

ஒரு பெண்குழந்தை தனது 10-வது வயதில் தாயை இழக்கிறது. ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பம் அது. தந்தை ஆசிரியர் என்பதால் ஆரம்பக்கல்வி பெற அந்தச் சிறுமிக்கும் அவளது அக்காவுக்கும் தடையிருக்கவில்லை.
நாட்டின் விடுதலை போராட்டத்தில் ஈடுபடுவதையே தலையாயக் கடையாக கொண்டிருந்த அந்த குடும்பத்தை வறுமைவாட்டியது. ஒருவழியாக மேநிலைக்கல்விவரை சகோதரிகள் படித்து முடித்தார்கள். மேற்கொண்டு படிக்க பணம் வேண்டுமே என்ன செய்வது? அக்காவும் தங்கையும் ஒரு உடன்பாட்டிற்கு வருகின்றனர்.
சிரமத்திலிருந்து சிகரத்துக்கு: அதன்படி இரண்டு வருடம் தங்கை பணிபுரிந்து அக்காவின் படிப்பு செலவுக்காக பொருளாதார உதவி செய்வது. பின்னர் அக்கா தங்கையின் படிப்புக்காக பொருளாதார உதவி செய்வது. இதன்படி தங்கை வசதி படைத்த ஒரு வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். அயல்நாடுகளில் இப்படிப்பட்டோரை நியமிக்கும் வழக்கம் உண்டு.
அவ்வாறு வீடு வந்து பாடம் கற்பிக்கும் பெண்கள் Governess என்றும், ஆண்கள் Governor என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வாறு தங்கை பணிபுரிந்து அக்காவின் படிப்புக்கு உதவுகிறார். பின்னர் தானும் பயின்று முன்னேறி நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியானார். நீங்களே இப்போது சொல்லிவிடுவீர்கள். ஆம்! மேரி கியூரி (1867 -1934) அவர்கள்தான் இத்தனை பெருமைக்குச் சொந்தக்காரர்.
ஆய்வுக்கூடமானது சரக்கு அறை: மரியா ஸ்க்லவடஸ்கா என்ற இயற்பெயர் கொண்ட மேரி கியூரி போலந்து நாட்டில் வார்சாவில் பிறந்தார். தாயின் இழப்பு, வறுமை போன்ற தடைகளைக் கடந்து சார்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் கணிதமும் கற்றுத் தேர்ந்தார். இதனைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டார். உடன் பயின்ற பியரி கியூரி உடனான நட்பு காதலாகி இணையராகினர்.
அந்நாளில் ஆய்வு செய்யும் அனைவருக்கும் ஆய்வுக்கூடங்கள் எளிதில் கிடைத்துவிடாது. சார்போன் பல்கலைக்கழகத்திலிருந்த கைவிடப்பட்ட சரக்கு அறை ஒன்றை ஆய்வுக்கூடமாக்கி இவர்களது ஆய்வுகளைத் தொடர்ந்தனர்.
ராண்ட்ஜன், பெக்குரல் போன்றோர் வரிசையில் கதிர்களை வெளியிடும் புதிய தனிமங்களைக் கண்டறிவதே இவர்களது ஆய்வின் நோக்கமாக இருந்தது. யுரேனியத்தை அடிப்படையாகக் கொண்ட இவர்களது ஆய்வு அமைந்திருந்தது.
பாறை கரைந்ததா? - யுரேனியத்தின் மூலப்பொருளான பிட்ச் பிளாண்ட் பாறைகளாக இருக்கக் கூடியது. அத்தகைய பாறைகளை உடைத்து கரைத்து கொதிக்க வைக்கவேண்டும். பத்து நிமிடம் தேநீர் தயாரிப்பிற்கே தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டு கொதிக்கிறதா? கொதிக்கிறதா? என்று நாம் பார்ப்போமே. பாறைகள் எப்போது கொதித்து எப்போது புதிய பொருட்களைப் பிரித்தெடுப்பது? இரவு பகலாக இருவரும் கடினமாக உழைத்தனர்.
அவர்களது உழைப்பு வீண் போகவில்லை. யுரேனியத்தைவிட அதிகமாக ஒளி வீசும் தனிமம் ஒன்றைக் கண்டறிந்தனர். தமது சொந்த நாட்டின் பெயர் விளங்குமாறு அத்தனிமத்திற்கு “பொலோனியம்” என்று பெயர் சூட்டினார் மேரி கியூரி.
பின்னர் தமது ஆய்வினைத் மேரிகியூரி தனியாக மேற்கொண்டார். இதன் விளைவாக யுரேனியம், பெலோனியம் இரண்டைவிட அதிகமாக ஒளி வீசும் தனிமத்தைக் கண்டறிந்தார். அதற்கு ரேடியம் என்று பெயரிட்டார்.
பெக்குரல் மற்றும் இவர்கள் இருவருக்கும் முதலாவதாக நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனிடையே பியரி கியூரி ஒரு விபத்தில் மரணமடைந்தார். இருந்தும் துன்பத்திலிருந்து விடுபட்டு சார்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஆனார் மேரி கியூரி. இவரது கடின உழைப்பு வீண் போகவில்லை. மீண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசு இவரைத் தேடி வந்தது.
ஆராய்ச்சியோடு மட்டும் இவர் நிற்கவில்லை. முதல் உலகப் போரில் ஈடுபட்டுக் காயமுற்றோர்க்கு நேரில் சென்றும் தொண்டாற்றினார்.
தொடர்ந்து கதிரியக்கம் தொடர்பான ஆய்வே இவரது வாழ்க்கைக்குப் பாதகம் விளைவித்தது. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 67 வயதிலேயே இயற்கை எய்தினார்.
- கட்டுரையாளர்:பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com