சைபர் புத்தர் சொல்கிறேன் - 30: டிஜிட்டல் போலி அரவணைப்பு

சைபர் புத்தர் சொல்கிறேன் - 30: டிஜிட்டல் போலி அரவணைப்பு
Updated on
1 min read

நாம் சோர்ந்திருக்கும் போது நமக்கு நம்பிக்கை தருவது, அன்பைப் பொழிவது. நம்மைச் சீர்படுத்துவது, நமக்கு நம்பிக்கை தருவது அரவணைப்பு. அப்படி என்றால் போலி அரவணைப்பு? நம்மிடம் ஏதாவது காரியம் சாதித்துக்கொள்ளச் சிலர் போலியாக நம்மை அரவணைப்பது போல் நடித்து நம்மை ஏமாற்றுவது.

இதையே சிலர் ஆன்லைனில் செய்கிறார்கள். குறிப்பாகச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து இதைச் செய்வார்கள். நோக்கம்? பாலியல் ரீதியாகச் சிறுவர் சிறுமியரைப் பயன்படுத்திக் கொள்ள, பணம் பறிக்க, அவர்களின் வேறு இன்பங்களுக்காக.

இன்றைய பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகிறார்கள். அசதி என்று ஓய்வில் இருக்கிறார்கள். வேலை பளு, நிதிநிலை பளு, அவர்களுக்கென சிறிது நேரம், சில பெற்றோர் தொலைப்பேசி, டீவி சீரியல்களில் மூழ்கிப் போய் உள்ளார்கள்.

அதனால் குழந்தைகள் கண்காணிப்பில்லாத தனிமையில் தள்ளப்படுகிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத சிறப்பு வகுப்புகளில் திணிக்கப்படுகிறார்கள். அன்புக்கு ஏங்கி இருக்கும் இது மாதிரியான பிள்ளைகள்தான் சைபர் வெளியில் அதிகம் சிக்கிக் கொள்கிறார்கள்.

தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் இந்த இணைய மோசடி பேர்வழிகள் பின்னர் மெல்ல அச்சிறுவர்களின் நம்பிக்கையை வென்று விடுவார்கள். இதை அவ்வளவு எளிதில் பெற்றோர்களால் கண்டுபிடிக்கவும் முடியாது என்பதுதான் கூடுதல் சிக்கல்.

பிடித்ததைக் காட்டி மயக்குதல்: இத்தகைய டிஜிட்டல் மோசடிகாரர்கள் உளவியல் நுட்பங்களை பயன்படுத்தி, மிக எச்சரிக்கையாகச் சிக்கிவிடாதபடி தமது அடையாளத்தை மறைத்துக் கொள்வார்கள். ஆரம்பக் கட்டத்தில் சிறுவர்களுக்கு பிடித்த பொம்மைகள், விளையாட்டு, இசை தொடர்பான பிரபலங்களுடன் தாங்களும் வேலை செய்வதாகக் காட்டிக் கொள்வார்கள்.

சில சிறப்பு படங்களைப் பகிர்வார்கள். இதில் சிறுவர்கள் மிக எளிதாக ஈர்க்கப்படுவார்கள். அதன் பின் மெல்ல சிறுவர்களைப் பற்றிய தகவலைச் சேகரிப்பார்கள், நம்பிக்கை கொடுப்பார்கள், அரவணைத்து அன்புடன் பேசுவார்கள். அன்புக்கு ஏங்கிப் போன அந்த பிள்ளைகள் இவர்கள் வலையில் வீழ்ந்துவிடுவார்கள்.பின்பு இவர்களின் அந்தரங்க படங்கள், தகவல்கள் எனச் சேகரித்து விடுவார்கள்.

இவர்கள் நம் பிள்ளைகளை மிரட்ட மாட்டார்கள், அன்பு பொங்க அழைப்பார்கள். அப்படி வருபவர்களை இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பல வழக்கு விசாரணையில் தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு இணையத் தொடர்பிருப்பதே பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை என்பது தெரியவருகிறது.

(தொடர்ந்து பேசுவோம்)

- கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்; தொடர்புக்கு: write2vinod11@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in