந்து, அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் புரிந்துகொண்டு, அவற்றுள் பொருத்தமான ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பதைத்தான் முடிவெடுத்தல் எங்கிறோம் என விளக்கினார்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு வினா. நீங்கள் மணிவண்ணனாக இருந்தால் எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
(தொடரும்)
- அரிஅரவேலன் | கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர் | தொடர்புக்கு: ariaravelan@gmail.com