

ராயல் கழகத்தின் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் கலந்துகொள்வோர் அணிந்து கொள்ளத் தகுதியான ஆடையின் நிறம் குறித்த கட்டுப்பாடு அங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அக்கூட்டத்திற்குச் சிவப்பு நிற கோட்டுடன் வருகிறார். அவரது நண்பர்களை இதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.
என்ன இது சிவப்பு நிறக் கோட்டு அணிந்து வந்துள்ளீர்கள் எனக் கேட்கின்றனர். சிவப்பா இது மரக்கலர்தானே (Brown) என்று சமாளிக்கிறார். பின்னர்தான் தமது கண்களில் வண்ணங்களைப் பிரித்தறியும் குறைபாடு உள்ளது என்று கண்டறிந்து நிறக்குருடு (Color blindness) தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுகின்றார். அந்தப் பிரிவும் அவர் பெயராலேயே அழைக்கப்படவும் செய்கிறது. யார் அவர்? அவர்தான் பிரிட்டிஷ் வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளரான ஜான் டால்டன் (1766-1844).
டியூஷன் எடுத்துப் படித்தவர்: மிகவும் ஏழ்மையான பின்புலத்தில் பிறந்தும் தனது விடாமுயற்சியால் விஞ்ஞானியானவர் ஜான் டால்டன். இவர் இங்கிலாந்தில் உள்ள் கும்பர்லாண்ட் என்ற இடத்துக்கு அருகில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் தமது தந்தையிடமும் பின்னர் உள்ளூர் பள்ளியிலும் பயின்றார். பத்து வயது முதலே தாமே சம்பாதித்துப் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்கு ஆளானார். இருந்தும் விடவில்லை. செல்வந்தர்கள் வீடுகளில் பணி செய்தும், பல மாணவர்களுக்கு தனிவகுப்பு எடுத்தும் சம்பாதித்தார். அதன் மூலம் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
பின்னர் தமது சகோதரர் நடத்தி வந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்தார். பின்னாளில் சட்டமோ, மருத்துவமோ பயிலலாம் என்ற கருத்து வந்த போது, அவர் சார்ந்திருந்த மதப்பிரிவு அவரது கல்விக்குத் தடையானது. அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயில அந்த நாட்களில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரியில் சேராமலேயே தாமாகவே அறிவை மேம்படுத்திக் கொண்டார்.
காலநிலை ஆய்வின் முன்னோடி: இதற்கு ஜான் கோ (John Gough) என்ற பார்வை மாற்றுத் திறனாளர் பெரும் உதவியாக இருந்தார். எல்ஹு ராபின்சன் (Elihu Robinson) என்பவரும் பேருதவி புரிந்தார். இவர்களிருவரிடமும் காலநிலைக் கண்டறிவது தொடர்பான அடிப்படைகளை கற்றறிந்தார். பின்னர் மான்செஸ்டர் சென்று அங்கு ஒரு கல்லூரியில் பயிற்றுவிக்கத் தொடங்கினார். தனது ஆசிரியர்களின் உதவியோடு தான் தயாரித்திருந்த காலநிலை தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்தார்.
இவர் எழுதிய, ‘காலநிலை உற்றுநோக்கல்கள் மற்றும் கட்டுரைகள்’ (Meteorological observations and articles) புத்தகம் வெளிவந்தபோது மக்கள் சிறிதளவு குழப்பமடைந்தனர். ஆனால், அந்த நூல் காலநிலை தொடர்பான மிகச் சிறந்த அறிவியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தது. காலநிலை தொடர்பான அறிவியல் மிகச் சிறந்த எல்லைகளை எட்ட இந்நூல் தொடக்கப்புள்ளியாக உருவெடுத்தது.
தனக்கிருந்த வண்ணங்களைப் பிரித்தறியும் குறைபாட்டை பல நேரம் தமக்குச்சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டார். ஒரு சமயம் அவர் மன்னரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்நாளைய வழக்கப்படிமன்னரை சந்திக்க கருஞ்சிவப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஆடை நிறமாக இருந்தது. ஆனால், இவர் ஒரு சாம்பல் நிற ஆடையினை அணிந்து சென்றுள்ளார். அங்கு பாதுகாவலர்கள் சோதித்தபோது அது கருஞ்சிவப்புதான் என வாதிட்டுள்ளார். ஆமாம், மன்னர் வந்த போது மக்கள் மனு கொடுப்பார்களா? இவரது கோட்டின் நிறத்தைப் பார்ப்பார்களா? அந்த அளவுக்கு இவர் வேடிக்கையான நபராகவும் இருந்துள்ளார்.
“சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்” நம்மூரில் மட்டுமல்ல உலகம் முழுவதும் போலும். இவர் மாணவர்களுக்குத் தனிவகுப்பு எடுக்கும்போது வருடத்திற்கு 10 கினியா அளவுக்கு மதிப்பூதியம் பெற்றுக் கொண்டிருந்தார். அவ்வளவு ஏன் இரவில் கூட சிறிதளவு பணம் பெற்றுக் கொண்டு தனிவகுப்பு எடுத்திருக்கிறார். ஒயாமல் இப்படி உழைப்பதைப் பார்த்து அவரது நண்பர்கள் கேட்டார்களோ என்னவோ, “நான் பணி ஓய்வு பெறுமளவுக்கு பணக்காரானாக ஆகவில்லை” என்றுஒருமுறை வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார். கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். - தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com