பிளஸ் 2க்குப் பிறகு - 19: பொறியியலில் பாய்ச்சல் எடுக்கும் மின்னியல்!

பிளஸ் 2க்குப் பிறகு - 19: பொறியியலில் பாய்ச்சல் எடுக்கும் மின்னியல்!
Updated on
2 min read

நமது அன்றாட வாழ்க்கையில் மின்சாரம் இன்றி எதுவும் நடக்காது என்பதை அறிவோம். நம்மை சுற்றி ஆக்கிரமித்திருக்கும் மின்சாதனங்களுக்கு, மின்சாரமே உயிர் கொடுத்து இயங்கச் செய்கிறது. இந்த மின்சாரம் எப்படி ஓரிடத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும், அங்கிருந்து முறையாக விநியோகம் செய்யப்பட்டு நமது மின் சாதனங்களை வந்தடைகிறது என்பதையும் இயற்பியல் பாடங்களில் ஓரளவு படித்திருப்போம்.

அந்த மின்சாரத்தை சற்றே விலகி நின்று வியப்புடன் ஆராயாதவர்கள் குறைவு. இத்தகைய மின்னியலுடன், மின்னணுவியலும் சேர்த்து முழுமையாக கற்க வழி செய்கிறது எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் (Electrical and Electronics Engineering-EEE) எனப்படும் இஇஇ படிப்பு. பிளஸ் 2 முடித்த பிறகு டிப்ளமா அல்லது டிகிரி படிப்பாக இதனை படிக்கலாம். டிப்ளமா படிப்பில் 10-ம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம்.

கிடுகிடுவென முன்னேறும் இஇஇ

பொறியியல் படிப்பில் சேர விரும்புவோரின் முதல்கட்டத் தேர்வாக கம்ப்யூட்டர் சயின்ஸ் (சிஎஸ்சி) மற்றும் அது சார்ந்த இதர பிரிவுகள் விளங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக, எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் (இசிஇ) உள்ளிட்ட ஒரு சில பிரிவுகள் வருகின்றன. அடுத்த நிலையில் இருக்கும் எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் (இஇஇ) படிப்பு, கடந்த சில ஆண்டுகளில் சத்தமின்றி முன்னேறி வருகிறது.

விவரமறிந்தோர் இஇஇ பிரிவுக்கு முன்னுரிமை தந்து வருகின்றனர். தாங்கள் விரும்பிய சிஎஸ்சி மற்றும் இசிஇ படிப்புக்கான இடம், சிறந்த கல்லூரிகளில் கிடைக்காத மாணவர்களின் தேர்வாகவும் இஇஇ மாறி வருகிறது. சிஎஸ்சி மற்றும் இசிஇ படிப்பை விட இஇஇ பாடங்கள் சற்று கடினமானது என்றிருந்த பொதுவான கருத்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மாறி வருகிறது. இதற்கு காரணம், இஇஇ படிப்புக்கு அதிகரித்து வரும் பிரகாசமான எதிர்காலமே.

அதிரடி வேலைவாய்ப்பு

அனல், புனல், அணு என மின்சார உற்பத்தியுடன், மின்சாரம் விநியோகித்தல், அதர்கான இயந்திரங்கள் தயாரிப்பு மற்றும்பராமரிப்பு துறைகளில் எப்போதும் எலெக்ட்ரிக்கல் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். தற்போது, சுற்றுச்சூழல் அக்கறையுடனான மின்சார உற்பத்தியில் சூரிய ஒளி, காற்று மற்றும் அலைகளில் இருந்தும் மின்சாரம் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இந்த புதிய மாற்றங்கள் காரணமாகவும் எலெக்ட்ரிக்கல் பொறியாளர்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

இது தவிர வழக்கமான வாகன உற்பத்தி, போக்குவரத்து தளவாடங்கள், கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவற்றிலும் தேவை நீடிக்கிறது, நவீன துறைகளான கம்ப்யூட்டர் துறைசார்ந்த ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட வளரும் துறைகள் சார்ந்தும், எலெக்ட்ரிக்கல் துறையினருக்கு தேவை அதிகரித்துள்ளது. ஐடி துறையிலும் இஇஇ பட்டதாரிகளை தனியாக தேர்வு செய்கிறார்கள்.

எனவே, பொறியியல் படிப்பை விரும்புவோர், எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமிருப்பின், தாரளமாக அதற்கு தயாராகலாம். சற்று அடர்த்தியான படிப்பு என்பதால், போதிய ஆய்வக வசதிகள் கொண்ட முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வது அவசியம். அதற்கேற்ப, ஆர்வமுள்ள மாணவர்கள் இப்போதிருந்தே தங்களை திடமாக தயார் செய்து கொள்ளலாம். கணிதம், இயற்பியல் பாடங்களில் கூடுதல் ஆர்வத்துடன் படிக்கலாம். அன்றாட செய்திகள் மற்றும் கட்டுரைகளில் இடம்பெறும், எலெக்ட்ரிக்கல் துறை சார்ந்த கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, சவால்கள் உள்ளிட்டவற்றை வாசித்து, குறிப்பு எடுத்தும் வரலாம்.

(தொடரும்)

- எஸ்.எஸ்.லெனின் | கட்டுரையாளர் தொடர்புக்கு: subashlenin.s@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in