

கடந்த சில வாரங்களாக உலகை புரட்டிப்போட்ட ஒரு மென்பொருள் 'சாட்ஜிபிடி’ (ChatGPT). மனிதர்கள் செய்ய நினைக்கும் வேலைகளை சுலபமாக செய்து முடித்திட கணினி பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்து மனிதனை போல் சிந்திக்கும் கருவியாக கணினியை மாற்ற முடியுமா என்கிற கோணத்தில் ஆய்வுகள் தொடங்கிவிட்டது.
இந்த துறை ஆர்டிபீஷியல் இண்டெலிஜென்ஸ் என்றழைக்கப்படுகிறது. இந்த துறை போட்ட செல்ல குட்டிதான் ‘சாட்ஜிபிடி’. மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தில் தேடி தானே அழகான ஒரு பதிலை எழுதும் இந்த மென்பொருள்.
கட்டுரை மட்டுமல்ல, கவிதை எழுதும், ஜோக் சொல்லும். மனிதர் செய்யும் பல விஷயங்களை சில நொடிகளில் இந்த மென்பொருள் செய்து முடித்துவிடும். இனி மனிதர்களை ரோபோக்கள் ஒழித்து கட்டிவிடுமா என விவாதங்கள் தொடங்கிவிட்டன.
மனிதனுக்கு போட்டி ரோபோ: என்னை கேட்டால் மனித வரலாற்றில் இந்த மென்பொருள் மனிதனுக்கு இன்னொரு கருவி. மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும். ஆனால், பல வேலைகளை ரோபோக்கள் எடுத்துக்கொள்ளும் என்ற நிதர்சன உண்மையும் நமக்கு இனி தெரிய வேண்டும். வருங்காலத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். கணினிகள் சிந்திக்க தொடங்கிவிட்டால் அவற்றை வெற்றிகரமாக எதிர்க்க நம் ஆயுதம் பகுத்தறிவும், சிந்தனையும்தான்.
இந்த இரண்டை மனிதன் கைக்கொண்டால் போதும் நம்மை அடக்க வரும் ரோபோக்களை மிக எளிதாக அடக்கிவிடலாம். அடுத்தது வேலைவாய்ப்பு?
திரும்ப திரும்ப செய்யும் மிக எளிதானவேலைகளுக்குத்தான் ஆட்கள் தேவைப்படமாட்டார்கள். கணினிகள் பார்த்துக் கொள்ளும். ஆனால், வருங்காலத்திற்கு அதிக சிந்தனை, பகுத்தறிவு, கலை, கற்பனை, கதை சொல்லல் இந்த திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம். கணினிகள் ஒருபோதும் இந்த விஷயத்தில் மனிதனை ஈடு செய்ய முடியாது.
கல்வி அவசியம், அதே நேரம், ஏன் கற்கிறோம்? என்ன கற்கிறோம் என்ற புரிதல்மிக அவசியம். மதிப்பெண்கள் அவசியம்தான் அதேநேரம் சிக்கல்களுக்கு தீர்வு காண கற்ற கல்வியை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தத் தெரிவது மிகவும் அவசியம்.
வருங்கால சைபர் உலகில் நமக்குத் துணையாக வரப் போவது நாம் மனிதன் எனும் மனிதத்தன்மைதான். அதை நாம் பெருக்கி வளர்த்துக் கொண்டால் தான் மனித சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியமாகும்.
‘சாட்ஜிபிடி’ எனும் அந்த மென்பொருள் மிக எளிதாக வீட்டுப் பாடங்களை செய்து விடுகிறதாம், மனிதன் செய்யும் பல வேலைகளை செய்தாலும் ஒரு போதும் மனிதன் ஆகிவிட போவதில்லை. ஆனால், நாம் இனிஎந்திரங்களாக வாழ்வதில் பிரயோஜனமில்லை என்பதை புரிந்து செயல்படுவோம்.
- கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்; தொடர்புக்கு: write2vinod11@gmail.com